காதல் என்றாலே பிடிக்காத மகன், மகனை எப்படியாவது காதலிக்க வைக்க வேண்டும் என போராடும் பெற்றோர், அவனை காதலிக்கத் துடிக்கும் ஒரு பெண் இவர்களுக்குள் நடக்கும் போட்டா போட்டிதான் இந்த ‘உயிருக்கு உயிராக’. எஸ்ஆர்எம் கல்லூரியின் தீவிரமான பிரச்சாரப் படமாக மட்டுமே இந்தப் படத்தை உருவாக்க வேண்டும் என இயக்குனர் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பார் போலிருக்கிறது. தடுக்கி விழுந்தால் அந்தக் கல்லூரியை காட்டி விடுகிறார்கள். புகழ் பாட ஆரம்பித்து விடுகிறார்கள். கல்லூரியில் தோட்ட வேலை பார்க்கும் பெண் ‘பிட்’ எடுத்து தூக்கிப் போடுவது வரை கூட கல்லூரியின் புகழ் பாடுகிறார்கள். போதாததற்கு அந்தப் பெண் ஆடிப் பாடி ஆடுகிறார். ம்ம்..என்ன சொல்றது. மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழில் செய்யும் பிரபு – ஸ்ரீரஞ்சனி ஆகியோரின் மகன் சரண் குமார். இவருக்கு காதல் என்றாலே பிடிக்காது. ஆனால், மகனுக்காக பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து காதலியைத் தேடுகிறார்கள் அவரது பெற்றோர். அப்படி விளம்பரத்தைப் பார்த்து வந்து சரண் குமாரைக் காதலிக்கிறார் கவர்னரின் பேத்தியான ப்ரீத்தி தாஸ். ஆனால், சரண் ப்ரீத்தியின் காதலை ஏற்கவில்லை. ப்ரீத்தியும் விடாமல் சரணை துரத்துகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் சரண், ப்ரீத்தியைக் காதலிப்பதாக நினைத்துக் கொண்டு அவரை தேர்வு எழுத முடியாமல் தடுக்கிறார்கள். கவர்னர்தான் இதைச் செய்திருப்பார் என நினைத்து அவரிடம் சண்டை போடச் செல்கிறார் சரண். அப்போதுதான் சரணுக்கு காதல் என்றாலே பிடிக்காது என்ற உண்மை அவருக்குத் தெரிய வருகிறது. அதற்குக் காரணம் என்ன என்பதுதான் பிளாஷ் பேக். கடைசியில் சரண் – ப்ரீத்தி காதல் என்ன ஆகிறது என்பது கிளைமாக்ஸ். பெரிய கவர்னர் பேத்தியா இருந்தாலும் கூட ப்ரீத்தியைக் காதலிக்க மாட்டேன் என ஒற்றைக் காலில் நிற்கும் கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் பொருத்தமாகவே நடித்திருக்கிறார் சரண் குமார். இந்த காலத்தில் இப்படி ஒருவரா ? என்பதே ப்ரீத்தி இவரைக் காதலிக்கவும் காரணமாக அமைகிறது. கொஞ்சம் கன்னட முகச் சாயல் தெரிந்தாலும் நடிப்பில் குறை வைக்கவில்லை சரண். சரணை துரத்தி துரத்திக் காதலிக்கும் ப்ரீத்தி தாஸ், மருத்துவக் கல்லூரி மாணவியாக நடித்திருக்கிறார். தான் படிக்கும் கல்லூரிக்குக் கூடப் போகாமல் சரண் படிக்கும் இன்ஜினியரிங் கல்லூரி வாசலிலேயே பழியாக் கிடக்கிறார். கவர்னரின் பேத்தி இப்படியெல்லாமா நடந்து கொள்வார் என்ற கேள்விகள் எழாமல் இல்லை. ஆனாலும், வரம்பு மீறாமல் சரண் சம்மதத்திற்காக நியாயமாக காத்திருக்கும் பெண்ணாக நடித்து மனம் கவர்ந்திருக்கிறார். பிளாஷ்பேக்கில் சரண் அண்ணனாக வரும் சஞ்சீவ், கொஞ்சமே வந்தாலும் நிறைவு. தவறான பெண்களின் சகவாசம், காதல் இவையெல்லாம் திறமையான ஒரு மாணவனை எப்படி மாற்றி விடும் என்பதற்கு இவரது கதாபாத்திரம் ஒரு உதாரணம். இவரைக் காதலித்து ஏமாற்றுபவராக நந்தனா, நயவஞ்சக நடிப்பில் நன்றாகவே நடித்திருக்கிறார். பிரபு, ஸ்ரீரஞ்சனி இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு பெற்றோர்களா என ஆச்சரியப்பட வைக்கிறார்கள். ஷந்தகுமார் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். மலைப் பிரதேச காட்சிகள் ரம்மியமாக படமாக்கப்பட்டுள்ளன. கல்லூரியின் பிரச்சார நெடியை அறவே தவிர்த்திருக்கலாம். அதிலும் கிளைமாக்சை எடுத்து அப்படியே அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி விடலாம். அந்த அளவிற்கு முற்றிலும் ‘பிரச்சார’ கிளைமாக்ஸ் ஆக மட்டுமே அமைந்துள்ளது. உயிருக்கு உயிராக – சராசரி…