பசங்க, வம்சம், மெரீனா, படங்களைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் படம் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் பி.மதன் வழங்க பசங்க புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.
ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை இருக்கும், அதை பிறரிடம் வெளிப்படுத்திக் கவர நினைப்பார்கள். தங்கள் எதிர்காலம் பற்றிய கனவு நிறைவேற , கேடித்தனமாகவும், கில்லாடித்தனமாகவும் நான்கு இளம் வயதினரின் நகைச்சுவை கதைதான் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’. விமல், சிவகார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா, சூரி, சுஜாதா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இது திருச்சி மண்ணை கதைத் தளமாகக் கொண்டது. மலைக்கோட்டை, காவிரி ஆறு என்று இதுவரை காட்டப்பட்ட திருச்சி இதில் இருக்காது. பொன்மலை, பொன்மலைப்பட்டி, நகரியம் போன்ற பகுதிகளில்தான் கதை பயணிக்கிறது.
திருச்சி இளைஞர்களின் கனவுகள், ஏக்கங்கள், கொள்கை, வாழ்க்கை முறை, பயணம் பாதை எப்படி இருக்கும் ? அவர்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை எப்படி இருப்பார்கள் ? மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை எப்படி இருப்பார்கள் ? என சொல்லப்படுவது சுவையான நகைச்சுவை காட்சிகளாக இருக்கும்.
படம் பற்றி பாண்டிராஜ் கூறும் போது, “ நான் முன்பு இயக்கிய மூன்று படங்களிலிருந்து இது முற்றிலும் வேறுபட்ட படம், மாறுபட்ட பாணி. இது சொல்லாத கதையல்ல, பழக்கப்பட்ட பழைய கதைதான், பக்கத்து வீட்டு கதைதான், ஆனால் சொல்லும் விதத்தில் நிச்சயம் நெஞ்சை அள்ளும் விதமாக இருக்கும். எவ்வளவு சீரியசான விஷயத்தையும் இவ்வளவு நகைச்சுவையாக சொல்ல முடியுமா ? என்று பேச வைக்கும்.
அப்பா , அம்மா உடனிருந்து போதிக்கும் போது புரியாது. அவர்களைப் பிரிந்த பின் வலிகள் பாதிக்கும் போது புரியும். அதன் பின்தான் அவர்களது அருமை தெரியும். அப்போது வருத்தத்தில் வயிறு எரியும். இப்படம் பார்த்தபின் ஒவ்வொருவருக்கும், அப்பா, அம்மா மீது மதிப்பு கூடும்,” என்கிறார்.
இப்படத்தில் 2 கதாநாயகர்கள், 2 கதாநாயகிகள், 2 அப்பாக்கள், 2 அம்மாக்கள், 2 அண்ணன்கள், 2 தம்பிகள் என்று எல்லாமே இரண்டு என்று இருந்தாலும் வெற்றி ஒன்றையே குறி வைத்து உழைத்து வருகிறார் இயக்குனர் பாண்டிராஜ்.
படத்துக்குப் படம் புது இசையமைப்பாளருடன் இணையும் பாண்டிராஜ் இந்த படத்தில் யுவன்ஷங்கர் ராஜாவுடன் இணைகிறார். மெரீனா படத்தைத் தொடர்ந்து விஜய் இந்த படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்கள் – நா.முத்துக்குமார், யுகபாரதி, கலை – ராஜீவன், படத்தொகுப்பு – அத்தியப்பன் சிவா, நடனம் – தினேஷ், எழுத்து, இயக்கம் – பாண்டிராஜ்.
திருச்சியைச் சேர்ந்த 200 பேரை இதில் நடிக்க வைத்துள்ள இயக்குனர், ஓரிரு படங்களில் நடித்து விட்டு ஊர்ப்பக்கம் போய் விட்ட சில நடிகர்களைத் தேடிப்பிடித்தும் நடிக்க வைத்திருக்கிறார். முந்தைய மூன்று படங்களை விட பட்ஜெட் பெரிது, கதைக்களம் புதிது, உழைப்பும் அதிகம், பொறுப்பும் கூடுதல், என்கிறார் இயக்குனர்.
படப்பிடிப்பு தொடங்கப்பட்டு ஒரே கட்டமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.