இணையத்தில் எழுந்த கிண்டல்களுக்கு விஷால் பதிலடி கொடுத்துள்ளார்.
சாப்பிடும் முன்பு விஷால் சாமி கும்பிடும் வீடியோ பதிவு இணையத்தில் கடும் கிண்டலுக்கு ஆளானது. ஒரே சமயத்தில் அனைத்து கடவுளையும் கும்பிடுவது போல அந்த வீடியோ பதிவு இருக்கிறது. பத்திரிகையாளர் சந்திப்பு, ரத்னம் படப்பிடிப்புத் தளம் என வெவ்வேறு சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில் விஷால் ஒரே மாதிரி சாமி கும்பிட்டு இருந்தார்.
இந்தப் பதிவுகளை முன்வைத்து விஷாலை பலரும் கடுமையாக கிண்டல் செய்யத் தொடங்கினார்கள். இது தொடர்பாக தனது விளக்கத்தை தெரிவிக்காமல் இருந்தார் விஷால்
இதனிடையே ‘ரத்னம்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஷால் மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது மாணவர் இந்த வீடியோ பதிவு தொடர்பாக எழுந்த கிண்டலைக் கேள்வியாக எழுப்பினார். அதற்கு விஷால் கூறியதாவது:
”இதனை 10 வருடங்களாக செய்துக் கொண்டிருக்கிறேன். யார் சோறு போட்டாலும், அனைத்து கடவுளும் ஒன்று தான். அல்லா, சாய்பாபா, இயேசு என அனைவரும் ஒன்றும் தான். எனக்கு அது தவறாக தெரியவில்லை. இது தொடர்பாக நிறைய பேர் என்னிடம் கேட்டார்கள்.
எனக்கு இரண்டு தெய்வங்கள் கேமரா தான். கடவுளைப் பார்த்ததில்லை, பார்த்த கடவுள் என்றால் அது கேமரா தான். அது தான் எனக்கு சோறு போடுகிறது. அந்த கேமரா முன்பு அனைத்து தெய்வங்களும் ஒன்று தான். அது தான் எனது நோக்கம்.
எனக்கு இலை போட்டு சோறு போடும் போது, அனைத்து தெய்வங்களையும் வணங்குகிறேன். அது விளம்பரத்திற்காகவோ, அரசியலுக்காகவோ செய்யவில்லை. அனைத்து சாமிகளும் ஒன்று தான். அது வீடியோவாக வெளியே வரும் போது, விளக்கம் ஏன் என விட்டுவிட்டேன்”.
இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.