சீனாவில் சாதிக்குமா 2.0 ?

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட் படமாக 500 கோடி ரூபாயில் தயாராகி கடந்த வருடம் வெளிவந்த படம் ‘2.0’.

இப்படத்தை ஜுலை 12ம் தேதி சீனாவில் 56000 திரைகளில் வெளியிட உள்ளார்கள். சீனாவில் இதுவரையில் அதிக வசூலைக் குவித்த இந்தியப் படமாக அமைந்த ‘டங்கல்’ படம் கூட அங்கு 9000 திரைகளில்தான் வெளியானது.

இந்தியாவில் உள்ள மொத்த தியேட்டர்களின் எண்ணிக்கை 8500 மட்டும்தான். ஆனால், சீனாவில் சுமார் 66000 தியேட்டர்கள் உள்ளன.

‘டங்கல்’ படம் மட்டுமே சீனாவில் வசூலித்த தொகை இந்திய ரூபாய் மதிப்பில் 1300 கோடி. அதற்குப் பிறகு அங்கு வெளிவந்த 8 படங்கள் மொத்தமாக வசூலித்த தொகை அது.

‘பாகுபலி 2’ படம் கடந்த வருடம் மே மாதம் அங்கு வெளியாக 80 கோடி வரை மட்டும்தான் வசூலித்தது.

‘2.0’ படம் 56000 திரைகளில் வெளியாக உள்ளதால் நல்ல வசூலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனா தவிர உலக அளவில் வெளியான 2.0 படம் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகத்தான் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன சினிமா ரசிகர்களுக்கு 2.0 படம் பிடித்துப் போனால் அது ‘டங்கல்’ படம் போல 1000 கோடிக்கும் அதிகமாக வசூலிக்க வாய்ப்புள்ளது. அந்த சாதனையை படம் நிகழ்த்துமா என்பதை இன்னும் ஒரு மாதம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read Previous

இன்று ஜுன் 5, 2019 வெளியான படம் – 7

Read Next

7 – விமர்சனம்