பிரவீண் காந்தி இயக்கத்தில் தயாராகியுள்ள ‘புலிப் பார்வை’ படத்தில் ஈழத் தமிழர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி சில மாணவர் அமைப்புகள் கடந்த வாரம் நடைபெற்ற ‘புலிப் பார்வை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முழக்கங்களை எழுப்பினார்கள்.
அது முதல் ‘புலிப் பார்வை’ படத்திற்கான எதிர்ப்பு அலை வேகமாக பரவ ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை ‘புலிப் பார்வை’ படக்குழுவினர் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய படத்தின் தயாரிப்பாளர் மதன்,
“புலிப் பார்வை’ திரைப்படத்தைப் பார்த்து விட்டு, ஐயா பழ.நெடுமாறன் அவர்களும், திரு. சீமான் அவர்களும் சில முக்கியமான அவசியமான திருத்தங்களை, காட்சிகளை, மாற்றங்களை கூறியிருந்தார்கள். அவற்றையெல்லாம் அவர்கள் சொன்னபடி சரி செய்யும் வேலைகள் இன்றிலிருந்து நடந்து கொண்டிருக்கிறது.
தலைவர் பிரபாகரனையும், பாலகர் பாலச்சந்திரனையும், விடுதலைப் புலிகளையும் கௌரவப்படுத்தும் நோக்கில் மட்டும்தான் இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டது.
எனவே, தமிழ் ஆர்வலர்கள் ஆட்சேபிக்கும் எந்த ஒரு காட்சியோ, வசனமோ புலிப் பார்வை படத்தில் இருக்கவே இருக்காது. நண்பர் வேல் முருகன் தலைமையில் தமிழ் ஆர்வலர்கள் குழுவினருக்கு என்னுடைய ஒரு உறுதிமொழியைக் கூறிக் கொள்கிறேன். உங்களுடைய பார்வைக்கு ‘புலிப் பார்வை’ முழுமையாகக் காண்பிக்கப்பட்டு, உங்கள் சம்மதத்தோடு, ஆதரவோடும் மட்டுமே இந்தப் படம் வெளியிடப்படும்.
உங்களுக்கெல்லாம் பிடிக்கவில்லை என்றால், அதில் எத்தனை கோடி இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, இந்தப் படத்தை வெளியிட மாட்டேன் என்று நான் உறுதி அளிக்கிறேன்.
இதையும் மீறி உங்கள் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
மேலும் இசை வெளியீடு அன்று நடைபெற்ற மாணவர் மீதான தாக்குதலுக்கும் மன்னிப்பு கேட்பதாகவும் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.