“நம்ம கூட இருக்கிறவங்களை நாம பார்த்துக்கிட்டால், நம்மை நமக்கு மேல இருக்கிறவன் பார்த்துப்பான்,” சரியான காட்சியில் வரும் இந்த வசனம், வசனமல்ல வாழ்க்கை. நம்முடன் இருப்பவர்களை எப்படி அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதை, அவர்கள் மீது எப்படி பாசம் வைக்க வேண்டும் என்பதை இதுவரை யாரும் இப்படி சொன்னதில்லை. நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு ‘பர பர பட்டாசு’ ஆக்ஷன் படத்தைப் பார்த்ததில் ரசிகர்களுக்கு அப்படி ஒரு திருப்தி. இயக்குனர் சிவா அஜித் ரசிகர்களை மட்டும் மனதில் வைத்து இந்த படத்தைக் கொடுக்கவில்லை. குடும்பத்துடன் படம் பார்க்கப் போகவே முடியவில்லை என தியேட்டர் பக்கம் போய் நீண்ட நாட்களாகிவிட்டது என சொல்பவர்களையும் தியேட்டர் பக்கம் வர வைத்திருக்கிறார். எத்தனையோ, அண்ணன் – தம்பி பாசக் கதைகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்த அண்ணன், தம்பிகள் பாசக் கதையில் தம்பிகளை மட்டும் பார்க்காமல், தன்னுடன் வேலை பார்ப்பவர்கள், தன்னை நம்பி உள்ளவர்கள், தன்னை நம்பி வர இருக்கும் காதலி, அவர்களின் குடும்பம் என அனைவர் மீதும் பாசம் செலுத்தி ஒரு பத்து ‘பாச மலர்’ படத்தைப் பார்த்த திருப்தியைத் தந்திருக்கிறார்கள். ஒட்டன்சத்திரத்தில் காய்கறி மார்க்கெட்டில் விநாயகம் பிரதர்ஸ் பெயர் பெற்று விளங்குகிறார்கள். அண்ணன் விநாயகம் (அஜித்) அவருடைய தம்பிகள், பெயரைக் கேட்டாலே அனைவரும் நடுங்குகிறார்கள். தப்பு செய்த யாரையாவது அடிக்க வேண்டும் என்றால் கூட அவர்களுக்கு வயிறு நிறைய சாப்பாடு போட்டு அதன் பின்தான் அடித்து வெளுப்பார்கள். கல்யாண வயதைக் கடந்து நிற்கும் அண்ணன் அஜித்துக்கு திருமணம் என்றாலே பிடிக்காமல் இருக்கிறது. கல்யாணம் ஆகி மனைவி வந்தால் பாசமான தம்பிகளை தன்னிடம் இருந்து பிரித்து விடுவார் என்று நினைக்கிறார். ஆனால், தம்பிகளோ ஆளுக்கொரு பெண்ணை காதலிக்கிறார்கள். இவர்களின் காதல் அந்த குடும்பத்து வக்கீலான சந்தானத்திற்கு தெரிய வருகிறது. அதன் பின் சந்தானம் அன்ட் தம்பிகள் கூட்டணி , அண்ணணுக்கு எப்படியாவது ஒரு பெண்ணின் மீது காதல் வரவைக்க முயற்சிக்கிறது. அவர்கள் பார்வையில் அஜித்தின் சிறுவயதில் மனம் கவர்ந்த பெயரான ‘கோப்பெருந்தேவி’ என்ற பெயரைக் கொண்ட தமன்னா சிக்குகிறார். இருவருக்குமிடையே எப்படியோ காதலை வரவைக்கிறார்கள். ஆனால், அடிதடி என்ற பேச்சுக்கே இடமில்லாத குணம் கொண்ட நாசரின் மகளான தமன்னா, அஜித்தின் பின்னணி தெரிந்ததும் அதிர்ச்சியடைகிறார். அதன் பின், அஜித் – தமன்னா காதல் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதி கதை. ‘மங்காத்தா, ஆரம்பம்’ படங்களைத் தொடர்ந்து இந்த படத்திலும் அஜித்துக்கு ‘சால்ட் அன்ட் பெப்பர்’ லுக். ஆனால், அதற்கும் கதையில் சரியான காரணத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அதிலும், ஒரு சென்டிமென்ட்டை வைத்து மறுபேச்சு பேசக்கூடாதென ‘நச்’ காரணத்தை சொல்லிவிட்டார் இயக்குனர். அஜித் நடித்த படங்களிலேயே இந்த படம் நம் மனதுக்கு நெருக்கமாக அமைந்திருக்கிறது. அதற்கு பாசமான நடிப்பு காரணமா, அல்லது அவர் அணிந்திருக்கும் வெள்ளை உடை போன்ற வெள்ளந்தியான மனம் கொண்ட குணம் காரணமா என போட்டியே வைக்கலாம். அவரிடம் வேலை செய்யும் அப்புக்குட்டி திருமணம் செய்து கொண்டதும் அவருக்காக ஒரு கடையையே எழுதி வைக்கும் குணம் கொண்டது அஜித்தின் கதாபாத்திரம். