எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி இணைந்து நடிக்க உள்ள ‘புறம்போக்கு’ படத்தில் மூன்றாவது நாயகனாக இணைந்துள்ளார் ஷாம்.
படத்தில் இடம் பெறும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என யோசித்து, தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஷாம் பொருத்தமாக இருப்பார் என முடிவெடுத்து அவரை இந்த படத்தில் மூன்றாவது நாயகனாக சேர்த்துள்ளார்கள்.
எஸ்.பி. ஜனநாதன் முதன் முதலாக இயக்கிய ‘இயற்கை’ படத்தில் நாயகனாக ஷாம் நடித்தார். அதன் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருடைய இயக்கத்தில் ஷாம் நடிக்க உள்ளார்.
அதே போல், ஆர்யா நாயகனாக அறிமுகமான முதல் படமான ‘உள்ளம் கேட்குமே’ படத்தில் ஷாம் முதன்மை கதாநாயகனாக நடித்திருந்தார்.
அதன் பின் இப்போதுதான் ஆர்யாவும், ஷாமும் இணைந்து நடிக்க உள்ளார்கள்.
தற்போது, ‘புறம்போக்கு’ படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் ஆகிய மூவரும் நடிக்க உள்ளதால் இந்த படம் ‘மல்டி ஸ்டார்’ படமாக உருவாக உள்ளது.
இப்படத்தின் நாயகியாக நடிகை ராதாவின் மகளும் ‘கோ, அன்னக்கொடி’ படங்களின் நாயகியுமான கார்த்திகா நடிக்க உள்ளார் என செய்திகள் வெளியாகின. ஆனால், இதுவரை முறையான அறிவிப்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 14ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு குலுமணாலியில் ஆரம்பமாகி நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.