கடந்த சில நாட்களாகவே விஜய், அஜித் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பார்களா என்பது கோடம்பாக்கத்தில் பரவி வரும் ஒரு செய்தியாக இருக்கிறது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்யிடம் இயக்குனர் விஜய், ‘நீங்களும் அஜித்தும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பீர்களா,’ என்று கேட்டதற்கு பதிலளித்த விஜய்,“ அது கதை மற்றும் இயக்குனரைப் பொறுத்தது. எங்கள் இருவருக்கும் பொருத்தமான கதையும், கதாபாத்திரமும் இருந்தால், அஜித்துடன் இணைந்து நடிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை,” என விஜய் பதிலளித்தார்.
இயக்குனர் விஜய், அஜித் நடித்த ‘கிரீடம்’ படத்தில்தான் இயக்குனராக அறிமுகமானார். இப்போது விஜய் நடிக்கும் ‘தலைவா’ படத்தை இயக்கி வருகிறார்.
விஜய், அஜித் இருவரும் இணைந்து நடித்த ஒரே படமான ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படம் 1995ம் ஆண்டு வெளிவந்தது. அதன் பின் இருவரும் தமிழ்த் திரையுலகின் பெரிய நட்சத்திரங்களாக வளர்ந்து விட்டார்கள்.
அதனால்தான் , விஜய் & விஜய் அவர்கள் படத்திற்கு அஜித்தை அழைக்கும் விதமாக ‘‘தலை’வா” என சிம்பாலிக்காக பெயர் வைத்திருக்கிறார்களோ ?