ரஜினி படத்துக்கு போனால் ஆக்ஷனை எதிர்பார்க்கலாம், கமல் படத்துக்குப் போனால் ரொமான்டிக் எதிர்பார்க்கலாம், விஜய் படத்துக்குப் போனால் மாஸ் எதிர்பார்க்கலாம், அஜித் படத்துக்குப் போனால் கிளாஸ் எதிர்பார்க்கலாம், இனி சிவகார்த்திகேயன் படத்துக்குப் போனால் ‘என்டர்டெயின்மென்ட்’ எதிர்பார்க்கலாம்னு சொல்ல வச்சிருக்கிற படம் இந்த ‘காக்கி சட்டை’. தமிழ் சினிமாவில் இதுவரை போலீஸ் கதாபாத்திரம் என்றால் இன்ஸ்பெக்டர், கமிஷனர் என்றுதான் நாயகனின் கதாபாத்திரத்தை வடிவமைப்பார்கள். ஆனால், நமக்குத் தெரிந்த வரையில் முதல் முறையாக ஒரு கான்ஸ்டபிளின் கதாபாத்திரத்தை ஒரு நாயகனுக்கு வைத்து படத்தின் திரைக்கதையிலேயே ஹீரோயிசத்தை வைத்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ‘எதிர் நீச்சல்’ படத்தில் இணைந்த துரை செந்தில் குமார், சிவகார்த்திகேயன் கூட்டணி இந்தப் படத்தையும் வெற்றி பெற வைத்து ராசிக் கூட்டணியாக்கி விட்டது. கிரைம் பிராஞ்சில் கான்ஸ்டபிளாக வேலை பார்ப்பவர் சிவகார்த்திகேயன். போலீஸ் என்றாலே நேர்மையாக இருக்க வேண்டும், எதையாவது சாதிக்க வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார். ஆனால், அவருடைய மேலதிகாரியான இன்ஸ்பெக்டர் பிரபு, சில விஷயங்களை கண்டும் காணாமல் இருப்பது சிவகார்த்திகேயனுக்குப் பிடிக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் பிரபு, சிவகார்த்திகேயனிடம் முழு ஆதாரத்துடன் ஒரு வலுவான கேஸ் ஒன்றை பிடித்து வா, உனக்காக ஒத்துழைக்கிறேன் எனச் சொல்கிறார். போலீஸ் நிலையத்தின் எதிரில் இருக்கும் டீக்கடையில் வேலை பார்க்கும் ஒரு வட இந்திய சிறுவன் விபத்தில் இறந்துவிட, அவனது மரணத்தில் மர்மம் இருப்பதை சிவகார்த்திகேயன் கண்டுபிடிக்கிறார். அதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்து அதில் ஈடுபட்ட சில குற்றவாளிகளுடன் போலீஸ் வேனில் சென்று கொண்டிருக்கும் போது பிரபு மற்றும் சில அந்த குற்றவாளிகள் அனைவரும் குண்டு வெடிப்பில் இறந்து விடுகிறார்கள். அந்த விபத்திலிருந்து தப்பிக்கும் சிவகார்த்திகேயன் அந்த சிறுவன் இறந்ததற்கான பின்னணி, போலீஸ் வேன் குண்டு வெடிப்புக்குக் காரணமான முதன்மைக் குற்றவாளியை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை. படத்திற்குப் படம் சிவகார்த்திகேயனின் ‘கிராஃப்’ ஏறிக் கொண்டே போகிறது. இந்தப் படத்தின் மூலம் அவரை மாஸ் ஹீரோக்களின் வட்டத்திற்குள் நுழைக்க முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். படத்திற்குப் பெயர்தான் ‘காக்கி சட்டை’யே தவிர எப்போதோ ஒரு முறைதான் சிவா காக்கி சட்டை அணிகிறார். க்ரைம் பிராஞ்ச் கான்ஸ்டபிளாக துடிப்பான இளைஞனராக பரபரப்பாக நடித்திருக்கிறார். ஆக்ஷன் படம்தான் என்றாலும் படத்தில் ஒரே ஒரு சண்டைக் காட்சிதான். அதிகப்படியான காமெடியைக் குறைத்துக் கொண்டு, உடல் மொழியிலும் கம்பீரமான மாற்றத்தைக் கொண்ட வந்து, அட போட வைக்கிறார் சிவகார்த்திகேயன். ஆங்காங்கே, நடிப்பில் ரஜினியும், விஜய்யும் கூட எட்டிப் பார்க்கிறார்கள். சிவகார்த்திகேயன் நடித்து இதுவரை ஏழு படங்களே வந்திருந்தாலும் படத்திற்குப் படம் மலை அளவிற்கு வளர்ச்சி தெரிகிறது. சிவகார்த்திகேயனுக்கு யார் பொருத்தமான ஜோடி என்றால் கண்ணை மூடிக் கொண்டு கூட ஸ்ரீதிவ்யாதான் என்று சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு கெமிஸ்ட்ரி, ஜியாகிரபி, பிசிக்ஸ் எல்லாமே ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. அதிலும் சிவகார்த்திகேயனைப் பார்த்து காதல் பார்வை விடுவதில் எல்லாம் நடிப்பே தெரியவில்லையே. ‘கட்டிக்கிட…’ பாடலில் இடுப்பை என்னமாய் வளைத்து ஆடுகிறார். யாருப்பா அந்த மெயின் வில்லன், பாதி ரகுவரன் மாதிரி இருக்காரு, பேரை விசாரிச்சா விஜய் ராஸ்-னு சொல்றாங்க. கொஞ்சம் கூட அலட்டிக்காம வில்லத்தனம் பண்ணியிருக்கிறார். சிவகார்த்திகேயன் கூட இந்த முறை நகைச்சுவையில் சூரி, சதீஷ் என யாருமில்லை, அந்த வேலையை செவ்வனே செய்திருப்பவர் இமான் அண்ணாச்சி. இந்த காம்பினேஷனும் நன்றாகத்தான் இருக்கிறது. மனோபாலா வரும் காட்சிகள்தான் கொஞ்சம் நீளமாக இழுக்கிறதோ என யோசிக்க வைத்தாலும், அவர் கதாபாத்திரத்தை வைத்துத்தான் வில்லனை நெருங்க வேண்டியதாயிருக்கிறது. அனிருத் இசையில், “இது காக்கி சட்டை…, காதல் கண் கட்டுதே…, கட்டிக்கிட…” பாடல்கள் ஹிட் ரகம். சுகுமாரின் ஒளிப்பதிவு குறிப்பிட வேண்டிய ஒன்று. பல காட்சிகளுக்கான ஒளியமைப்பாகட்டும், வெளிப்புறப் படப்பிடிப்பில் குறிப்பாக ‘காதல் கண் கட்டுதே…பாடலில் ஒவ்வொரு பிரேமும் ஓவியமாகவே தெரிகிறது. காக்கி சட்டை – ‘ஸ்டார்’ க்கும் மேலே…