லெனின் பாண்டியன் – விமர்சனம்

மணல் கொள்ளையால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, இயற்கை வளங்களும் தொடர்ந்து சுரண்டப்படும் நிலையில், அதற்கு எதிராக ஒரு விவசாயி சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தால், அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்ன?, அவருக்கு பாதுகாப்பாக நியமிக்கப்படும் காவலர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? என்பதை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘லெனின் பாண்டியன்’.

விவசாயியான கங்கை அமரன், தனது பகுதியில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கிறார். அவரது புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தும் வி.ஏ.ஓ அர்ச்சனா, மணல் கொள்ளையில் ஈடுபடும் லாரிகளை ஆதாரங்களுடன் பிடிக்கிறார். இதனால் ஆத்திரமடையும் மணல் கொள்ளை கும்பல், அவரை கொலை செய்கிறது. இதையடுத்து கங்கை அமரன் நீதிமன்றத்தை நாட, வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறது. மேலும், அவருக்கு ஆயுதம் ஏந்திய காவலர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

உயர் அதிகாரிகளால் பெரிதாக கண்டுகொள்ளப்படாத காவலரான தர்ஷன், கங்கை அமரனுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் நியமிக்கப்படுகிறார். ஆரம்பத்தில் இதை சாதாரண பாதுகாப்புப் பணியாக நினைக்கும் தர்ஷன், வழக்கின் பின்னணி மற்றும் அதன் தீவிரத்தை அறிந்த பிறகு, கங்கை அமரனை எப்படியாவது ஆபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்புடன் செயல்படத் தொடங்குகிறார். மறுபுறம், மணல் கொள்ளை கும்பலுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தும் கங்கை அமரன், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தினாரா?, கங்கை அமரனை காப்பாற்றும் பொறுப்பை ஏற்ற தர்ஷன், அந்த கடமையை வெற்றிகரமாக செய்து முடித்தாரா? என்பதை விறுவிறுப்பாக சொல்வதே ‘லெனின் பாண்டியன்’.

தான் வளர்த்த ஆடு இறந்ததற்கு நியாயம் கேட்கும் அப்பாவியான முதியவராக அறிமுகமாகி, பின்னர் மணல் கொள்ளைக்கு எதிராக போராடும் சமூக அக்கறை கொண்ட மனிதராக பயணிக்கும் கங்கை அமரன், தனது கதாபாத்திரத்தை இயல்பாக உள்வாங்கி நடித்திருக்கிறார். குறிப்பாக, தனது நிலத்தையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க போராடும் காட்சிகளில் அவரது நடிப்பு கவனம் பெறுகிறது.

கங்கை அமரனின் மனைவியாக நடித்திருக்கும் ரோஜா, கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்து கொண்டு அளவான நடிப்பை வழங்கியிருக்கிறார். கணவரின் போராட்டத்தையும், அதனால் குடும்பத்திற்கு ஏற்படும் அச்சத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகளில் தனது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்.

அறிமுக நாயகன் தர்ஷன் கணேசன், ஆரம்பத்தில் தனது வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு அலட்சியமாக செயல்படும் காவலராகவும், பின்னர் கங்கை அமரனின் உயிருக்கு இருக்கும் ஆபத்தை உணர்ந்து தனது கடமையை முழுமையாக செய்ய முயற்சிக்கும் காவலராகவும் இரண்டு விதமான பரிமாணங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தோற்றத்துடன், காவலராக தனது பொறுப்பை உணர்ந்து செயல்படும் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார்.

போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியான், யுகேந்திரன், அர்ச்சனா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எட்வின் சாகே, கிராமத்து பின்னணியை செயற்கைத்தனம் இல்லாமல் இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, கிராமப்புற சூழலையும், மணல் கொள்ளை நடைபெறும் பகுதிகளையும் கதையின் தன்மைக்கு ஏற்ற வகையில் பதிவு செய்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளை எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, பரபரப்பான காட்சிகளில் பதற்றத்தை உருவாக்கும் வகையிலும் தனது கேமராவை பயணிக்க வைத்திருக்கிறார்.

இளையராஜாவின் இசை படத்தின் கதைக்களத்தோடும், கதாபாத்திரங்களின் உணர்வுகளோடும் இணைந்து பயணிக்கிறது. பாடல்கள் மற்றும் பின்னணி இசை காட்சிகளுக்கு கூடுதல் வலு சேர்க்கின்றன.

படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன், முதல் பாதியை வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்த்தியிருக்கிறார். அதே வேகத்தையும் சுறுசுறுப்பையும் இரண்டாம் பாதியிலும் தொடர்ந்து கொடுத்திருந்தால், படத்தொகுப்பின் பணி இன்னும் சிறப்பாக பேசப்பட்டிருக்கும்.

மணல் கொள்ளைக்கு எதிராக போராடும் விவசாயியின் வாழ்க்கையையும், அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் காவலரின் கடமையையும் மையமாக வைத்து படத்தை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் டி.டி.பாலச்சந்திரன், சமூகத்தில் நடக்கும் சில உண்மை சம்பவங்களின் தாக்கத்தை படத்தில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக, சமூகப் பிரச்சனையை வெறும் பின்னணியாக பயன்படுத்தாமல், கதையின் முக்கிய அம்சமாக கையாண்டிருப்பது கவனம் பெறுகிறது.

கதாபாத்திரங்களின் உணர்வுப்பூர்வமான நடிப்பு, நேர்மையான அதிகாரிகளின் நடவடிக்கைகள், மணல் கொள்ளைக்கு எதிராக போராடும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை உள்ளிட்ட அம்சங்களுடன் முதல் பாதி வேகமாகவும் விறுவிறுப்பாகவும் பயணிக்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் அந்த பரபரப்பும் அழுத்தமும் சற்று குறைவது படத்தின் வேகத்தை பாதிக்கிறது. சில காட்சிகளை இன்னும் சுருக்கமாகவும், விறுவிறுப்பாகவும் அமைத்திருக்கலாம். இருந்தாலும், மணல் கொள்ளை போன்ற சமூகப் பிரச்சனையை மையமாக வைத்து இயக்குநர் முன்வைத்திருக்கும் பார்வையும், அதை நேர்மையாக சொல்ல முயற்சித்த விதமும் படத்தின் குறைகளை ஓரளவு மறக்கச் செய்கிறது.

Read Previous

சிவகார்த்திகேயன் 27வது படம் ஆரம்பம்

Read Next

தி பாரடைஸ் – விமர்சனம்