ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா மற்றும் பலர் நடிக்கும் ‘கத்தி’ படத்தை நான் ஏன் எதிர்க்க வேண்டும் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பிரபல பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,
“படம் சம்பந்தப்பட்டவர்களை நாங்கள் தனிப்பட்ட முறையில் தாக்கியது இல்லை. படத்தில் வரும் காட்சிகளைத்தான் எதிர்த்திருக்கிறோம். “டெரரிஸ்ட், இனம்” என்று எம் இனத்தை தவறாகக் காட்டிய படங்களை எதிர்த்தோம். அவற்றை எடுத்த சந்தோஷ் சிவனை நாங்கள் எதிர்க்கவில்லை.
கத்தியை ஏன் நிறுத்த வேண்டும். சுபாஷ்கரன் திரிகோணமலைத் தமிழர். கருணாகரன் ஏற்கெனவே நிறைய தமிழ்ப் படங்கள் எடுத்தவர். ராஜபக்ஷேவா அவர்களுக்குக் காசு கெலாடுத்து படம் எடுக்கிறார். இதை எப்படி நம்புவது ? சுபாஷ்கரன் ராஜபக்ஷேவுக்கு காசு கொடுத்தார் என்றால் அதை நம்பலாம். இதில் முருகதாஸுக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் ?
அவர்களுக்கு லைக்கா மொபைல் பற்றித் தெரியுமா ? படம் என்ன பேசுகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும். அதற்கு பணம் எங்கிருந்து வருகிறது என்பதைப் பார்க்கக் கூடாது. ராஜபக்ஷே பணம் கொடுத்தாரா என்று சுபாஷ்கரனும், கருணாகரனும்தான் சொல்ல வேண்டும்.
லைக்கா மொபைலுக்கு எதிராகப் போராட நான் தயார். ஆனால் ‘கத்தி’ படத்துக்கு எதிராகப் போராட மாட்டேன். கத்தி படத்தை எதிர்ப்பது என் வேலை இல்லை. எதிர்ப்பவர்களை நான் எதிர்க்கவில்லை. அது அவர்கள் விருப்பம்.
இத்தனை நாட்களாக அமைதியாக இருந்துவிட்டு எப்போது கத்தி படம் எடுத்து முடிப்பார்கள், பேராடலாம் என காத்திருந்தீர்களா ?,” என அவர் கேள்வி எழுப்புகிறார்.
சீமானின் ‘கத்தி’ படத்திற்கு ஆதரவான நிலையைத் தொடர்ந்து மற்ற தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல் முருகன் இந்தக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட உள்ளார்.
இதன் மூலம் “கத்தி, புலிப்பார்வை” படங்களை எதிர்க்கும் குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துவிட்டன.