ஒரு படத்தில் 6 நாயகிகள் என்பதே ஆச்சரியமான விஷயம். அனைவருக்கும் சரியான விதத்தில் முக்கியத்துவம் கொடுத்து ஒரு படத்தைக் கொடுப்பது சாதாரணமானதும அல்ல.
அறிமுக இயக்குனர் நிசார் ஷபி, ‘7’ என தலைப்பை வைத்திருந்தாலு இழு, இழுவென இழுக்காமல் கொஞ்சம் பரபரப்பாகவே இந்தப் படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
ஆனாலும், 80களிலேயே சினிமாவில் அழிந்து போன சில பாத்திரப் படைப்புகளை அவர் இந்தப் படத்தில் வைத்து நம் பொறுமைகளை சோதித்துள்ளார். குறிப்பாக உதவி போலீஸ் கமிஷனர் ரகுமான் எப்போதும் குடித்துக் கொண்டே இருக்கிறார். ஒரு ஜோல்னாப் பை மாட்டிக் கொண்டால் அவர் ஒரு பத்திரிகையாளர் என அரதப் பழசான கதாபாத்திரப் படைப்பை உருவாக்கியிருக்கிறார்.
வித்தியாசமான கதையாக யோசித்தவர், கதாபாத்திர வடிவமைப்பு, வசனங்கள், சில டெம்பிளேட் காட்சிகள் ஆகியவற்றால் படத்தை அவரே பின்னோக்கி இழுத்துவிடுகிறார்.
நந்திதா ஸ்வேதா, அனிஷா அம்புரோஸ், அதிதி ஆர்யா, த்ரிதா சௌத்ரி ஆகியோர் ஹவிஷ் தான் எங்களது கணவர், அவரைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்கள். ஒரே சமயத்தில் நால்வரும் ஒருவர்தான் தங்களது கணவர் என சொல்லி குழப்புகிறார்கள். போலீஸ் அதிகாரி ரகுமான் ஹவிஷைக் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருக்க, அவரை த்ரிதா கொல்ல முயற்சிக்கிறார். ஏன் இத்தனை குழப்பங்கள் என்பதற்கான விடைதான் 7.
அட ஒரு அற்புதமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தைப் பார்க்கப் போகிறோம் என ஆர்வமுடன் உட்கார்ந்தால், அதை அப்படியே காதல் படமாக மாற்றுகிறார் இயக்குனர். அடுத்து பேய்ப் படமாக இருக்குமோ என ஒரு சந்தேகம் வருகிறது. மீண்டும் காதல் படமாக மாறி, த்ரில்லர் படமாகவும் மாறி, பழி வாங்கும் சம்பவத்துடன் படம் முடிகிறது. அடுத்தடுத்து டிவிஸ்ட், டேர்ன் என இயக்குனர் யோசித்தாலும் அதை சரியான திரைக்கதையால் சொல்ல முடியாமல் கொஞ்சம் திணறிப் போயிருக்கிறார்.
நடிப்பைப் பொறுத்தவரையில் ரெஜினா நடிப்பு நாடகத்தனமாக இருந்தாலும் அவர் கதாபாத்திரம்தான் படத்தின் மையம். ரெஜினாவின் வயதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாட்டிதான் கிளைமாக்சில் மிரட்டுகிறார். இவர்களுக்குப் பிறகு ரகுமான் மிடுக்குடன் நடித்துள்ளார். மற்ற கதாநாயகிகளுக்கு அதிக வாய்ப்பில்லை. நந்திதா, அனிஷா, த்ரிதா ஆகியோருக்கு மட்டும் பேசுவதற்காவது காட்சிகள் உள்ளன. அதிதி ஆர்யா, புஜிதா பொன்னடா பேசாமலே வந்து போகிறார்கள்.
படத்தின் நாயகன் ஹவிஷ் எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரிதான் நடிக்கிறார். பிளாஷ்பேக்கில் மட்டும் கொஞ்சம் பளிச்செனத் தெரிகிறார்.
சென்னை, ஹைதராபாத் என காட்சிகள் மாறி மாறி வருவது வேறு படத்தின் நேட்டிவிட்டியை கூடுதலாகக் குழப்புகிறது.
பாடல்களும், பின்னணி இசையும் இப்படிப்பட்ட படங்களைக் காப்பாற்ற வேண்டும். அதை செய்யத் தவறியிருக்கிறார் சேத்தன் பரத்வாஜ். இயக்குனரே ஒளிப்பதிவாளர் என்பதால் லைட்டிங்கிற்கு நல்ல முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
பெரிய இயக்குனர்கள் கூட ஆறு நாயகிகளை வைத்து படமெடுக்கத் தயங்குவார்கள். அதை செய்ய முயற்சித்திருக்கிறார் இயக்குனர். முதல் அனுபவம் என்பதால் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். அடுத்த படத்தில் அதை சரி செய்வார் என நம்புவோம்.