மதன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘வித் லவ்’ திரைப்படம், முதல் காதலின் இனிமையான நினைவுகளையும், அதன் வலிகளையும் அழகியலோடு கலந்து வழங்கும் ஒரு ரொமான்டிக் டிராமா.
குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம், பள்ளி வாழ்க்கையின் உணர்ச்சிகளை மையமாகக் கொண்டு, இளம் தலைமுறையினரின் உள்ளங்களைத் தொடும் வகையில் அமைந்துள்ளது. காதல், நட்பு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி போன்ற அம்சங்களை இணைத்து, பார்வையாளர்களை தங்களது இளமைக்கால நினைவுகளுக்குள் அழைத்துச் செல்லும் இயக்குநரின் முயற்சி பாராட்டுக்குரியது. இதன் மூலம், காதல் தோல்வியடைந்தாலும் அதன் உணர்வுகள் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை உணர்த்துகிறது.
பெரும்பாலானோரின் முதல் காதல் தோல்வியுடன் முடிந்தாலும், அதன் ஞாபகங்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம்மைத் தொட்டு விடும். அத்தகைய ஒரு தருணத்தில் நமது முதல் காதலை ஞாபகப்படுத்துவது மட்டுமின்றி, அதை மீண்டும் தேடும் ஒரு இனிய பயணத்தைத் தூண்டுவதே இந்தக் கதையின் அடிப்படை.
திருமணத்திற்கு குடும்பத்தினர் ஏற்பாடு செய்த அனஸ்வரா ராஜனை சந்திக்கிறார் அபிஷன் ஜீவிந்த். இருவரும் தங்களது விவரங்களை பகிர்ந்து கொள்ளும் போது, தங்களது முதல் காதல் அனுபவங்களையும் பரிமாறுகிறார்கள். அப்போது அனஸ்வராவுக்கு உதிக்கும் ஒரு யோசனையால், இருவரும் சேர்ந்து தங்களது முதல் காதலர்களைத் தேடத் தொடங்குகிறார்கள். இந்தத் தேடல் பயணம் இவர்களுக்கிடையே காதலை உருவாக்கியதா? இல்லையா? என்பதை, மனதின் ஆழத்தில் மறைந்திருக்கும் மகிழ்ச்சியான அல்லது வேதனையான முதல் காதல் தருணங்களை மீட்டெடுக்கும் விதத்தில் விவரிப்பதே ‘வித் லவ்’.
பள்ளிக்கால காதல் என்பது எதிர்பார்க்கைகள் இல்லாத, தூய்மையான மற்றும் முதல் வேதனை நிரம்பிய ஞாபகமாகும். இந்தக் காலகட்டம் காதல், நட்பு மற்றும் சிறிய உணர்ச்சி ஊசலாட்டங்களை உள்ளடக்கிய மறக்க முடியாத ஒரு பகுதி என்பதை இயக்குநர் மதன் அழகுற சித்தரித்து வியக்க வைத்துள்ளார்.
முதலில் பார்க்கும் போது ஈர்க்காவிட்டாலும், பார்க்கப் பார்க்க பிடித்துப் போகும் அம்சங்களுடன், ரசிகர்களின் உள்ளத்தில் நிரந்தர இடம் பிடிக்கும் கதாநாயகனாக தோன்றும் அபிஷன் ஜீவிந்த், பள்ளி வயது மற்றும் இளமைக்காலம் என இரு தோற்றங்களுக்கும் சரியாகப் பொருந்தியுள்ளார். நடிப்பாலும் தன்னை ரசிக்கச் செய்துள்ளார்.
கதாநாயகியாக நடித்த அனஸ்வரா ராஜன், எளிய அழகுடன் சிறப்பான நடிப்பால் கவர்கிறார். சொல்லப்படாமல் போன காதலை மீண்டும் வெளிப்படுத்த வேண்டும் என்ற அவரது முயற்சியும், அந்தப் பயணத்தில் ஏற்படும் உள்ளக்கிடக்கைகளையும் அழகாகக் காட்டியுள்ளார். படம் முழுவதும் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கத் தோன்றும் அளவுக்கு இருந்தாலும், அவரது வசன உச்சரிப்பு நடிகை கல்பனாவை ஞாபகப்படுத்துகிறது. டப்பிங்குக்கு வேறு ஒருவரைத் தேர்ந்தெடுத்திருந்தால், அவரது உடல் மொழிக்கு இன்னும் அழகு கூடியிருக்கும்.
அனிஷா பாத்திரத்தில் நடித்த காவ்யா அனில், சிறு பாத்திரமாக இருந்தாலும், ரசிகர்களின் முதல் காதல் ஞாபகங்களைத் தூண்டும் வகையில் தனது நடிப்பால் மந்திரம் செய்துள்ளார்.
நாயகனின் அப்பாவாக நடித்த தேனி முருகன், பள்ளி ஆசிரியராக சரவணன், நாயகனின் தோழர்களாக ஹரிஷ் குமார், சச்சின் நாச்சியப்பன், சித்தார்த், நாயகியின் பள்ளி தோழிகளாக டிம்பிள் கண்ணா, சாச்சனா, அக்காவாக ஆர்.ஜே.ஆனந்தி ஆகியோரின் பாத்திரங்கள் சிறியவையாக இருந்தாலும், திரைக்கதையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, தனது பணியை தனித்துவமாக்குவதைத் தவிர்த்து, பார்வையாளர்களை தங்களது பள்ளி நாட்களின் ஞாபகங்களுடன் இணைக்கும் வகையில் கவனம் செலுத்தியுள்ளது திரையில் வெளிப்படுகிறது. நாயகன்-நாயகி இருவரின் பயணத்தை அவர்களது கண்ணோட்டத்திலேயே ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்கும் அளவுக்கு காட்சிகளை உருவாக்கியுள்ளார். சில இடங்களில் கேமராவே காதல் பேசுவது போல் தோன்றுகிறது.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கத் தகுந்தவையாக இருந்தாலும், ‘அன்பு’ என்ற சொல்லுக்கு கூடுதல் வலிமை சேர்க்கும் அளவுக்கு இல்லை என்பதை மறுப்பதற்கில்லை. பின்னணி இசை காதலின் இனிமையைப் போலவே உள்ளது.
எடிட்டர் சுரேஷ் குமார், இரு கதாபாத்திரங்களின் பயணத்தை அழகாகவும், சுருக்கமாகவும் அதே நேரம் ஆர்வமூட்டும் வகையிலும் தொகுத்துள்ளார்.
எழுதி இயக்கிய மதன், முதல் காதல் அனுபவங்களை மையமாகக் கொண்டு, தமிழ் சினிமாவில் ஏற்கனவே வந்த படங்களின் தாக்கத்துடன் கையாண்டாலும், தற்கால இளைஞர்களுக்கு ஏற்ற காட்சிகளை உருவாக்கி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.
காலம் சென்றாலும், முதல் காதல் அனுபவம் மனதில் அழியாத தடங்களாக இருந்து, எப்போது நினைத்தாலும் அதே உணர்ச்சியைத் தரும் என்பதை நாயகன்-நாயகி மட்டுமின்றி, பிற பாத்திரங்கள் மூலமும் விவரித்துள்ள இயக்குநர் மதன், அதை வேதனையான அனுபவங்களாகக் காட்டாமல், மகிழ்ச்சியுடன் கடந்து செல்லும் இனிய தருணங்களாக சித்தரித்து, ரசிகர்களை இரண்டு மணி நேரம் காதலும் மகிழ்ச்சியும் நிறைந்த பயணத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.