தயாரிப்பு – மான்டேஜ் மீடியா புரொடக்ஷன்
இயக்கம் – கமல கண்ணன்
திரைக்கதை – ஐயப்பன்
இசை – வேத்ஷங்கர் சுகவனம்
ஒளிப்பதிவு – சுமீ.பாஸ்கரன்
படத்தொகுப்பு – மென்டோஸ் அந்தோணி
பாடல்கள் – என்.டி.ராஜ்குமார்
நடிப்பு – கார்த்தி வேல், தியானா,என்.டி.ராஜ்குமார், அரவிந்த அண்ணாமலை, ராமு, ரவி மற்றும் பலர்.
டிஜிட்டல் ஒளிப்பதிவு தொழில் நுட்பம் வந்த பிறகு, திரைப்பட ஆர்வம் உடைய பலரும் திரைப்படங்களை எடுக்க முயற்சிப்பது ஆரோக்கியமான விஷயமே. தொலைக்காட்சிகளில் இடம் பெறும் குறும்பட போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வமும் இந்த தொழில்நுட்ப மாற்றத்தால் பலரிடமும் காணப்படுகிறது. குறைந்த செலவில் நிறைவான படங்களையும் சிலர் எடுத்து யார் இவர்கள் என ஆச்சரியப்பட வைக்கிறார்கள்.
இந்த படத்தைப் பொறுத்தவரையில் இயக்குனர் கமல கண்ணன் யாரும் தொடாத ஒரு கதைக்களத்தை கையாண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். மதுபானக் கடை என்று பெயர் வைத்து விட்டு வேறு எதையோ காட்டாமல் அந்த கடையை மட்டுமே வைத்து எப்படி ரசிகர்களை ரசிக்க வைக்க முடியும் என்பதை தெளிவாகவே புரிந்து வைத்திருக்கிறார்.
காதலர்களின் காதல் காட்சிகளைக் கூட கற்பனையாக வெளிநாட்டில் பாடல்களை பாடி காதலிக்க வைக்காமல், அந்த கடையின் சந்துக்குள்ளேயே வைத்திருப்பதை பார்க்கும் போது இயக்குனருக்கு சினிமா மீது உள்ள காதல் புரிகிறது.
இதை வெறும் படமாக மட்டும் சொல்லாமல், ஆங்காங்கே முற்போக்கான சிந்தனைகளையும் வைக்கத் தவறவில்லை இயக்குனர். படம் முடியும் போது, அதை ஆணித்தரமாகவும் சொல்லியிருக்கிறார். அதே சமயம், சர்ச்சைக்குரிய சில காட்சிகளையும் வைத்திருக்கிறார்.
ஒரு மதுபானக் கடையில் நடக்கும் ஒரு நாள் நிகழ்வுதான் படத்தின் கதை. அங்கு வந்து செல்லும் வித விதமான மனிதர்களின் குணங்களையும், அவர்கள் குடிப்பதற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அந்த மதுபானக் கடையில் வேலை செய்யும் கார்த்தி வேல், மதுபானக் கடை – பாரின் முதலாளி ரவியின் மகள் தியானாவை காதலிக்கிறார். இந்த காதல் வேண்டாமென கார்த்தியிடம் மற்றொரு ஊழியரான அரவிந்த அண்ணாமலை சொல்கிறார். ஆனால் அதையும் மீறி கார்த்தியும் தியானாவும் காதலிக்கிறார்கள். மதுபானக் கடைக்கு தினமும் வந்து செல்லும் பெட்டிசன் மணி – என்.டி.ராஜ்குமார், அடுத்தவர்களை எப்படியாவது சரக்கு வாங்கி கொடுக்கச் செய்யும் ராமு, படித்தவர் போல (?) பேன்ட் , சட்டை , டக் இன் செய்து, டீசன்டாக பிச்சை கேட்டு குடிக்கும் ஒருவர், இப்படி ஒரு சில கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு காட்சிகளாகவே நகர்த்தியிருக்கிறார்கள்.
படத்தின் ஆரம்பத்திலேயே இந்த படத்தில் கதை என்ற ஒன்றை கண்டு பிடித்தால் அது உங்கள் கற்பனையே என கார்டு போட்டு விட்டதால், கதை என்ன என்று எழுதி நம் கற்பனை குதிரையை இதற்கு மேல் ஓட்ட விரும்பவில்லை.
படத்தில் நடித்துள்ள அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களாகவே தெரிகிறார்கள். படத்தின் முடிவில் என்ட் கார்டு போடும் போது, அவர்களின் உண்மையான உருவத்தை இயல்பாக எப்படி மாற்றியிருக்கிறார்கள் என்பது, நடிப்பின் மீது அவர்களுக்குள்ள காதலை வெளிப்படுத்துகிறது.
யாரிடமும் எந்த சினிமாத்தனமும், இப்படித்தான் நடிக்க வேண்டும் என்ற நாடகத்தன்மையும் இல்லாமல் இருப்பது பாராட்ட வேண்டிய விஷயம். யதார்த்தமான சினிமாவை நேசிக்கும் இவர்களால், தமிழ் சினிமாவில் மாற்று சினிமா என்பது நிச்சயம் வளரும்.
ஒளிப்பதிவாளர் சுமீ.பாஸ்கரன், இசையமைப்பாளர் வேத் ஷங்கர் இருவரின் உழைப்பும் படத்தில் தெரிகிறது.
குடியை வைத்தே, குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.