காதலுக்குக் கண் இல்லை என்பார்கள்…காதலுக்குக் கண் எதற்கு ? மனசு இருந்தால் போதுமே…
அழகைப் பார்த்து வருவதல்ல காதல், மனசும் மனசும் சேர்வதுதான் காதல் என்பதை, கண் பார்வையற்ற இருவரின் காதலை கவித்துமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜு முருகன்.
ரயில் நிலையங்களையும், பேருந்து நிலையங்களையும், நாம் எத்தனையோ முறை கடந்து போயிருக்கிறோம். ஆனால், அங்கெல்லாம் ஏதோ ஒரு விதத்தில் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் எளிய மனிதர்களைப் பற்றி நாம் ஒரு நிமிடம் கூட சிந்தித்துப் பார்த்திருக்க மாட்டோம்.
இன்னும் ஏன், அவர்களிடமிருந்து கூட எந்தப் பொருளையும் வாங்காமல் கௌரவக் குறைச்சலாகப் பார்ப்போம். அந்நிய மோகத்தில் ‘மால்’களில் மாளாத விலையில் விற்கப்படும் அதே பொருளை அநியாய காசு கொடுத்து வாங்குவோம்.
வாழ்க்கையை படமாக படைக்கும் போதுதான் ஒரு படைப்பாளி வெளியில் தெரிகிறான். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைய படம் பிடித்து மனதில் இடம் பிடித்து விட்டார் இயக்குனர் ராஜு முருகன்.
பார்வையற்றவரான தினேஷ், ரயில்களில் பொருட்களை விற்கும் ஒரு இளைஞர். அதே சமயம், ஒரு கலைக் குழுவில் இளையராஜா குரலில் பாடும் அருமையான மேடைப் பாடகரும் கூட. ஒரு நிகழ்ச்சியில் அவருடைய தோழியின் தோழியான மாளவிகாவை சந்திக்கிறார். மாளவிகாவும் பார்வையற்றவர், ஆசிரியை பயிற்சி பெற்று வருபவர்.
வழக்கம் போலவே லேசான மோதலில் ஆரம்பமாகும் இவர்களது சந்திப்பு, போகப் போக காதலாக மாறுகிறது. ஆனால், மாளவிகாவின் அண்ணன், தங்கையை நல்ல வேலையில் சேர்த்து விட்டு, அவர் நண்பன் ஒருவருக்கு திருமணம் முடித்து வைத்து, அதன் மூலம் தன்னையும் காப்பாற்றிக் கொள்ள நினைக்கிறார். தினேஷ், மாளவிகாவின் காதல் பற்றி தெரிந்ததும் காதலர்களைப் பிரிக்கிறார்.
விதியும், சந்தர்ப்பங்களும் காதலர்களை இரு வேறு திசைகளில் பயணிக்க வைக்கிறது. பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை.
‘அட்டகத்தி’ படத்தின் சென்னை இளைஞராகவே நடித்து யார் இவர் ? என அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். இந்த படத்தில் ‘தமிழ்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ்நாட்டை மட்டுமல்ல, அதையும் தாண்டி திரும்பிப் பார்க்க வைக்கிறார். ‘ராஜ பார்வை’ கமல்ஹாசன், ‘காதல் ஓவியம்’ கண்ணன், ‘காசி’ விக்ரம், என பார்வையற்ற நாயகன் கதாபாத்திரங்களைப் பார்த்த நமக்கு இந்த படத்தில் தினேஷ் மாறுபட்டே தெரிகிறார். கண்கள்தான் நடிப்பில் பாவத்தை வெளிப்படுத்தும் முக்கிய அம்சம் என்பார்கள். அப்படியெல்லாம் இல்லாமல் உடல் மொழியின் மூலமே அந்த நடிப்பை உச்சத்திற்கு கொண்டு வரலாம் என நிரூபித்து நல்ல நடிகர் என்ற வரிசையில் சேர்ந்து விட்டார் தினேஷ்.
