‘ஜேகே எனும் பாசிட்டிவ் எனர்ஜி’ – சேரன்

jk working stills_00015சேரன் தற்போது இயக்கி வரும் ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தின் முதல் பார்வை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் சேரன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார், நாயகன் சர்வா, ஜெயபிரகாஷ், கிட்டி, ஒளிப்பதிவாளர் சித்தார்த், படத்தொகுப்பாளர் ராமாராவ், பாடலாசிரியர் நா. முத்துக்குமார், காஸ்ட்யூம் டிசைனர் ஷண்முகப்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

படத்தின் முதல் பார்வையாக ஒரு டீஸர், ஒரு ப்ரோமோ சாங் ஆகியவற்றை திரையிட்டுக் காட்டினார்கள். அவை வழக்கமான சேரன் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டுத் தெரிந்தன.

வழக்கமாக பேசச் சொன்னால் நிறையவே பேசுவார் சேரன், இருந்தாலும் அதில் பல உண்மைகள் இருக்கும், உணர்வுகள் இருக்கும், நம் மனதை எளிதில் தொட்டு விடக் கூடிய பேச்சாக இருக்கும். அப்படித்தான் பல விஷயங்களைப் பற்றி நேற்றும் பேசினார்.

அவற்றிலிருந்து சில,

“ இந்த படத்தோட தலைப்பை உச்சரிக்கும் போது எனக்குள்ளயே ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வரும்.

வெறும் இயக்குனரா பணியாற்றி 11 வருஷம் ஆச்சி. ‘பொக்கிஷம்’ படத்தை இயக்கி நடிச்சதுக்கப்புறம் ‘யுத்தம் செய்’, ‘முரண்’, ‘சென்னையில் ஒரு நாள்,’ ‘மூன்று பேர் மூன்று காதல்’ இப்படி சில படங்கள் நடிச்சிட்டிருக்கும் போது எனக்குள்ள தூங்கிட்டிருக்கிற டைரக்டர் அப்பப்ப வந்து தொந்தரவு கொடுத்துக்கிட்டே இருப்பாரு. சரி, நடிக்காம ஒரு படத்தை இயக்குவோம்னு முடிவு பண்ணன்.

சில இடங்கள்ல சில சம்பவங்களைப் பார்த்ததோட பாதிப்புதான் இந்த படம். இந்த விஷயம் மக்களுக்கு சரியா போய் சேரணும். இன்னைக்கு திரையரங்கத்துக்கு வர்ற ரசிகர்களுக்கு , அவங்களுக்கு எப்படி சொன்னால் சரியா இருக்கும்னு யோசிச்சி இந்த படத்தை பண்ணி இருக்கன்.

ரசிகர்களுக்கு எளிமையா, புரியற மாதிரி, அவங்க சந்தோஷப்படற மாதிரி கொடுக்கணும்னு முடிவு பண்ணன். இந்த படத்துக்காக நான் முதல்ல உருவாக்கின கதாபாத்திரமே சந்தானம் கதாபாத்திரம்தான். காமெடி கண்டிப்பா இருக்கணும்னு முடிவு பண்ணன். அதுலயும் ஒரு நல்ல விஷயத்தை ஜனரஞ்சகமா சொல்லி இருக்கன்.

சினிமாவுல வெற்றி வரும்போது எல்லோரும் நம்மள மதிப்பாங்க. ஆனால், கொஞ்சம் தடுமாற்றம் வரும் போது விலகிப் போயிடுவாங்க. இது ஒரு மாயை. இந்த படம் ஆரம்பிக்கும் போது இந்த மாதிரி ஒரு நிலைமைதான் எனக்கு வந்தது.

சிலரைப் போய் பார்க்கும் போது சேரன் சார் ‘ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து,  பொக்கிஷம்,’ மாதிரி சீரியஸ் படங்கள்தான் பண்ணுவாருன்னு , என் கூட படம் பண்ண அவங்களுக்கு உடன்பாடு இல்லை. நான் சென்டிமென்ட்டாதான் படம் பண்ணுவன். யூத்தா பண்ண மாட்டன்னு, இந்த கதையை கேக்காமலேயே என்னை நிராகரிச்சாங்க.

மறுபடியும் ‘ஆட்டோகிராப்’ படம் எடுக்கிறதுக்கு முன்னாடி வந்த கோபம் மாதிரியே அப்பவும் வந்தது. ஆனால், அதெல்லாம் தவறு இல்லைன்னு நினைச்சேன். இந்த படத்துல என்னைப் பத்தி நிரூபிச்சிக் காட்டணும்னு முடிவெடுத்து இந்த படத்தை பண்ணியிருக்கேன், ” என உணர்வு பூர்வமாகப் பேசினார்.

‘ஆட்டோகிராப்’ படத்தில் நடிக்க பலர் தயங்கியதும் பின்னர் அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதும் நமக்குத் தெரிந்த ஒன்றுதான். அதே போல் இந்த படத்திற்கும் நடந்திருக்கிறது என்றால், அதே அளவு வெற்றி இந்த படத்திற்கும் கண்டிப்பாகக் கிடைக்கப் போகிறது என்றுதானே அர்த்தம்.

‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ தமிழ் சினிமாவில் மற்றுமொரு ‘ஆட்டோகிராப்’ ஆக அமையும் மிஸ்டர் சேரன்….

Read Previous

சேரனின் ‘கை கொடுக்கும் கை’

Read Next

யாரையும் காதலிக்கவில்லை – ஹன்சிகா