‘கோச்சடையான்’ படம் எதிர்பார்த்ததைப் போலவே அமோகமான வரவேற்புடன் ரஜினி ரசிகர்களை மட்டுமல்லாது அனைத்து ரசிகர்களையும், குழந்தைகளையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
குறிப்பாக படத்தில் இடம் பெற்றுள்ள பிரம்மாண்ட அரங்குகள், ஏ.ஆர்.ரகுமான் – வாலி, வைரமுத்து கூட்டணியில் உருவாகியுள்ள பாடல்கள், கே.எஸ். ரவிக்குமாரின் வசனம் இவை மூன்றும் ஏகோபித்த பாராட்டைப் பெற்றுள்ளன.
நேற்று முதலே ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்த் பேசும் ‘பன்ச்’ பாடல், வசனங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
“உண்மை வருவாய் நீ…உலகின் குருவாய் நீ…” என்ற பாடலில் இடம் பெற்றுள்ள வசன நடையுடன் கூடிய பாடலில் இடம் பெற்றுள்ள கருத்தாழம் மிக்க வசனங்கள் திரையரங்குகளில் பலத்த கைத்தட்டலைப் பெறுகின்றன.
இந்த பாடலை, பாடியிருப்பவர்கள் ரஜினிகாந்த், ஹரிசரண்…
வைரமுத்து எழுதியுள்ள இந்த பாடலில் இடம் பெற்றுள்ள வசனங்களை கீழே தொகுத்துத் தந்துள்ளோம்…
1. மாற்றம் ஒன்றுதான் மாறாதது…மாறு…மாற்றம் ஒன்றுதான் மாறாதது…மாறுவதெல்லாம் உயிரோடு…மாறாததெல்லாம் மண்ணோடு….
2. பொறுமை கொள், தண்ணீரைக் கூட சல்லடையாக அள்ளலாம்..அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்…
3. பணத்தால் சந்தோஷத்தை வாடகைக்கு வாங்கலாம்…விலைக்கு வாங்க முடியாது.
4. பகைவனின் பகையை விட, நண்பனின் பகையே ஆபத்தானது.
5. நீ என்பது உயிரா, உடலா, பெயரா…மூன்றும் இல்லை…செயல்.உடலா, உயிரா பெயரா நீ…மூன்றும் இல்லை..செயலே..நீ..
6. விதியை அமைப்பது இறைவன் கையில்…அந்த விதியை முடிப்பது உந்தன் கையில்…
7. நீ போகலாம் என்பவன் எஜமான்…வா போகலாம் என்பவன் தலைவன்…நீ எஜமானனா…தலைவனா…?
8. நீ ஓட்டம் பிடித்தால் துன்பம் உன்னைத் துரத்தும்…எதிர்த்து நில்..துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்…
9. பெற்றோர்கள் அமைவது விதி…நண்பர்களை அமைப்பது மதி…
10. சினத்தை அடக்கு…கோபத்தோடு எழுகிறவன்…நஷ்டத்தோடு உட்காருகிறான்…
இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த வரிகள் உலகம் முழுவதும் வட்டமிடும்…பின்னர் நிரந்தரமாகிவிடும்…