தமிழ் சினிமாவில் கவிழும் கார்ப்பரேட் நிறுவனங்கள்…

corporate-companiesதமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் சில கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைந்து தமிழ் சினிமாவின் தலையெழுத்தையே மாற்றப் போகிறோம் என கூக்குரலிட்டார்கள். கடைசியில் அவர்களின் தலையெழுத்துதான் மாறிப் போனது.

அந்த நிலை மாறி விட்டதா அல்லது இன்னும் தொடர்கிறதா என்பது விவாதத்திற்குரிய ஒன்றுதான்.

ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் தங்களை ஏதோ சினிமாவின் பாதுகாவலர்கள் என்றே நினைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

ஆனால், திரையுலகில் விசாரித்த வரையில் அவர்கள் கமிஷன் வாங்கும் கார்ப்பரேட் முதலைகள் என அறிய முடிந்தது.

ஒரு படத்திற்கு போடப்படும் பட்ஜெட்டில் சில சதவீதத் தொகையை அவர்களுக்கு கமிஷனாக கொடுக்க வேண்டுமாம். அதன் பின்னர் மற்ற செலவுகள் அது, இது என அவர்கள் வேறு கணக்குக் கதை எழுதுவார்களாம்.

இதனால்தான் தமிழ் சினிமாவில் இப்படி கார்ப்பரேட் நிறுவனங்கள் சரிவர செயல்படாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் வெளியான ஒரு படத்தின் பட்ஜெட் 60 கோடி என்றும் அந்த படத்திற்கு ஏற்பட்ட நஷ்டத் தொகை 35 கோடிக்கும் மேல் என்றும் சொல்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்னால் வெளிநாட்டிலிருந்து வந்து ஒரே நேரத்தில் 10 படங்களுக்கு பூஜை, 25 படங்களைத் தயாரிக்கப் போகிறோம் என அறிவித்த நிறுவனம் ஒரு சுபயோக சுபதினத்தில் திடீரென காணாமல் போனது.

அதன் பின் வீடியோ உலகில் உலக அளவில் புகழ் பெற்ற ஒரு நிறுவனம் வரிசையாக பல படங்களை எடுத்தது. அதில் சொல்லிக் கொள்ளும்படியான படம் ஒன்று கூட இல்லை. இன்னும் அந்த நிறுவனம் தயாரித்த இரண்டு, மூன்று படங்கள் வெளிவராமலே உள்ளது.

வட இந்தியாவிலிருந்து இங்கு வந்து தொலைக்காட்சி ஆரம்பித்த நிறுவனம் தயாரித்த   ஒரு படம் வெளியீட்டிற்கு முன்பே விசிடி ஆக வெளியானது. சரித்திரம் படைக்க வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட மற்றொரு படம் சத்தமில்லாமலே முடங்கிப் போனது.

தற்போது ஆங்கில எழுத்தின் வார்த்தையை தொலைக்காட்சிப் பெயருடன் வைத்துள்ள ஒரு நிறுவனமும் கடந்த சில வருடங்களாக தமிழில் படங்களைத் தயாரித்து வருகிறது. இவர்கள் தயாரித்த படங்கள் ஒன்று கூட லாபமாக அமையவில்லை என்கிறார்கள். ஆனால், இதே நிறுவனத்தின் பல ஹிந்தி திரைப்படங்கள் வசூல் சாதனை புரிந்து வருகின்றன.

சரியான தலைமை நிர்வாகிகளை அவர்கள் தேர்ந்தெடுக்காததும், முறையற்ற திட்டமிடலும்தான்  இதற்கெல்லாம் காரணம் என்கிறார்கள் தமிழ் சினிமாவில் நீண்ட கால அனுபவம் வாய்ந்தவர்கள்.

இன்னும் ஒரு படத்தின் வெற்றிக்கான காரணம் எது என்பதை அனுபவம் வாய்ந்தவர்களாலேயே புரிந்து கொள்ள முடியாத நிலைமைதான் இங்கு உள்ளது.

நன்றாக ஓடும் என்று சொன்ன படங்கள் தியேட்டரை விட்டு ஓடியுள்ளன. ஓடவே ஓடாது என்று சொன்ன படங்கள் 100 நாட்களைத் தாண்டி ஓடியுள்ளன.

ஆனால் ஒன்று உண்மையாக சினிமாவை நேசிப்பவர்களை அது என்றுமே கை விட்டதில்லை.

Read Previous

சிம்பு தென்னிந்தியாவின் ரன்பீர் கபூர் ஆகலாம் – கௌதம் மேனன்

Read Next

சிம்பு – ஆன்ட்ரியா இடையே ஒன்றுமில்லை…