மோஷன் கேப்சரிங் டெக்னாலஜி, அதாவது நடிப்பு பதிவு சலனத் தொழில்நுட்ப முறையில் இந்தியாவிலேயே முதன் முறையாக படமாக்கப்பட்ட படம் என்ற பெருமை கொண்ட படம்தான் ‘கோச்சடையான்’. தொழில்நுட்பத்தில் ஹாலிவுட்காரர்களுக்கு நாம் கொஞ்சமும் சளைத்தவர்களில்லை என புரிய வைத்திருக்கும் படம். அதிலும் தமிழ் சினிமாவில், ஏன் இந்திய சினிமாவிலேயே ஒரு பெண் இயக்குனரான சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் , அவருடைய அப்பாவை கதாநாயகனாக வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் என்றும் கூறலாம். அந்த தொழில்நுட்பத்தைப் பற்றிய அடிப்படைய அறிவு இல்லாமல் இம்மாதிரியான ஒரு படத்தை இயக்கவே முடியாது. அந்த விதத்தில் அவருடைய தொழில்நுட்ப அறிவும், கற்பனைத் திறனும்தான் இந்த படத்தை ரசிக்க வைத்துள்ளது என்றால் அது மிகையில்லை. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ரஜினிகாந்த் ஒரு மந்திரவாதி. அவருடைய சொல்லுக்கு இன்றைய குழந்தைகள் கட்டுப்பட்டவர்கள் என்பதை இந்த படம் மீண்டும் நிரூபித்து விட்டது. திரையரங்குகளுக்கு அவர்கள் வருவதே இதற்கு மீண்டும் ஒரு சாட்சி. கோட்டைப்பட்டின நாட்டின் தலைமை போர்ப்படைத் தளபதியான கோச்சடையானான ரஜினிகாந்தின் வளர்ச்சியையும், அவருக்குக் கிடைத்த பேர், புகழைக் கண்டு பிடிக்காத மன்னரான நாசர், தந்திரமாக அவர் மீது பழி சுமத்தி கொன்று விடுகிறார். அப்பாவைக் கொன்ற நாசரைப் பழி வாங்க தன் சொந்த நாட்டை விட்டு வெளியேறிய மகன் ராணா ரஜினிகாந்த், ஒரு பெரும் வீரனாக சொந்த நாட்டுக்குத் திரும்பி மன்னரை எப்படிப் பழி வாங்குகிறான் என்பதுதான் படத்தின் கதை. சுமார் இரண்டு மணி நேரப் படத்தில் அனைவருமே மொத்தமாக நடித்திருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்களுடைய அங்க அசைவுகளையும், முக பாவங்களையும் வைத்துத்தான் சலனப் பதிவு தொழில்நுட்பம் மூலம் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, யார் எப்படி நடித்திருப்பார்கள் என்று விவரிக்க முடியாது. ரஜினிகாந்த் உருவம் மட்டும் ரஜினிகாந்தின் நிஜ உருவத்திற்கு அருகாமையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் எல்லாரையுமே யோசித்து யோசித்துத்தான் அடையாளம் காண வேண்டியிருக்கிறது. ஏன் இந்த குறை என்றுதான் தெரியவில்லை. பல உருவங்களை வரைந்து பார்த்து இறுதியில் சிறந்த ஒன்றை தேர்வு செய்திருக்கலாமே. ஆனால், படம் பார்க்கும் போது இந்த மோஷன் கேப்சரிங்…அது, இது என்றில்லாமல் நிஜமாகவே உருவாக்கியிருக்கலாமே என்ற எண்ணம் ஏற்படுகிறது. அப்படி மட்டும் எடுத்திருந்தால் இந்த படத்தின் வீச்சு வேறு மாதிரி அமைந்திருக்கும். இருந்தாலும், கற்பனைக்கும் எட்டாத அரங்குகள், மாட மாளிகைகள், போர்க்களம் அனைத்துமே பிரமிக்க வைத்து கண்களுக்கு விருந்தாக்குகின்றன. கே.எஸ். ரவிகுமாரின் கதை, திரைக்கதை, வசனம் படத்தில் முக்கிய பங்காற்றியிருக்கிறது. சமீப காலமாக ரஜினிகாந்த் என்ற நாயகனை ரசிகர்களின் பார்வையில் முழுவதுமாக புரிந்து வைத்திருக்கும் ஒரே இயக்குனர் என தாராளமாகப் பாராட்டலாம். ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடல்களும், அதற்கான மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பமும் ஒன்றை ஒன்று போட்டி போட வைத்துள்ளன. ‘கோச்சடையான்’ பாடும் ஒரு பாடலில் இடம் பெறும் வசனங்கள் இனி ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் அடிக்கடி இடம் பெறுவதைத் தவிர்க்கவே முடியாது. இது குறை, அது சரியில்லை, இதை அப்படி பண்ணியிருக்கலாம், அதெல்லாம் தேவையேயில்லை….என்ற சராசரி விமர்சனப் பார்வையை இந்த படத்தின் மீது வீசாமல், ஒரு புதிய முயற்சியை இந்தியத் திரையுலகத்திற்குள், தமிழ்ப் படம் மூலம் கொண்டு வந்துள்ள ‘கோச்சடையான்’ குழுவினரை மனதாரப் பாராட்டுவோம். ‘கோச்சடையான்’ – இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.