தயாரிப்பு – விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் – பாத்திமா விஜய் ஆண்டனி கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் – ஜீவா சங்கர் இசை – விஜய் ஆண்டனி பாடல்கள் – ப்ரியன், அண்ணாமலை, அஸ்மின் வசனம் – நீலன் கே. சேகர், ஜீவா சங்கர் படத்தொகுப்பு – சூர்யா கலை – விதேஷ் நடனம் – ஷோபி சண்டை – ராஜசேகர் நடிப்பு – விஜய் ஆண்டனி, சித்தார்த், ரூபா மஞ்சரி, அனுயா, விபா, மற்றும் பலர்.
தமிழ் சினிமாவில் த்ரில்லர் வகை கதைகளை அதிகம் பார்க்க முடியாது. வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்கள் வந்தாலே அதிகம். அவற்றிலும் ஒரு சில படங்கள்தான் சூப்பர் ஹிட் வகையில் அமைந்தவை. ஏனோ, இயக்குனர்களும் த்ரில்லர் கதைகளை அதிகம் விரும்பி படமாக்குவதில்லை. அதுவும், சமீப காலமாக வெறும் காதல் படங்களை தமிழ்த் திரையுலகை ஆக்கிரமித்து வந்துள்ள சூழ்நிலையில் இயக்குனர் ஜீவா சங்கர் துணிச்சலாக ஒரு த்ரில்லர் கதையை எடுத்துக் கொண்டு இந்த ‘நான்’ படத்தைக் கொடுத்திருக்கிறார்.
இயக்குனர்கள் சிலர் நடிகர்களாக மாறியிருக்கிறார்கள், ஒளிப்பதிவாளர்கள் சிலர் நடிகர்களாக மாறியிருக்கிறார்கள். ஆனால் இசையமைப்பாளர்கள் நடிகர்களாக மாறுவது அபூர்வமான ஒன்று. இரட்டை இசையமைப்பாளர்களான சங்கர் – கணேஷ் இருவரில் கணேஷ் மட்டும் 70களின் இறுதியில் சில படங்களில் நாயகனாக நடித்தார். அதோடு, ஏறக்குறைய 40 வருடங்கள் கழித்து தற்போது வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி துணிச்சலாக ஒரு படத்தைத் தயாரித்து, நடிகராகவும் அறிமுகமாகி, ஒரு திறமையான இயக்குனரையும் அறிமுகப்படுத்துவது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
சிறுவனாக இருக்கும் போது, அம்மா செய்த மிகப் பெரிய தவறைப் பார்க்கும் விஜய் ஆண்டனி, அப்பாவின் தற்கொலையால் மனமுடைந்து, அம்மாவை உயிருடன் வீட்டோடு எரித்து விடுகிறார். சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் படித்து வளரும் விஜய் ஆண்டனி, பின்னர் சென்னைக்கு புறப்படுகிறார். சென்னைக்குச் செல்லும் வழியில் பேருந்து விபத்தில் சிக்க, பக்கத்து சீட்டில் பயணமான ஒருவர் இறந்து விட, அவருடைய உடமைகளை எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்து சேர்கிறார். விபத்தில் பலியான பயணியின் பெயர் சலீம். நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ள சலீமின் சான்றிதழ்களை வைத்துக் கொண்டு மாறாட்டம் செய்து சலீம் ஆக மாறுகிறார் கார்த்திக்கான விஜய் ஆண்டனி. மருத்துவக் கல்லூரியல் சேரும் விஜய் ஆண்டனிக்கு, பணக்காரரான சித்தார்த்தின் நட்பு கிடைக்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் விஜய் ஆண்டனியில் ஆள் மாறாட்டம் பற்றி சித்தார்த்துக்குத் தெரிய வர, அதனால் நடக்கும் சண்டையில் விஜய்யால் கீழே தள்ளப்பட்ட சித்தார்த் இறந்து விடுகிறார். இதன் பின் விஜய்யே, சித்தார்த்தாகவும் நாடகமாடுகிறார். அதற்கு சிறுவயதில் இருந்தே அவருக்கு வரும் மிமிக்ரி உதவுகிறது. பிறகு….ஸாரி, ஒரு த்ரில்லர் படத்தின் முழு கதையையும் சொல்லிவிட்டால் படம் பார்க்கும் போது அதன் சுவாரசியம் போய்விடும். மீதிக் கதையை வெள்ளித் திரையில் காண்க.
திரைக்குப் பின்னால் இருந்து திரைக்கு முன்னால் வந்திருக்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. அவருடைய தோற்றத்திற்கு ஏற்ற கதாபாத்திரத்தை தேர்வு செய்ததிலேயே பாதி வெற்றி பெற்று விட்டார். மீதி வெற்றியும் அவருடைய நடிப்பில் கிடைத்து விட்டது. எப்போதும் எதையோ பறி கொடுத்த உணர்விலேயே இருப்பது அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக அமைந்து விட்டது. சோகம், கோபம், ஆவேசம், பாசம் என அசத்தினாலும் படத்தில் அவருக்கென்று எந்த காதலையும் இயக்குனர் வைக்காமல் விட்டு விட்டார். அடுத்த படத்தில் பார்ப்போம், காதலிலும் அசத்துவாரா என்று ?
இரண்டாவது கதாநாயகனாக சித்தார்த். இன்றைய சென்னை வாழ் பணக்கார இளைஞரை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார். கல்லூரியில் அவரை விட சீனியரான விபாவை அவர் வலையில் விழ வைக்கும் காட்சிகள்….சரியான ரோமியோத்தனம்.
படத்தின் கதாநாயகியாக ரூபா மஞ்சரி. சித்தார்த்தை காதலித்து ஏங்கும் சராசரி பெண். கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார். பல காட்சிகளில் மேக்கப் ஓவராக இருக்கிறது.
அனுயா சில காட்சிகளில் மட்டுமே வருகிறார்.
விஜய் ஆண்டனி, சொந்த படம் என்பதால் பின்னணி இசையில் கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது. மக்கயலா….பாடல் டிபிக்கல் விஜய் ஆண்டனி ஹிட். தப்பெல்லாம் தப்பே இல்லை….வித்தியாசமான குரலில் வசீகரிக்கிறது.
பெரும்பாலான காட்சிகள் வீட்டுக்குள் நகர்ந்தாலும் அழகான ஒளியமைப்பு மூலம் அந்த காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கர். சொல்ல வந்த விஷயத்தை தெளிவாகவும், தேவையற்ற காட்சிகள் எதுவும் இல்லாமலும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜீவா சங்கர்.
ஆனாலும் சில காட்சிகளில் கேள்விகள் எழாமல் இல்லை. படத்தின் வேகத்தை கொஞ்சம் அதிகப்படுத்தியிருக்கலாம் படத்தொகுப்பாளர். இறுதியில் படம் திடீரென முடிந்து விட்டதோ என்ற உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ செய்வதை நியாயப்படுத்துவதை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள் ?
இருந்தாலும் , இயக்குனருக்கும் ஹீரோவுக்கும் முதல் படம் என்பதால் சில குறைகளை மறந்து விட்டு, இந்த ‘நான்’ படத்தை ‘நாம்’ தாராளமாக ரசிக்கலாம்.