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் அஜித்தின் ஹீரோயிசத்தை எந்த ‘பன்ச்’ வசனமும் இல்லாமல் காட்சிக்குக் காட்சி ஏற்றிக் கொண்டே போகிறார் இயக்குனர் சிவா. அஜித் ரசிகர்கள் அஜித்தை எப்படி ரசிக்க வேண்டும் என நினைக்கிறாரகளோ அப்படியே…ஏன், அதை விட சிறப்பான விதத்தில் அவருடைய கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். அதன் தன்மை புரிந்து கொண்டு, தனது நடிப்பில் மூலம் அனைவரையும் கவர்ந்து விட்டார் அஜித். நீண்ட இடைவெளிக்குப் பின் தமன்னா. ஆஹா…அஜித்தின் கலருக்கு அப்படி ஒரு பொருத்தமான ஜோடி. தொட்டுக் கொள்ளாத, கட்டிக் கொள்ளாத ஹீரோவும், ஹீரோயினும் தூர நின்று காதலிக்கும் ஒரு காதலை இந்த காலத்தில் பார்க்கிறோமா என ஆச்சரியப்பட வைக்கிறது. இவர்கள் காதலும், கிண்டலும் இன்னும் கொஞ்ச நேரம் இருக்காதா என ஏங்க வைத்து, ஒரு ‘இடி..மின்னலில்’ அவர்களை சீக்கிரமே காதலிக்க வைத்துவிட்டார்கள். இடைவேளை வரை குடும்ப வக்கீல் ‘பெயில் பெருமாள்’ கதாபாத்திரத்தில் நம்மை சிரிப்புச் சிறையில் தள்ளி விடுகிறார் சந்தானம். அதுலயும் காதலிச்ச பெண்ணை, ‘அக்கா’ன்னு சொல்லி கைவிடற சீன்ல தியேட்டரே அலறுது. இப்படி ஒன்றல்ல, ரெண்டல்ல…பல காட்சிகள்… அஜித் தம்பிகளா பாலா, விதார்த், முனீஷ், சோஹைல்…இவங்கள்ல பாலா, விதார்த்துக்கு மட்டும்தான் சில வசனங்கள். மத்தவங்க ஃபைட் போடறதோட சரி. அன்பே பெரிது என்ற கதாபாத்திரத்தில் நாசர்…பிரதீப் ராவத் வில்லத்தனத்துல மிரட்டப் போறாருன்னு பார்த்தால், அவரை அஜித்தைப் பார்த்து அலறி ஓட விடறது சரியான ட்விஸ்ட்…அப்புறம் பார்த்தால் அதுல் குல்கர்னி , வில்லனா என்ட்ரி ஆகறாரு. தேவிஸ்ரீபிரசாத் இசையில் அஜித் என்ட்ரி பாடலான ‘நல்லவன்னு சொல்வாங்க… அட்டகாசம். மற்ற இரண்டு டூயட்களும் ஹிட் ரகம். ‘ரத கஜ…’ செம மாஸ் சாங்… சில காட்சிகளில் இயக்குனர் சிவாவை மிஞ்சுகிறார் வசனகர்த்தா சிவா. இவருடன் இணைந்து வசனம் எழுதியிருப்பவர் பரதன். “சந்தோஷம் வந்தால் நாலு பேரோட பகிர்ந்துக்கணும், கஷ்டம் வந்தால் நாம மட்டுமே அனுபவிக்கணும்…”, ஒரு சின்ன சேம்பிள். அஜித் பேசற சாதி பத்தின டயலாக்கும், ‘இனி விதைச்ச விவசாயிதான் விலைய நிர்ணயிக்கணும்’ டயலாக்கும் செம பன்ச். பாடல் சிடி வெளியிடறா மாதிரி ’டயலாக் சிடி’ வெளியிடுங்கப்பா. பிச்சிக்கிட்டு போகும்… சிவாவின் விறு விறு பரபர ஆக்ஷனுக்கு கை கொடுத்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் வெற்றி, படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன். ஸ்டன்ட் காட்சிகளில் சில்வா, கணேஷ், பம்மல் ரவி, ஸ்டன்ட் விக்கி இவர்களின் உழைப்பு தெரிகிறது. அதிலும் டிரையின் பைட்டும், குழந்தை 1,2, 3, எண்ற பைட்டும் அதிரடியோ அதிரடி. 2014ம் ஆண்டின் முதல் சூப்பர் டூப்பர் ஹிட்…. ‘வீரம்’ – எல்லா நாடுலயும், எல்லா மாநிலத்துலயும், தமிழ்நாட்டுல எல்லா ‘ஜில்லா’வுலயும் வெற்றிக் கொடி ஏத்தும்…