சினிமா மிகப் பெரும் ஆயுதம் – வால்டர் தயாரிப்பாளர்

தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் 11:11 சார்பில் ஸ்ருதி திலக் தயாரிக்க, அன்பு இயக்கத்தில், சிபிராஜ், ஷிரின் கான்ச்வாலா, சமுத்திரக்கனி, நட்டி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வால்டர்’.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் பிரபு திலக் பேசுகையில்,

“இங்கு நான் நிறைய பேச நினைக்கிறேன். ஒரு தயாரிப்பாளரின் கடமை சினிமாவில் மிகப் பெரியது, மிக முக்கியமானது. கதை கேட்பதில் ஆரம்பித்து அது உருவாகி அதனை கொண்டு சேர்ப்பது வரை, அது பெரும் கடமை. 
ஒரு சினிமாவால் சமூகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்க முடியும். சினிமாவில் சமூகத்திற்காக ஏதாவது நல்லதை சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். தமிழ் சினிமாவில் அந்தக் காலத்திலேயே பெரும் புரட்சி ஏற்படுத்தும் படங்கள் வந்திருக்கிறது. 

சமூகத்தை பாதிக்ககூடிய அல்லது சமூகத்திற்கான தேவையை கொண்டு போய் சேர்ப்பது தான் சினிமாவின் வேலை. இரண்டு சமூக மக்கள் எங்கோ சண்டை போட்டுக் கொண்டதை சினிமாவாக்கி சம்பாதிப்பது சினிமாவின் வேலையல்ல. ஒரு சிறு  திரைக்காட்சி கூட பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். 

ஒரு மிகப்பெரும் ஆயுதம் இந்த சினிமா. அப்படிப்பட்ட சினிமாவில் வேலை செய்யும் வாய்ப்பு தந்த என் அம்மாவிற்கும் மற்ற அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். 

ஒரு கோவிலின் கர்பக்கிரகத்தில் கிடைக்கும் அமைதி எனக்கு சினிமாவில் கிடைக்கிறது. எனது டீமுடன் நிறைய சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் என் குடும்பமாக அவர்கள் என்றென்றும் என்னுடன் இருப்பார்கள். 

‘வால்டர்’ ஒரு கமர்ஷியல் படம். அதிலும் சமூகத்திற்குத் தேவையான ஒரு விசயத்தைப் பற்றி பேசியுள்ளோம். நம் அடுத்த தலைமுறையை குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். இன்று படம் உங்கள் முன் வந்துள்ளது. நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன் நன்றி,” என்றார்.  

இயக்குநர் அன்பு பேசும் போது,

“சிபிராஜ் சாரிடம் இரண்டு கதை சொன்னேன். அவர் இதை தேர்ந்தெடுத்தார். அந்த நாள் முதல் இப்போது வரை இந்தப் படத்தில்தான் பயணம் செய்திருக்கிறேன். இந்தப் படம் அதற்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு அதுவாகவே  முழுமை பெற்றிருக்கிறது. 

படம் நல்லபடியாக வந்துவிட்டது, இனி எல்லாம் உங்கள் கைகளில்.  நீங்கள் தான் ஒரு படத்தை வெற்றிப்படமாக மாற்றக்கூடியவர்கள். ஒரு படத்தை   நீங்கள் தான் மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள். இந்தப் படத்தை நீங்கள் ரசிப்பீர்கள். 

இந்தப்படம் முழுமையாக உருவாகி நிற்க தயாரிப்பாளர் தான் காரணம், அவருக்கு நன்றி. சிபிராஜ் சார் என்னை முழுமையாக நம்பினார், அவருக்கு நன்றி. நட்டி அண்ணன் பெரும் ஆதரவாக இருந்தார். படக்குழுவில் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். படம் உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி,” என்றார்.

சிபிராஜ் பேசுகையில்,

“சினிமாவில் ஒரு நல்ல படம், அதற்குத் தேவையானதை அதுவே தேடிக்கொள்ளும் என்பார்கள். அது எப்படி என்று யோசிப்பேன். ஆனால், இந்தப்படத்தில் அது நடந்தது. ஐந்து வருடமாக உழைத்து, இந்தப் படத்தை பல தயாரிப்பாளர்களிடம் கொண்டு சென்று, பெரும் கஷ்டங்களுக்குப் பிறகு இப்போது இயக்கியுள்ளார் அன்பு. 

இறுதியில் இப்படம் ஒரு நல்ல பொறுப்பான தயாரிப்பாளரிடம் வந்து சேர்ந்துள்ளது. இப்படத்தில் நட்டி நடிக்கிறார் எனும் போதே எனக்கு பயமாக இருந்தது. அவர் மீது எனக்கு பெரும் மரியாதை இருக்கிறது. அப்பாவுடனும் வடிவேல் சாருடனும் நடிக்கும் போது பயமாக இருக்கும். எப்படி இவர்கள் முன் நடிப்பது என்று. அதே மாதிரி தான் நட்டி சார் முன் நடிக்க பயமாக இருந்தது. ஆனால் அவர் மிக ஆதரவாக இருந்தார். 

இந்தப் படம் ஒவ்வொரு கட்டமாக வளர்ந்து இப்போது ஒரு நல்ல நிலையை  வந்தடைந்துள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாகவே படத்தின் சாட்டிலைட் விற்றுவிட்டது.  படத்தின் மீதும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி,” என்றார்.

வால்டர், மார்ச் 13ம் தேதி வெளியாகிறது.
 

Read Previous

இயக்குனர் ஆன நடிகை காவேரி

Read Next

ஆர்யா, சாயிஷா நடிக்கும் ‘டெடி’ – டீசர்

Most Popular