ஹிந்தியில் சூப்பர் ஹிட்டாகவும் அனைவரது பாராட்டையும் பெற்ற படம் ‘கஹானி’.
இந்த படத்தில் ஹீரோயினாக நடித்தவர் வித்யா பாலன். அவருக்கு பல விருதுகளை இந்தப் படம் பெற்றுத் தந்தது. ஒரு கர்ப்பிணிப் பெண் காணாமல் போன அவருடைய கணவரை தேடுவதுதான் படத்தின் கதை. இதில் கர்ப்பிணிப் பெண் கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினார் வித்யா பாலன்.
இந்த படத்தை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யவிருக்கிறார் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா. ஆனால், வித்யா பாலன் நடித்த பாத்திரத்தில் நடிக்க பொருத்தமான நடிகை அவருக்கு கிடைக்காமல் இருந்தது.
இப்போது, நயன்தாரா அந்த கதாபாத்திரத்தில் நடிக்கலாம் எனத் தெரிகிறது. அது சம்பந்தமான பேச்சு வார்த்தை முடிந்து விட்டதாகவும், இன்னும் ஒப்பந்தம் மட்டுமே போட வேண்டும் என்றும் தெரிகிறது.
கிளாமரான கதாபாத்திரங்களில் நடித்தாலும், அவ்வப்போது நல்ல கதாபாத்திரங்களிலும் நடித்து வருபவர் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் அவருடைய நடிப்புக்கும் ஒரு சவாலாக இருக்கும் என்பது உண்மை. விரைவில் முறையான அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது.