‘தக் லைஃப்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு படக்குழுவினர் திரும்பியிருப்பதற்கு காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல், த்ரிஷா, ஜெயம் ரவி, கெளதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’. ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் முடிவுற்றது.
செர்பியாவில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்கு திட்டமிடப்பட்டது. இதற்காக படக்குழுவினர் செர்பியாவுக்குச் சென்று படக்குழுவினர் முன் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு படமாக்க வேண்டிய காட்சிகள் சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு டிக்கெட்களும் போடப்பட்டது.
ஆனால், செர்பியா நாட்டின் படப்பிடிப்புக்கு கமல் வரவே இல்லை. இது பலரும் ஆச்சரியத்தை அளித்தது. இதனை முன்வைத்து 2 நாட்கள் மட்டும் படப்பிடிப்பை முடித்துவிட்டு, சென்னை திரும்பிவிட்டது படக்குழு. மேலும், கமல் இணைந்தவுடன் மீண்டும் செர்பியாவில் படமாக்கவுள்ளனர்.
இதனிடையே, முழுமையாக சேவ் செய்து பிரச்சாரப் பணிகளுக்காக தயாராகியுள்ளார் கமல். ‘தக் லைஃப்’ ப்ரோமோவில் உள்ள கெட்டப்பில் தற்போது கமல் இல்லாததும் பல்வேறு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. இவை அனைத்துக்குமே வரும் நாட்களில் விடை தெரியும் என்று திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.