தயாரிப்பு – பிரகாஷ்ராஜ் புரொடக்ஷன்ஸ் – பிரகாஷ்ராஜ் இயக்கம் – ராதாமோகன் இசை – தமன் பாடல்கள் – மதன் கார்க்கி ஒளிப்பதிவு – ப்ரீதா வசனம் – விஜி படத்தொகுப்பு – ஆலன் நடனம் – போனி வர்மா, தினேஷ் மக்கள் தொடர்பு – டைமன்ட் பாபு வெளியான தேதி – 19 ஏப்ரல் 2013 நடிப்பு – சிரிஷ், யாமி கௌதம், பிரகாஷ்ராஜ், நாசர், குமரவேல், ஸ்ரீசரண், அனுபமா குமார் மற்றும் பலர்.
– – –
குடும்பத்தின் கௌரவம் தான் பெரியது என நினைக்கும் ஒரு குடும்பத்திற்குள் காதல் நுழைந்து விட அந்த காதலால் அந்த குடும்பத்தின் கௌரவத்தைக் காப்பாற்ற அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் எடுக்கும் முடிவுதான் இந்த கௌரவம்.
தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இப்படி எல்லாம் நடக்குமா என்று தெரியவில்லை, ஆனால் வட மாநிலங்களில் நடப்பதாக நாம் தினசரி செய்திகளில் பார்த்து வருகிறோம். அப்படிப்பட்ட ஒரு கதையை தமிழுக்கு ஏற்றபடி கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராதாமோகன்.
கதையே கொஞ்சம் அந்நியப்பட்டு நிற்கும் போது, படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்களும் நமக்கு அந்நியப்பட்டே தெரிகிறார்கள். போதாததற்கு இடைவேளைக்குப் பின் நண்பர்களின் போராட்டம், அது, இது என ஒரு தெலுங்குப் படத்தைப் பார்த்த உணர்வே ஏற்படுகிறது.
தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு படமான ‘மொழி’ படத்தை மிக மிக யதார்த்தமாக கொடுத்து ரசிக்க வைத்த ராதாமோகன் இந்த படத்தை இயக்கியிருப்பதால் நிறையவே எதிர்பார்த்தோம்.
படத்துல கொலைக் குற்றவாளி யார் அப்படிங்கறது எல்லாருமே ஈஸியா கண்டுபிடிக்கிற மாதிரி திரைக்கதை அமைச்சிருக்கீங்க. எந்தவிதமான ‘ட்விஸ்ட் & டர்ன்’ படத்துல இல்லாதது மிகப் பெரிய குறை. பெருசா சொல்ல வருவீங்கன்னு எதிர்பார்த்தால், அப்புறம் ஒரு சாதாரண படத்தை பார்த்த திருப்திதான் கிடைச்சிது. ஏன் ? தமிழ், தெலுங்கு இரு மொழிகளுக்கும் பொருத்தமா இருக்கணும்னு நீங்க நினைச்சிட்டீங்க போல.
தன் கூட கல்லூரில படிச்ச நண்பன் ஒருத்தனை யதேச்சையா சந்திக்க ஆசைப்பட்டு அவன் ஊருக்குப் போறாரு சிரிஷ். ஆனால், அவன் சில மாதங்களா காணாமல் போயிருக்கிற விவரம் தெரியுது. அவனும், அந்த ஊரைச் சேர்ந்த பெரிய மனிதர் பெண்ணும் காதலிச்சி ஊரை விட்டே ஓடி போயிட்டதா சொல்றாங்க. வேற ஒரு நண்பன் துணையோட அந்த ஊருக்கு வந்து தங்கி இருந்து அவனைத் தேட ஆரம்பிக்கிறாரு. இவங்களுக்கு உதவியா அதே ஊர்ல இருக்கிற வக்கீலுக்குப் படிச்ச யாமி கௌதமும் வர்றாங்க.
காணாமல் போன காதல் ஜோடிகளை இவங்க கண்டு பிடிச்சாங்களா இல்லையாங்கறதுதான் படத்தோட மீதி கதை.
நாயகனா புதுமுகம் சிரிஷ். தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி உறவினர். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தம்பி. தமிழில் சிரிஷ் அறிமுகமாகியிருக்கும் படம். நடிப்புல இன்னும் நிறைய தூரம் போகணும். எல்லா காட்சிகள்லயும் ஒரே மாதிரியான முகபாவத்தை வெளிப்படுத்தியிருக்காரு. யாமி கௌதமை பார்க்கும் போது மட்டும்தான் கொஞ்சம் சிரிக்கிறாரு. ‘சிரிஷ்’ பேரை வச்சிட்டு கொஞ்சம் கூட சிரிச்ச முகமில்லாமா சீரியஸாவே இருக்காரு.
நாயகியா புதுமுகம் யாமி கௌதம். அழகா, பளிச்னு இருக்காங்க. சில காட்சிகள்ல அக்கா ‘லுக்’ல தெரியறாங்க. சிரிஷை காதலிக்கிற மாதிரியான காட்சிகள் படத்துல அதிகம் இல்லை. ஒரு சில காட்சிகள்ல காதல் பார்வை பார்க்கிறதோட சரி. கிடைச்ச வாய்ப்பை நல்லாதான் பயன்படுத்தியிருக்காங்க. அடுத்த படங்கள்ல அசத்தறாங்களான்னு பார்ப்போம்.
பிரகாஷ்ராஜோட ‘பசுபதி’ கேரக்டர் மேல நிறையவே எதிர்பார்ப்பு ஏற்படுது. ஆனால், அவரை ரொம்ப ‘நல்லவர்’னு காட்டி அந்த எதிர்பார்ப்பை ஏமாத்திட்டாங்க. மொத்தமே நாலு, ஐந்து காட்சிகள்ல மட்டும்தான் வர்றாரு பிரகாஷ்ராஜ். வழக்கமான ஆர்பாட்டம் இல்லாம அமைதியா நடிச்சிருக்காரு. ‘காஸ்ட்யூம்’ அநியாயத்துக்கு தெலுங்கு படம் பார்த்த மாதிரி இருக்கு. தமிழ்ல எடுக்கும் போது வெள்ளை , வேட்டி – சட்டை கொடுத்திருக்கக் கூடாதா ? எதுக்கு அந்த ஆந்திரா கலர் ?
பிரகாஷ்ராஜ் கம்பெனியோட ஆஸ்தான நடிகர் குமரவேல், தொழிற்சங்கவாதியா நாசர், காஜல், பிரகாஷ்ராஜ் மனைவியா வர்றவங்க (யார் இந்த அழகான ஆன்ட்டி) குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்ற நட்சத்திரங்கள்.
தமன் இசையில் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பவர் மதன் கார்க்கி. ஒன்று கூட மனதில் நிற்கவில்லை.
விஜியின் வசனம் ஒரு சில இடங்களில் கைதட்டலை அள்ளிக் கொள்கிறது. இப்படி சமுதாய பிரச்சனை சொல்லும் படங்களில் ஒளிப்பதிவு அதிகமான அழகுணர்ச்சியை வெளிப்படுத்தாமல் யதார்த்தத்தை வெளிப்படுத்தினால் நன்றாக இருக்கும். சிரிஷ் கூடாரம் அடித்து தங்குமிடமெல்லாம் ‘காதல்’ சப்ஜெக்ட்டுக்குண்டான எஃபெக்ட்.
கௌரவம் – பெயரில் மட்டும்…