வெளியீடு – ஸ்டுடியோ க்ரீன் – கே.ஈ.ஞானவேல் தயாரிப்பு – திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் – சி.வி.குமார் இயக்கம் – பா. ரஞ்சித் இசை – சந்தோஷ் நாராயணன் பாடல்கள் – கபிலன், முத்தமிழ், கானா பாலா ஒளிப்பதிவு – பி.கே.வர்மா படத்தொகுப்பு – லியோ ஜான் பால் கலை – டி.ராமலிங்கம் நடனம் – அஜய் ராஜ் நடிப்பு – தினேஷ், நந்திதா, வேலு, மீனாட்சி, ஐஸ்வர்யா, ஷாலு, சோபி மற்றும் பலர்.
திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் பொதுவாக கதை என்பது, காதல் கதையாகவோ, குடும்பக் கதையாகவோ, சஸ்பென்ஸ் கதையாகவோகத்தான் அதிகம் அமையும். அந்த கதைக்கான பின்னணி, அதாவது கதை நடக்கும் களம் என்பதும் ஒரு படத்தின் வெற்றிக்கும் மிகவும் முக்கியமானது. பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்களை நகரத்துப் பின்னணி என்றால் சென்னை சார்ந்ததாகவோ, கிராமத்துப் பின்னணி என்றால் மதுரை சார்ந்ததாகவோகத்தான் வைத்து எடுப்பார்கள். புறநகர் பகுதிகளோ, அல்லது வேறு எந்த பகுதிகளை வைத்தோ எடுப்பது மிகவும் குறைவாகத்தான் இருக்கும்.
இந்த படத்தில் முதல் முறையாக (?) சென்னை புறநகரை வைத்து ஒரு சுவாரசியமான காதல் கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். யதார்த்தமான சினிமா என தாராளமாகச் சொல்லலாம். காதலி பார்த்தவுடன் காதலன் கனவில் வெளிநாட்டில் பாடும் பாடல் காட்சியோ, இல்லை அட்டகாசமான அரங்குக்குள் பாடல் காட்சியோ இல்லாமல், எந்த காம்ப்ரமைஸுக்கும் இடம் கொடுக்காமல் நடை முறையில் என்ன நடக்கிறதோ, என்ன இருக்கிறதோ அதை உள்ளது உள்ளபடி கொடுத்த இயக்குனரை பாராட்டலாம்.
தினேஷ் 12ம் வகுப்பு பெயிலாகி விட்டு, நண்பர்களுடன் ஜாலியாக டுடோரியல் காலேஜ் சென்று படித்து வருபவர். டுடோரியல் காலேஜ் என்றால் கௌரவ குறைவு என்பதால் பி.ஏ.படிப்பதாக வெளியில் சொல்லிக் கொள்பவர். இவரும் இவருடைய நண்பர்களும் சேர்ந்து, திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் அது காதல் திருமணமாக மட்டும்தான் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். தினசரி அவரது ஊரில் இருந்து பேருந்தில் வேறு ஊருக்கு வந்து படித்து விட்டுச் செல்கிறார் தினேஷ். பள்ளியில் படிக்கும் நந்திதாவை பார்த்ததும் காதல் கொண்டு அவரிடம் காதலைச் சொல்ல முடிவெடுக்கிறார். சில துரத்தல்களுக்குப் பின் நந்திதாவிடம் தினேஷ் தைரியமாக காதலைச் சொல்ல, அவரோ தினேஷை அண்ணா…..என அழைத்து அதிர்ச்சி கொடுக்கிறார்.
இருந்தாலும் தன் முயற்சியில் சிறிதும் தளராத விக்ரமாதித்தன் போல, ஐஸ்வர்யா, ஷாலு, சோபி என சில பெண்களை தொடர்ச்சியாக காதலித்து , காதலில் மீண்டும், மீண்டும் தோற்றுப் போகிறார். இனி எந்த பெண்ணையும் காதலிக்கவே கூடாதென முடிவெடுக்கிறார்.12ம் வகுப்பு பாஸ் செய்து விட்டு கல்லூரியில் வந்து சேர்கிறார். (2 வருடங்கள் கழித்து என கார்டு போட்டு விடுவதால் 3ம் ஆண்டில்தான் கல்லூரி வாழ்க்கையை காட்டத் துவங்குகிறார்கள்). அதே கல்லூரிக்கு தினேஷால் முதலில் காதலிக்கப்பட்ட நந்திதா வந்து சேருகிறார் . இவரின் பார்வை தினேஷை மீண்டும் தடுமாற வைக்க காதலிக்கவே கூடாதென்ற முடிவை தினேஷ், மறுபரிசீலனை செய்கிறார். இந்த காதலாவது தினேஷுக்கு வெற்றிகரமாக அமைகிறதா என்பதுதான் படத்தின் மீதி கதை.
கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமான நட்சத்திரத் தேர்வை மிகச் சரியாக செய்திருக்கிறார் இயக்குனர். முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைவருமே புதுமுகங்கள்தான்.
தீனா என்கிற தினகரனாக தினேஷ். இவரை புதுமுகம் என்று சொன்னால் நம்ப முடியாது, அந்த அளவிற்கு நடிப்பில் அசத்தியிருக்கிறார். நொடிக்கொரு தரம் முகபாவத்தை மாற்றி நடிப்பில் வெளுத்துக்கட்டியிருக்கிறார். அந்த வயதில் இளைஞர்கள் எப்படியிருப்பார்களோ அதை அப்படியே கண் முன் நிறுத்தியிருக்கிறார். நகைச்சுவை கலந்த நாயகன் கதாபாத்திரத்திற்கு நடிக்கத் தெரிந்த ஒரு புதுமுகம் ரெடி. கலக்கிட்டீங்க தினேஷ்.
நந்திதா, பேருந்தில் தினமும் நாம் பார்த்துப் பழகிய முகம் போலவே இருக்கிறார். நாயகனை ஓரக்கண்ணால் பார்க்க ஆரம்பிக்கும் இவருடைய காதல் , தொடர்ச்சியான காட்சிகளில் அந்த பார்வையை அதிகம் ரசிக்க வைக்கிறது. இப்படி ஒரு சராசரியான முகத் தோற்றம் கொண்ட இயல்பான கதாநாயகிகள் தமிழ் சினிமாவில் குறைவு என்பதை இவர் வரவு மூலம் தீர்த்துக் கொள்ளலாம். பூரணி, பூரணி, என தினேஷால் காதலுடன் அழைக்கப்படுபவர் கடைசியில் தினேஷ் முகத்தில் கரியை பூசிவிடுகிறார். எதிர்பாராத அதிர்ச்சியான முடிவு. வாழ்த்துக்கள் பூரணி, சாரி…நந்திதா.
படத்தில் நாயகனே அவருடைய நடவடிக்கைகளில் அதிக நகைச்சுவையையும் சேர்த்து செய்து விடுவதால் படத்தில் தனியான நகைச்சுவைக் காட்சிகள் என்று எதுவும் இல்லை. இருந்தாலும் நாயகனின் குடிகார அப்பாவாக வரும் வேலு, பல காட்சிகளில் கைதட்டல்களை வாங்கி விடுகிறார். நாயகனின் அம்மாவாக மீனாட்சி , சராசரி அம்மாவை யதார்த்தமாக காட்டி விடுகிறார்.
தினேஷ் ஒரு தலையாய் காதலிக்கும் பெண்களாக ஐஸ்வர்யா, ஷாலு, சோபி. பொருத்தமான தேர்வு. தினேஷின் நண்பர்களாக ஹரி, மகேந்திரன், தில்சா, பிரபஞ்சன், மனோ, குறிப்பிடும்படியான நடிப்பு.
சந்தோஷ் நாராயணன் இசையில் , ஆடி போனா ஆவணி…அடிக்கடி கேட்க வைக்கிறது. கதையை மீறிய ஒளிப்பதிவாக இல்லாமல் கதாபாத்திரங்களுடன் நாமும் பயணிக்கும் விதத்தில் அமைந்துள்ளது பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவு.
இடைவேளை வரை அதிகமாக வரும் பேருந்து காட்சிகளும், வேறு எந்த திடீர் திருப்பங்களும் இல்லாததும் மட்டுமே கொஞ்சம் குறையாகத் தெரிகிறது. 90களில் காதலித்தவர்களுக்கு அதிகமாகப் பிடிக்கும், இப்போது காதலிப்பவர்களுக்கு அதைவிட அதிகமாகப் பிடிக்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்..