தயாரிப்பு – பிவிபி சினிமாஸ் இயக்கம் – எஸ்.எஸ்.ராஜமௌலி இசை – மரகதமணி ஒளிப்பதிவு – கே.கே.செந்தில்குமார் வசனம் – கிரேசி மோகன் நடிப்பு – சுதீப், நானி, சமந்தா, மற்றும் பலர்.
யானையை வைத்து படம் பார்த்தாயிற்று, நாயை வைத்து படம் பார்த்தாயிற்று, குரங்கை வைத்து படம் பார்த்தாயிற்று, பாம்பை வைத்து படம் பார்த்தாயிற்று, ஆடு, மாடு இவற்றை வைத்தும் படம் பார்த்தாயிற்று, ஆனால் ஈ யை வைத்து ஒரு படமா என இந்த படத்தைப் பற்றிய செய்திகள் வர ஆரம்பித்தவுடனேயே ஒரு ஆர்வம் இயல்பாகவே தொற்றிக் கொண்டது. அது எப்படி ஈ யை வைத்து இரண்டரை மணி நேரம் ஒரு திரைப்படத்தைக் கொடுக்க முடியும் என ஒரு கேள்வியும் எழுந்தது. இதெல்லாம் என்ன ஒரு பெரிய விஷயமா என இயக்குனருக்குத் தோன்றியிருக்கும் போல, அப்படி ஒரு படத்தை அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் கொடுத்திருக்கிறார். திரைப்படம் என்பது ஒரு இயக்குனரின் மீடியம் என்பதை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. அதற்காகவே அவருக்கு ஒரு ராயல் சல்யூட்.
பழி வாங்கும் கதைதான் என்றாலும் , இப்படி ஒரு பழி வாங்கும் கதையா என படம் முடிந்து வந்த பின்னும் இந்த படத்தைப் பற்றி ஒரு அரை மணி நேரமாகவாவது பேச வைத்து விடுவது இயக்குனரின் வெற்றி. எப்படி இது சாத்தியம், இப்படி ஒரு படத்தை எடுக்க முடியுமா, எப்படி இந்த இயக்குனரால் மட்டும் முடிகிறது, என திரையுலகத்தைச் சேர்ந்தவர்களே ஆச்சரியப்படுத்தும் விதத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஈ – யின் பார்வையிலும், ஈ -யை நாம் பார்க்கும் பார்வையிலும் காட்சிகளை இயக்குனர் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அருமையிலும் அருமை. கிராஃபிக்ஸ்தானா இது சொல்லும் அளவிற்கு ஈ சம்பந்தப்பட்ட காட்சிகளை உருவாக்கியவர்களை பெரிதும் பாராட்ட வேண்டும்.
மைக்ரோ ஆர்ட்டிஸ்ட் என்று சொல்லக்கூடிய சிறிய பொருள்களில் கலை நயம் படைக்கும் திறமை கொண்டவர் சமந்தா. ஒரு தொண்டு நிறுவனம் நடத்திக் கொண்டு ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருபவர். இவர் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருக்கும் நானி, சமந்தாவை இரண்டு வருடமாக காதலித்து வருகிறார். உள்ளுக்குள் காதல் இருந்தாலும் அவரை வேண்டுமென்றே உதாசீனப்படுத்தி வரும் சமந்தா ஒரு நல்ல நாளில் நானியிடம் அவருடைய காதலை தெரிவிக்க முயலும் போது, மிகப் பெரும் கோடீஸ்வரரான சுதீப்பால் கொலை செய்யப்படுகிறார். காரணம், சமந்தாவை எப்படியாவது அடைய வேண்டும் என துடிப்பவர்தான் சுதீப். இறந்து போன நானி, ஒரு ஈ -யாக மறு பிறவி எடுத்து அவரது கொலைக்குக் காரணமான சுதீப்பை, காதலி சமந்தாவுடன் சேர்ந்து எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை.
படத்தின் நாயகன் என்று சொல்லக் கூடிய நானி, கொஞ்ச நேரமே வந்தாலும் மௌன ராகம் கார்த்திக் போல் நம் மனதில் இடம் பிடித்து விடுகிறார். சமந்தாவை துரத்தித் துரத்தி காதலித்து அவ்வப்போது ஏமாந்தும் போகிறார். கரன்ட் கட் ஆனால் டிஷ் ஆன்டனாவை எப்படி பயன்படுத்தலாம் என காதலுக்கு ஒரு புது ரூட் போடும் நானியின் கதாபாத்திரம் நன்றாகவே கவர்கிறது. சமந்தாவிடம் இருந்து காதலுக்கு பாசிடிவ்வான செய்தி வரும் நேரத்தில் சுதீப்பால் கொல்லப்பட்டு நம்மை அச்சச்சோ என அழ வைத்து விடுகிறார்.
மைக்ரோ ஆர்ட்டிஸ்ட் கதாபாத்திரம் இது வரை தமிழ் சினிமாவில் பார்க்காத ஒன்று. இப்படி ஒரு கதாபாத்திரமா என நாம் ஆச்சரியப்பட, அதற்கான காரணம் பின்னர் தெரிய வரும் போது இயக்குனரின் கதாபாத்திரங்களை உருவாக்கும் விதம் வியக்க வைக்கிறது. காதலன் நானியை சீண்டிப் பார்க்கும் போதெல்லாம் கலகலப்பாக இருக்கும் சமந்தா, காதலன் இறந்ததும் சோகாத்தில் ஆழ்ந்து விட , பின்னர் காதலன் ஈ – யாக வந்த பின் ஒரு ஹீரோ செய்ய வேண்டிய வேலையை செய்து கொஞ்சம் ஆக்ஷன் ஹீரோயினாகவே மாறிவிடுகிறார். சமந்தா, சமர்த்தாக நடித்திருக்கிறார்.
படத்தின் முக்கியமான கதாபாத்திரம் சுதீப். கன்னடத்தின் முன்னணி ஹீரோவான சுதீப், தமிழில் நடித்திருக்கும் முதல் படம். ஒரு அமர்க்களமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பொதுவாக ஒரு ஹீரோ என்றாலே, ஒரு தாதாவையோ, அல்லது ஊர் பெரிய மனிதரையோ எதிர்த்துதான் போராடுவார்கள். இந்த படத்தில் சுதீப் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரம் ஒரு வில்லத்தனமான கதாபாத்திரம் என்றாலும், ஏறக்குறைய படத்தின் ஹீரோவே இவர்தான். இவர் எதிர்த்து போராடுவது ஒரு தாதாவையோ அல்லது ஊர் பெரிய மனிதரையோ அல்ல, ஒரு ஈயை எதிர்த்து போராடுகிறார். அதுவும் கொஞ்ச நஞ்ச போராட்டம் அல்ல, மிகப் பெரிய போராட்டம். எவ்வளவுதான் பணம் இருந்தாலும், அடியாட்கள் இருந்தாலும் ஒரு ஈயை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாமல் அவர் தவிக்கும் தவிப்பு , அட்டகாசத்திலும் அட்டகாசம். இனி தமிழ் இயக்குனர்கள் சுதீிப்பை ஈயை போல மொய்த்து விடுவார்கள் என்பது உண்மை. வாழ்த்துக்கள் மிஸ்டர் சுதீப்.
சந்தானம் ஒரு காட்சியில் வந்தாலும் படம் முடிந்து டைட்டில் போடும் போது சில காட்சிகளில் மீண்டும் வருகிறார். மிஸ் பண்ணி விடாதீர்கள். சமந்தாவின் அண்ணியாக தேவதர்ஷினி, சுதீப்பின் பிசினஸ் பார்ட்னராக ஆதித்யா நடித்திருக்கிறார்கள்.
மரதகதமணியின் பின்னணி இசையும், கே.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவும், மகுடா -வின் கிராஃபிக்ஸ் காட்சிகளும் படத்திற்கு மிகப் பெரிய பக்கபலம்.
இனி, ஒரு ஈ,எறும்பை கூட நாம் மிதிப்போமோ என யோசிக்க வைக்கும் அளவிற்கு ஒரு படத்தை ரசிக்க வைத்தது , இயக்குனருக்கு கிடைத்த வெற்றி.