அறிமுக நாயகி மாளவிகா. தமிழுக்குத்தான் அறிமுகமா ? அல்லது வேறு மொழிகளில் நடித்த அனுபவம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. இந்தியத் திரையுலகில் முக்கிய அங்கம் வகிக்கும்தமிழ்த் திரையுலகில், அறிமுகமாகும் முதல் படத்திலேயே அழகான ஹீரோயினாக வலம் வரவேண்டும் என்று நினைக்காமல் , பார்வையற்ற ‘சுதந்திரக் கொடி’ கதாபாத்திரத்தில் நடித்ததற்காக மாளவிகாவுக்கு அருமையான ‘சல்யூட்’. அவருக்கு கொடுக்கப்ட்ட டப்பிங் குரலும், அவ்வப்போது வெளிப்படுத்தும் உண்மைக் கோபமும், பொய்க் கோபமும் என நடிப்பில் மிரள வைக்கிறார் மாளவிகா. தயவு செய்து அடுத்தடுத்து மசாலாப் படங்கள்ல நடிச்சி மாட்டிக்காதீங்க.
யாருங்க அது , தினேஷ் நண்பனா கூடவே வர்றவரு. அட்டகாசமா நடிச்சி அசத்தியிருக்கிறாரு. அவர் அடிக்கிற ஒவ்வொரு ‘கமென்ட்டு’க்கும் தியேட்டர்ல கைதட்டல் பின்னுது. இயக்குனரின் சமூகப் பார்வையும், சமூகத்தின் மீதான கோபமும் அவரது கதாபாத்திரம் மூலம் அற்புதமாக வெளிப்படுகிறது.
சந்தானமோ, சூரியோ இல்லாமல் ஒரு அழகான காதல் கதையில் மற்ற கதாபாத்திரங்கள் மூலம் கூட நகைச்சுவையை அழகாக புகுத்த முடியும் என அந்த சந்திரபாபு, பிஎம், மற்ற சின்னச் சின்ன கதபாத்திரங்கள் மூலம் நம்மை சிரிக்க வைக்கிறார்கள். ‘எமோஷன்’ ஆயிடுவேன்னா எனச் சொல்லும் ஜிலாக்கி கூட கொஞ்சம் வில்லத்தனத்தையும் மீறி சிரிக்க வைக்கிறார்.
காதலர்கள் சந்தித்துக் கொள்ளும், ரயிலும், ரயில் நிலையமும் கூட கதாபாத்திரமாகவே தெரிகிறது.
இயக்குனராக மட்டுமல்லாமல் வசனகர்த்தாவாகவும் பல காட்சிகளில் கைதட்டல்களை அள்ளுகிறார் ராஜு முருகன். ஒன்று , இரண்டு என உதாணரம் சொல்ல முடியாது, மொத்த படத்திலுமே அது நிரம்பி வழிகிறது.
சந்தோஷ் நாராயணன் இசையில் ‘ஆகாசத்தை நான் பார்க்கிறேன்…, மனசுல சூறைக் காத்து’ பாடல்கள் தியேட்டரை விட்டு வெளியில் வந்த பின், இன்னும் பாட வைத்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து கேட்கவும் வைக்கும் இந்த ஆண்டின் ஹிட் பாடல்கள்.
தினேஷுக்காக இளையராஜா குரலில் பாடிய அந்த பின்னணி பாடகருக்கு ஸ்பெஷல் பாராட்டு. அப்படியே உருக வைத்திருக்கிறார்.
வர்மாவின் ஒளிப்பதிவில் சென்னை கூட அழகாகத் தெரிகிறது. இயக்குனருக்கு பக்கபலமாக மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களும் அமைந்திருக்கிறார்கள்.
இடைவேளைக்குப் பின் திரைக்கதையில் சிறிது தடுமாற்றம், சினிமாவில் மட்டுமே நடக்கும் மாதிரியான சில காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.
குக்கூ – தமிழும், சுதந்திரக் கொடியும் ஏற்றியுள்ள ‘வெற்றிக் கொடி’.
