தமிழ் சினிமாவில் அரசியல் படங்கள் என்றாலே, கருப்பு வெள்ளை காலத்தில் ‘பராசக்தி’ படமும், வண்ணப் படக் காலங்களில் ‘அமைதிப் படை’ படமும்தான் பலருக்கும் ஞாபகம் வரும்.
ஆனால், அவற்றுக்கு சிறிதும் குறைவில்லாமல் 80களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய படம் ‘சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்குத் தண்டனை’. அந்தப் படங்களை இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகரன் ‘அமைதிப்படை’ மணிவண்ணனுக்கு முன்பாகவே அதிரடி இயக்குனர் எனப் பெயரெடுத்தவர்.
அவரது நடிப்பில் வந்திருக்கும் ‘டிராபிக் ராமசாமி’ படம் அவருடைய அந்தப் படங்கள் அளவிற்கு பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் ஒரு சில காட்சிகளைத் தவிர உப்புசப்பில்லாத படமாக அமைந்து ஏமாற்றிவிட்டது.
தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் சமூக ஆர்வலர்களில் முதன்மையானவர் என்று பெயரெடுத்துள்ள ‘டிராபிக் ராமசாமியின்’ வாழ்க்கையில் நடந்த சிறு சம்பவங்களை மையமாக வைத்து படமாக்கியுள்ளோம் என்று சொல்லி அவருடைய பெயரையும் சேர்த்து கெடுக்கும் அளவிற்கு இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்கி.
காட்சிக்குக் காட்சி டிராபிக் ராமசாமி பற்றிய அதிரடி காட்சிகளை வைத்து படத்தில் அசத்தியிருக்க வேண்டாமா ?, அதை விட்டு மீன் பாடி வண்டிகளை மட்டும் அவர் எதிர்த்து போராடி வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றதை மட்டுமே பல காட்சிகளாக வைத்து, மோசமாக சித்தரிக்கப்பட்ட நீதிமன்றக் காட்சிகளையும் வைத்து படம் பார்ப்பவர்களை எரிச்சல் அடைய வைத்திருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனங்களில் ஒரு நேர்த்தி இல்லை, ஏதோ பி அன்ட் சி சென்டர் ரசிகர்களை மட்டுமே திருப்திப்படுத்தும் அளவிற்கு தரமில்லாமல் இருக்கிறது.
வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதரின் வாழ்க்கையின் சில சம்பவங்களை எடுத்துக் கொண்டிருந்தாலும், அதை ஒரு யதார்த்த போராட்ட வாழ்வியல் படமாகக் காட்டியிருக்கலாமே..?.
டிராபிக் ராமசாமி கதாபாத்திரத்தில் ஓரளவிற்கு மட்டுமே தன் நடிப்பால் பொருந்திப் போகிறார் எஸ்ஏ. சந்திரசேகரன். படத்தில் உள்ள மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர்களிடம் ஒரு யதார்த்தம் இல்லை, சினிமாத்தனமே மிஞ்சியிருக்கிறது.
இயக்குனர் ஷங்கர் டிராபிக் ராமசாமியின் கதையை படமாக்க விரும்பினேன் என்று சொன்னார், அவர் எடுத்திருந்தால் இந்தப் படம் எப்படியிருந்திருக்கும் என்று மனம் யோசிக்க வைக்கிறது.