மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘கடல்’ படத்தை பார்த்தவர்களுக்கு ‘நெஞ்சுக்குள்ளே’ பெரிய ஏமாற்றமே வந்தது.
ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் வைரமுத்து எழுதி சக்திஸ்ரீ கோபாலன் பாடிய சூப்பர் ஹிட் பாடலான ‘நெஞ்சுக்குள்ளே…’ பாடல் படத்தில் இடம் பெற்ற விதம் அதிகமான ஏமாற்றத்தைத் தந்தது.
எம் டிவியில் ஒற்றைப் பாடலாக வெளியிடப்பட்டு எஃப்.எம். ஸ்டேஷன்களிலும், சிடி வடிவிலும் அனைவரின் மனதிலும் பட வெளியீட்டுக்கு முன்பே இந்த ஆண்டின் ஈடு இணையற்ற சூப்பர் ஹிட் பாடலாக இடம் பெற்றது.
ஆனால், படத்தில் கௌதம் – துளசி காதல் வசனம் பேசிக் கொண்டிருக்க, பின்னணியில் மட்டுமே ‘நெஞ்சுக்குள்ளே…’ ஒலித்தது இசை ரசிகர்களின் நெஞ்சத்தை அதிர்ச்சியடைய வைத்து விட்டது. ஏதேதோ, எதிர்பாரப்புகளுடன் திரையரங்குகளுக்கு வந்த ரசிகர்களுக்கு அந்த பாடலை திரையில் பார்த்த போது கிடைத்தது ஏமாற்றமே.
இந்த பாடல் ‘அர்ஜுன் – லட்சுமி மஞ்சு’ இடையிலான காதல் பாடலாக இருந்ததாகவும், இவர்களை வைத்துதான் இயக்குனர் மணிரத்னம் படமாக்கியிருந்தார் என்ற தகவல் பட வெளியீட்டிற்கு முன் வந்தது. ஆனால், அதன் பின் என்ன நடந்தேதோ படத்தில் பார்க்கும் போது அந்த பாடல் கௌதம் – துளசியின் பின்னணி காதல் பாடலாக இருந்தது.
லட்சுமி மஞ்சு, பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன்பாபுவின் மகள். தமிழில் இவர் அறிமுகமாகும் முதல் படம் ‘கடல்’. மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்த இவர் படத்தில் ‘சிறப்புத் தோற்றத்தில் ’ சில காட்சிகள் மட்டுமே வருகிறார்.
தெலுங்கில் இந்த படம் ‘கடலி’ என்ற பெயரில் நேற்று வெளியாகியது. அவருடைய ரசிகர்களால் அங்கு இது அதிகமாகவே விமர்சிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்துள்ள லட்சுமி மஞ்சு, “நெஞ்சுக்குள்ளே ’ பாடலில் நான் நீக்கப்பட்டது அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனாலும், மணி ஸார் அப்படி செய்ததற்கு நிச்சயம் ஏதாவது ஒரு காரணம் இருந்திருக்கும். இருந்தாலும் இந்த படத்தில் நானும் இடம் பெற்றதை பெருமையாக நினைக்கிறேன்.”
இந்த முறை நீங்கள் ஏமாற்றமடைந்ததற்கு வருந்துகிறேன். அடுத்த முறை இன்னும் சிறப்பாக பெரிய விதத்தில் செய்வேன்,” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.