விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தற்காலிகமாக 15 நாள் தடை விதித்துள்ள நிலையில் அந்த தடையை எதிர்த்து பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
திரையுலகினர் மட்டுமல்லாது, சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் பலரும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.
கமல்ஹாசன் , விஸ்வரூபம் படத்தை ஹாலிவுட்டில் திரையிடல் சம்பந்தமாக அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார்.
இந்த தடை குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு –
“எனக்கும் என் படத்திற்கும் கிடைக்கும் ஆதரவு மகிழ்ச்சியைக் குடுக்கும் வேளையில், என் படம் என் இஸ்லாமிய நண்பர்களுக்கு விரோதமானது என்ற பிரச்சாரத்தை பரப்புவது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
இஸ்லாமிய சமூகத்திற்கு ஆதரவாய் நான் கூறிய பல கருத்துக்கள் என்னை ஒரு இஸ்லாமியர்களுக்கு நெருக்கமானவனாகவே ஆக்கியிருக்கின்றன. ஒரு நடிகன் என்ற நிலையைத் தாண்டி நான் எப்போதுவே மனிதாபிமானத்திற்கும், நியாயத்திற்கும் ஆதரவாய் குரல் குடுத்து வருகிறேன்.
இந்து, முஸ்லிம் நல்லிணக்கத்திற்கான ஹார்மோனி இந்தியா என்ற அமைப்பில் என்னை இனைத்துக் கொண்டு பணியாற்றி வருகிறேன்.
ஒருசமுதாயத்தை தவறாய் சித்திரிக்கிறேன் என்ற குற்றச்சாட்டு என்னை வேதனைப்படுத்துவதோடு, எனது நல்லெண்ணத்தையும் அவமானப்படுத்துவதாய் இருக்கிறது.
அரசியல் ஆதாயம் தேடும் சிறு கூட்டங்கள் , அதற்கான வாகனமாய் என்னை அநியாயமாய் உபயோகப்படுத்தி வருகின்றனர். பிரபலம் இல்லாத கூட்டத்தினர் பிரபலங்களை தாக்கி அதன் மூலம் பிரபலமாக முயலும் உத்திதான் இது. மீண்டும் மீண்டும் இது நடந்து வருகிறது.
நியாயமான, தேசப்பற்றுள்ள ஒவ்வொரு இஸ்லாமியரும் இந்தப் படத்தைப் பார்த்து நிச்சயம் பெருமைப்படுவார்கள். அதற்காகவே எடுக்கப்பட்ட படம் தான் இது.
இப்போது சட்டத்தின், நியாயத்தின் ஆதரவைக் கோருகிறேன். கலாச்சாரம் என்ற பெயரில் , இது போன்ற சமுதாய தீவீரவாதம் உடனடியாய் நிறுத்தப்படவேண்டும்.
இணையதளத்தில் எனக்கு ஆதரவாய் முன்னின்று குரல் கொடுப்பவர்களுக்கு என் நன்றிகள்,” என தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனுக்கு ஆதரவாய் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமுதாய வலைத்தளங்களில் திரையுலகினர் பலரும் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் பற்றி பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் கமல்ஹாசன் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது இன்று மதியம் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது