சுதந்திரம் கிடைத்த பிறகும் சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட இன மக்கள், தங்களுக்கான அடையாளத்தையும், சுதந்திரமான வாழ்க்கையையும் பெற முடியாமல் தொடர்ந்து அடக்குமுறைக்கு உள்ளாகும் சூழலை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தி பாரடைஸ்’. அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவதற்காக போராடும் ஒரு சமூகத்தின் கோபத்தையும், அதன் பின்னணியில் இருக்கும் வன்முறையையும் மையமாக வைத்து கதை நகர்கிறது.
பிரிட்டிஷ் இந்தியாவில் இந்திய முதலாளி வர்க்கத்திடம் அடிமைகளாக வாழ்ந்து வந்த சவாரி இன மக்கள், சுதந்திர இந்தியாவிலாவது தங்களுக்கான அடையாளத்துடன் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் தங்களிடம் வைத்திருக்கும் முதலாளி வர்க்கம் அவர்களுக்கான உரிமைகளையும் அடையாளத்தையும் மறுத்து, தொடர்ந்து அவர்களை அடிமைகளாகவே வைத்திருக்க முயற்சிக்கிறது. இதற்கு எதிராக சவாரி இன மக்களும் தொடர்ந்து போராடுகிறார்கள். அந்த இனத்தில் பிறக்கும் ஜடால் என்ற நாயகன் நானி, தனது தாயைப் போலவே அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்து, அடிமை வாழ்க்கையில் இருந்து தனது இன மக்களை மீட்டு அவர்களுக்கான அடையாளத்தை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கிறார். அவரது போராட்டம் வெற்றி பெற்றதா?, இல்லையா? என்பதை இரத்தமும், சடலங்களும் நிறைந்த பின்னணியில் சொல்வதே ‘தி பாரடைஸ்’.
ஜடால் என்ற கதாபாத்திரத்தில் இரட்டை ஜடையுடன் வலம் வரும் நானி, ஆக்ரோஷமான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு தேவையான அழுத்தத்தை கொடுத்திருக்கிறார். குறிப்பாக, கோபம், வலி, ஆவேசம் என கதாபாத்திரத்தின் உணர்வுகளை தனது நடிப்பில் வெளிப்படுத்துகிறார். ஆனால், படம் முழுவதும் அதிகப்படியான வன்முறை காட்சிகள் இடம்பெறுவதால், அவரது நடிப்பு கூட அந்த வன்முறைக்குள் சிக்கிக்கொள்வது போல் தெரிகிறது.
நாயகியாக நடித்திருக்கும் கயாடு லோஹர், கவர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்ட கதாபாத்திரமாக தெரிந்தாலும், நாயகனுக்கு இணையாக பெண் கதாபாத்திரத்தையும் துணிச்சலுடன் வடிவமைத்திருக்கும் விதத்தில் கவனம் ஈர்க்கிறார். அவர் இடம்பெறும் காட்சிகள் படத்தின் வன்முறை நிறைந்த சூழலுக்கு சற்று மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கின்றன. அவரது கதாபாத்திரத்திற்கு இன்னும் அதிக முக்கியத்துவமும், காட்சிகளும் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
வில்லனாக நடித்திருக்கும் மோகன் பாபு, வயதானாலும் தனது கம்பீரம் குறையவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் நடித்திருக்கிறார். இளம் வயது மற்றும் வயதான தோற்றம் என இரண்டு விதமான தோற்றங்களில் வந்தாலும், இரண்டிலும் தனது உடல்மொழி மற்றும் நடிப்பின் மூலம் வில்லன் கதாபாத்திரத்திற்கு தேவையான மாஸ் தன்மையை கொடுத்திருக்கிறார்.
நானியின் அம்மாவாக நடித்திருக்கும் சோனாலி குல்கர்னி, நண்பராக நடித்திருக்கும் சம்பூர்னேஷ் பாபு, தணிகலபரணி, விஷிகா, கிருஷ்ண தேஜா, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சி.எச்.சாய், குப்பையும் சகதியும் நிறைந்த பாரடைஸ் பகுதியையும், அங்கு வசிக்கும் சவாரி இன மக்களின் வாழ்க்கையையும் இயல்பாக பதிவு செய்திருக்கிறார். படம் முழுவதும் செயற்கைத்தனம் அதிகமாக இருந்தாலும், அந்த உலகத்தை பிரமாண்டமான முறையில் காட்சிப்படுத்திய விதம் கவனம் பெறுகிறது. குறிப்பாக, கதையின் வன்முறை நிறைந்த சூழலையும், கதாபாத்திரங்களின் வாழ்க்கை முறையையும் தனது கேமரா மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
அனிருத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் வன்முறை காட்சிகளுக்கும், கதாபாத்திரங்களின் உணர்வுப் போராட்டங்களுக்கும் வலு சேர்க்கும் வகையில் பயணிக்கிறது. குறிப்பாக, கதையின் தீவிரமான தருணங்களில் பின்னணி இசை காட்சிகளின் தாக்கத்தை அதிகரிக்கிறது.
சண்டைக்காட்சிகள் அதிகம் இடம்பெறுவதால், அவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படத்தை நீளமாக பயணிக்க வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் நவீன் நூலி. குறிப்பாக, ஒரே மாதிரியான ஆக்ஷன் காட்சிகள் தொடர்ச்சியாக இடம்பெறுவது படத்தின் வேகத்தை அதிகரிப்பதற்கு பதிலாக பார்வையாளர்களை சோர்வடையச் செய்கிறது. சில காட்சிகளை சுருக்கியிருந்தால் படத்தின் தாக்கம் அதிகரித்திருக்கும்.
அடிமைச் சங்கிலியை உடைத்தெறிய போராடும் ஒரு மனிதன் என்ற ஒற்றை வரியை மையமாக வைத்து படத்தை எழுதி இயக்கியிருக்கும் ஸ்ரீகாந்த் ஓடெலா, அந்த கதையை ஒரே களத்திற்குள் வைத்து நகர்த்தியிருக்கிறார். நாயகன் அடிப்பது, எதிரிகளிடம் இருந்து அடி வாங்குவது, மீண்டும் எழுந்து போராடுவது என படம் தொடங்கியது முதல் முடிவு வரை கிட்டத்தட்ட இதே பாணியிலேயே திரைக்கதை பயணிக்கிறது. இதனால் கதையில் எதிர்பார்ப்பு குறைந்து, ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பு ஏற்படுகிறது.
குறிப்பாக, படத்தின் பெரும்பகுதியை வன்முறை காட்சிகளே ஆக்கிரமித்திருப்பதோடு, அவை யதார்த்தத்தை மீறிய அதீத கற்பனையுடன் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதும் படத்தின் மிகப்பெரிய பலவீனமாக இருக்கிறது. ஒரு சமூகத்தின் அடக்குமுறையையும், அவர்களின் போராட்டத்தையும் அழுத்தமாக பதிவு செய்ய வாய்ப்பு இருந்தும், அதற்கு பதிலாக வன்முறையை முன்னிலைப்படுத்தியிருப்பது கதையின் உணர்வுப்பூர்வமான தாக்கத்தை குறைத்துவிடுகிறது.
நானியின் ஆக்ரோஷமான நடிப்பு, ‘பாரடைஸ்’ என்ற அழுக்கு நிறைந்த பகுதியையும், அங்கு அடிமைகளாக வாழும் மக்களின் தோற்றத்தையும் வடிவமைத்த விதம், பிரமாண்டமான செட்கள் மற்றும் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட அந்த உலகம் என சில அம்சங்கள் ரசிக்கும்படி இருக்கின்றன. ஆனால், படத்தின் அதிகப்படியான நீளம், தொடர்ந்து இடம்பெறும் சண்டைக் காட்சிகள், படம் முழுவதும் ஓடும் ரத்தம் மற்றும் வன்முறை ஆகியவை ஒரு கட்டத்திற்கு மேல் பார்வையாளர்களை சோர்வடையச் செய்வதோடு, கதையை ரசிப்பதற்கும் தடையாக அமைந்து விடுகிறது.