62வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தமிழ்த் திரையுலகத்திற்கும் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க சில விருதுகள் கிடைத்துள்ளன. அவற்றின் விவரம்…
சிறந்த குழந்தைகள் திரைப்படம் – காக்கா முட்டை
கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரித்துள்ள இந்தப் படத்தை எம். மணிகண்டன் இயக்கியுள்ளார். சுவர்ண கமல் விருது மற்றும் தயாரிப்பாளர் , இயக்குனர் இருவரும் தலா 1,50,000 ரூபாய் பரிசு பெறுகிறார்கள்.
‘காக்கா முட்டை’ படத்துடன் ‘எலிசெபெத் ஏகாதஷி’ என்ற படமும் சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளதால் பரிசுத் தொகையை இரண்டு படங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.
சிறந்த குழந்தை நட்சத்திரம் – ஜே.விக்னேஷ், ரமேஷ் – காக்கா முட்டை
‘காக்கா முட்டை’ படத்தில் அண்ணன், தம்பிகளாக சிறப்பாக நடித்ததற்காக விக்னேஷ், ரமேஷ் இருவரும் தேசிய விருதைப் பெறுகிறார்கள். இருவருக்கும் ரஜத் கமல் விருதும், பரிசுத் தொகை 50,000 ரூபாய் பகிர்ந்தும் அளிக்கப்படுகிறது.
சிறந்த துணை நடிகர் – பாபி சிம்ஹா – ஜிகர் தண்டா
கார்த்திப் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமி மேன், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்த ‘ஜிகர்தண்டா’ படத்தில் பாபி சிம்ஹாவின் நகைச்சுவை கலந்த வித்தியாசமான வில்லத்தனமான நடிப்பு படம் வந்த போதே பலராலும் பாராட்டப்பட்டது. அறிமுகமான ஓரிரு வருடங்களில் தேசிய விருதைப் பெற்றுள்ளார் பாபி சிம்ஹா.
பாபி சிம்ஹாவிற்கு ரஜத் கமல் விருதும், 50,000 ரூபாய் பரிசுத் தொகையும் அளிக்கப்படும்.
சிறந்த படத் தொகுப்பு – விவேக் ஹர்ஷன் – ஜிகர்தண்டா
பல வெற்றிப் படங்களுக்கு படத் தொகுப்பாளராக இருந்த விவேக் ஹர்ஷன் ‘ஜிகர்தண்டா’ படத்திற்காக சிறந்த படத் தொகுப்பாளருக்கான தேசிய விருதைப் பெறுகிறார். தமிழில் “சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், பர்மா, உத்தம வில்லன், ரஜினி முருகன்” ஆகிய படங்களுக்கு விவேக் ஹர்ஷன்தான் படத் தொகுப்பாளர்.
அவருக்கு ரஜத் கமல் விருதும், 50,000 ரூபாய் வரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.
சிறந்த பின்னணிப் பாடகி – உத்தரா உன்னிகிருஷ்ணன் – சைவம்
விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்த ‘சைவம்’ படத்தில் நா.முத்துக்குமார் எழுதிய ‘அழகே…அழகு…’ பாடலைப் பாடியதற்காக உத்தரா உன்னிகிருஷ்ணனுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன் மகளான உத்தரா முதல் முறையாகப் பாடிய பாடலுக்கு விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தராவிற்கு ரஜத் கமல் விருதும், 50,000 ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
சிறந்த பாடலாசிரியர் – நா.முத்துக்குமார்
‘தங்க மீன்கள்’ படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் எழுதிய ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்…’ பாடலுக்கு முதல் முறையாக தேசிய விருது பெற்ற நா.முத்துக்குமார் இப்போது இரண்டாவது முறையாக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார்.
‘சைவம்’ படத்தில் அவர் எழுதிய ‘அழகே…அழகே..’ பாடலுக்கு இப்போது தேசிய விருது கிடைத்துள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் என்ற பெருமையை இதன் மூலம் நா.முத்துக்குமார் பெற்றுள்ளார்.
ஒரு சிறுமியின் பார்வையில் இந்த உலகம் எப்படியெல்லாம் அழகாய் இருக்கிறது என்பதை விளக்கும் விதத்தில் அமைந்த பாடல் அது.
நா.முத்துக்குமாருக்கு ரஜத் கமல் விருதும், 50,000 ரூபாய் பரிசுத் தொகையும் அளிக்கப்படும்.
சிறந்த மாநில மொழித் திரைப்படம் – தமிழ் – குற்றம் கடிதல்
ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன், கிரிஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மா ஜி. இயக்கத்தில் ராதிகா பிரசிதா, பவல் நவகீதன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் இது.
கடந்த ஆண்டு ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்த ‘தங்க மீன்கள்’ படத்திற்கு தேசிய விருது கிடைத்தது, இந்த ஆண்டு ‘குற்றம் கடிதல்’ படத்திற்குக் கிடைத்திருக்கிறது.
பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்ற இந்தப் படத்திற்கு தற்போது தேசிய அளவில் அங்கீகாரமும், விருதும் கிடைத்துள்ளது. தான் இயக்கிய முதல் படத்திலேயே தேசிய விருதைப் பெற்றிருக்கிறார் இயக்குனர் பிரம்மா .ஜி.
தயாரிப்பாளர் ஜேஎஸ்கே. சதீஷ் குமார், இயக்குனர் பிரம்மா .ஜி இருவருக்கும் ரஜத் கமல் விருதும் தலா 1,00,000 ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.
சிறந்த திரைப்படம் பற்றிய புத்தகம் – சிறப்புப் பரிசு
ஜி.தனஞ்செயன் எழுதிய ‘தி பிரைடு ஆப் சினிமா 1931 – 2013’ என்ற புத்தகத்திற்கு திரைப்படம் பற்றிய ஒரு தகுதியான கவனத்தில் கொள்ளக் கூடிய கடும் முயற்சிகளுக்கு மத்தியில் எழுதப்பட்ட புத்தகமாகக் கருதி தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் ஜி.தனஞ்செயனுக்கு அளிக்கப்பட உள்ளது.