தலைமுறைகள் – விமர்சனம்

தமிழ் சினிமா இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறதென்றால் அதற்கு பாலு மகேந்திரா போன்ற படைப்பாளிகளும் ஒரு காரணம். தள்ளாடும் வயதிலும் உழைப்பதற்கு தயங்காமல் தமிழ் சினிமாவில் ஒரு தரமான படத்தைக் கொடுத்ததற்காக அவருக்கு தங்கப் பதக்கம் கொடுத்தால் மட்டும் போதாது, ஒரு தங்க மாளிகையைத்தான் தரவேண்டும். நகைச்சுவை என்ற பெயரில் காமக் களியாட்டங்கள், குடித்து விட்டு கும்மாளம் போடும் காட்சிகள் , காதல் என்ற போர்வையில் கட்டிலறைக் காட்சிகள் என சில படங்களால் அவ்வப்போது தரமிழந்து போகும் தமிழ்சினிமாவை ‘தலைமுறைகள்’ போன்ற படங்களே தலை நிமிர்ந்து நிற்க வைக்கின்றன. ‘அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, ரெட்டைவால் குருவி, வீடு, சந்தியா ராகம், மறுபடியும், சதி லீலாவதி, போன்ற குடும்பப் பாசம், காதல் நிறைந்த யதார்த்த படங்களுக்குச் சொந்தக்காரரான பாலு மகேந்திரா எட்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம். கதையே நாயகன், இறைவன் அளித்துள்ள சூரிய ஒளியே படத்தின் வண்ணம் என ஒரு கிராமத்து வீட்டையும், ஒரு கிராமத்துத் தந்தையின் பாசத்தையும் இந்த படத்தில் அழுத்தமாய் பதிய வைத்திருக்கிறார். கிராமத்தில் அந்த காலத்து பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் பாலுமகேந்திரா. அவருடைய டாக்டர் மகன் சசிக்குமார் , கிறிஸ்துவ பெண்ணை காதல் மணம் புரிந்ததால் அவரை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். சில வருடங்கள் கழித்து அப்பா பாலு மகேந்திராவுக்கு உடல் நிலை சரியில்லை என கேள்விப்படும் சசிக்குமார் , மனைவி ரம்யா சங்கர், மகன் மாஸ்டர் கார்த்திக் ஆகியோருடன் அப்பாவைப் பார்க்க வருகிறார். ஆரம்பத்தில் அப்பா, மகன் பழைய மோதலில் இருந்தாலும், சில சந்தர்ப்பங்கள் அவர்களை நெருங்க வைக்கிறது. பேரன் கார்த்திக்குடன் தாத்தா பாலு மகேந்திரா நெருக்கமாகிறார். தாத்தாவுக்கும் பேரனுக்குமான  தலைமுறை கடந்த பாசம் எப்படியெல்லாம் ஈர்க்க வைக்கிறது என்பதுதான் இந்த ‘தலைமுறைகள்’. இத்தனை வருடங்களாக ஒளிப்பதிவாளராக, இயக்குனராக, படத்தொகுப்பாளராக மட்டுமே அறியப்பட்ட பாலு மகேந்திரா முதன்முறையாக நடித்துள்ள படம். நடிப்பது தெரியாமல் நடிப்பதுதான் நடிப்பு என்பார்கள். அப்படித்தான் நடித்திருக்கிறார் அவர். மகன் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்துவதிலாகட்டும், மருமகளைப் புரிந்து கொண்டு அவளுக்காக இயேசு படத்தை பூஜையறையில் வைப்பதாகட்டும், பேரனுடன் விளையாடி மகிழ்வதிலாகட்டும், வயதான ஒரு குழந்தையாகவே தெரிகிறார் பாலு மகேந்திரா. இத்தனை வருடங்களாக இவரது இயக்கத்தில் பலர், பேரையும், புகழையும், விருதுகளையும் வாங்கிக் குவித்ததின் காரணம் புரிகிறது. பாலுமகேந்திராவின் பேரனாக மாஸ்டர் கார்த்திக். ஆங்கிலம் மட்டுமே பேசத் தெரிந்த இவனது கதாபாத்திரம், போகப் போக தமிழ் கற்றுக் கொண்டு தமிழில் பேசும் அழகே தனி. சின்னச் சின்ன விஷயங்களையும் அழகாகச் செய்திருக்கிறான் இந்த சிறுவன். பாலுமகேந்திராவின் மகனாக சசிக்குமார், மருமகளாக ரம்யா சங்கர், மகளாக வினோதினி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இளையராஜாவின் இசையில் பாடல்கள் இல்லையென்றாலும் காட்சிகளுக்கான பின்னணி இசையே நம்மை கட்டிப் போட்டு விடுகிறது. இந்த இசையை இளையராஜாவைத் தவிர யாரால் தரமுடியும். பத்திரிகையாளர் காட்சியில் படம் பார்த்து முடித்த பின் பேசிய பாரதிராஜா, “எனது கிராமம், எனது தமிழ் இதைத்தான் படத்தில் சொல்ல ஆசைப்பட்டேன். எட்டு வயதில் என் தாத்தாவின் கை பிடித்து நடந்த போதே இந்த கதையை உருவாக்கிவிட்டேன்,” என பேசி விட்டு அழுதார். அதே உணர்வுதான் படத்தைப் பார்த்து முடித்ததும் நமக்கு தோன்றியது. என்னதான் சிட்டியில் பணம் சம்பாதித்தாலும் நம் வாழ்க்கை ஆரம்பமான அந்த கிராமம் நம் மனதை விட்டு அகலவே அகலாது. ‘தலைமுறைகள்’ – தலை மீது தூக்கி வைத்து கொண்டாட வேண்டிய படம்…  

Read Previous

என்றென்றும் புன்னகை – விமர்சனம்

Read Next

ரஜினி பாராட்டினால் படம் ஓடி விடுமா ?