தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை எடுக்கும் இயக்குனர்கள் ஒரு சிலர்தான் இருக்கிறார்கள். இருந்தாலும் அந்த புதிய முயற்சியை முற்றிலும் நிறைவான படைப்பாக கொடுக்கும் இயக்குனர்கள் ஒரு சிலரே.
இந்த ‘டிக் டிக் டிக்’ படத்தைப் பொறுத்தவரையில் கதையாக யோசித்து எழுதிய விதத்திலும், அதை காட்சியாக திரையில் காட்டிய விதத்திலும் மட்டுமே இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் ஒரு நிறைவான படைப்பைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் எனப் பாராட்டலாம்.
ஆனால், திரைக்கதையில், படத்தின் திருப்புமுனை, முக்கியமான காட்சிகள் என பல விஷயங்களில் கோட்டை விட்டிருக்கிறார். நம்ப முடியாத அளவிற்கு சர்வ சாதாரணமான காட்சிகளாக, காதில் பூ சுற்றும் காட்சிகளாக அமைத்து பல கேள்விகளை எழுப்பிவிட்டார்.
ஒரு சாதாரண திருடன் ராக்கெட்டில் பயணித்து, விண்வெளியில் வேறு ஒரு நாட்டின் மையத்திற்குள் நுழைந்து அங்கிருக்கும் நியூக்ளியர் ஏவுகணையை கடத்திக் கொண்டு வருகிறார் என்பது இதுவரை வந்த தமிழ் சினிமாக்களிலேயே அதிகபட்ச மசாலாத்தனமாகவும், ஹீரோயிசமாகவும் அமைந்துவிட்டது. ஒரு காட்சியையாவது உண்மைக்கு நெருக்கமாக அமைத்திருந்தால் இந்தப் படம் தமிழ் சினிமாவின் மைல்கல்லாக அமைந்திருக்கும்.
மேஜிக் தெரிந்த திருடன் ஜெயம் ரவி, அவருடைய நண்பர்கள் அர்ஜுனன், ரமேஷ் திலக் ஆகியோர் இந்திய பாதுகாப்புத் துறையால் தேர்ந்தெடுக்கப்பட்டு விண்வெளிக்கு ராக்கெட்டில் அனுப்பப்படுகிறார்கள். இந்தியாவை வந்து தாக்க உள்ள பெரிய எரிகல்லை அழிக்கக் கூடிய சக்தி வாய்ந்த நியூக்ளியர் ஏவுகணை அண்டை நாட்டின் விண்வெளி மையத்தில் உள்ளது. அதை திருடி எடுத்து வருவதுதான் ஜெயம் ரவி அன்ட் கோவிற்கு சொல்லப்பட்ட வேலை. அவர்களுக்கு உதவியாக ராக்கெட்டில் அதிகாரிகள் நிவேதா பெத்துராஜ், வின்சென்ட் அசோகன் செல்கிறார்கள். அந்த ஏவுகணையை அவர்கள் திருடி வந்து, எரிகல்லை அழித்து நாட்டைக் காப்பாற்றினார்களா என்பதுதான் படத்தின் கதை.
படத்தில் எந்தவிதமான விளக்கத்தையும் இயக்குனர் வைக்கவில்லை, ஜெயம் ரவி மேஜிக் தெரிந்த ஒரு திருடன், அவ்வளவுதான், அதுவே திரைக்கதையின் பல ஓட்டைகளை சமாளித்துவிடும். அவரது உதவியாளர்களில் அர்ஜுனன் அண்டை நாட்டு விண்வெளி மைய கம்ப்யூட்டர்களையே ஹேக் செய்யும் திறமைசாலி. ரமேஷ் திலக், மற்றவரை ஏமாற்றி எதிலும் நுழைந்துவிடும் திறமைசாலி. இயக்குனர் சொன்னதை அப்படியே செய்திருக்கிறார்கள். இவர்கள் செய்யும் விஷயங்கள் அனைத்துமே சீரியசாக இருந்தாலும் பார்க்கும் நமக்கு காமெடியாக இருக்கிறது.
நிவேதா பெத்துராஜ் விண்வெளிக்கே பயணிக்கும் திறமைசாலியான அதிகாரி. ஆனால், அவரையும் சில காட்சிகளில் கிளாமராகக் காட்டி தமிழ் சினிமாவின் வழக்கத்தை கடைபிடிக்கிறார்கள். வின்சென்ட் அசோகன் பொறாமைப்படும் ராணுவ அதிகாரி. ஜெயப்பிரகாஷ்தான் படத்தின் வில்லன். அவர்தான் நாட்டைக் காப்பாற்றும் அந்த மிஷனுக்கே தலைவர்.
இமான் இசையில் குறும்பா பாடல் இனிமை. பின்னணி இசையில் பழைய படங்களின் தாக்கம் அதிகம். கலை இயக்குனர் மூர்த்தி, படத்தின் கிராபிக்ஸ் டீம்தான் படத்தை கொஞ்சமாக ரசிக்க வைக்கக் காரணமாக இருக்கிறார்கள்.
ஹாலிவுட் படமாக எடுக்க ஆசைப்பட்டு, வழக்கமான தமிழ் சினிமா மசாலாப் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.