கானா என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களின் இசை என்ற நிலையை மாற்றி, அந்த இசைக்கு பெரிய அளவில் அங்கீகாரம் பெற்றுத்தர வேண்டும் என்ற முயற்சியையும், அதை தொடர்ந்து வரும் தலைமுறைகளும் முன்னெடுப்பதையும் மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மீசைய முறுக்கு 2’. இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவு தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வந்தாலும், சூழ்நிலைகள் அந்த கனவுக்கு தடையாக நிற்கும்போது, அதை அடுத்த தலைமுறை எப்படி வெற்றியாக மாற்றுகிறது என்பதை இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் ஜாலியாக சொல்ல முயற்சித்திருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி.
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, அந்த இசையை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டும் சுருக்கிவிடாமல், பல்வேறு மேடைகளுக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார். மற்ற இசைக்கலைஞர்களைப் போல தானும் பெரிய மேடைகளில் கானா பாடல்களை பாட வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறாமல் போகிறது. அவரது மகனும் அதே கனவுடன் இசைத்துறையில் சாதிக்க முயற்சிக்கிறார். ஆனால், குடும்ப சூழ்நிலைகள் காரணமாக அவரது முயற்சியும் தடைபடுகிறது. இதே கனவை மூன்றாவது தலைமுறையில் சுமக்கும் ஹிப்ஹாப் ஆதி, தனது தாத்தா மற்றும் அப்பாவைப் போலவே தோல்வியடைந்தாரா?, அல்லது அவர்களால் முடியாததை சாதித்து காட்டினாரா? என்பதை ஜாலியான திரைக்கதையுடன் சொல்வதே ‘மீசைய முறுக்கு 2’.
ஹிப்ஹாப் ஆதி வழக்கமான தனது பாணியில், தம்பி, தங்கைகளுக்கு அறிவுரை சொல்வதோடு, அவர்களுடன் சேர்ந்து ஜாலியாக கொண்டாடும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆட்டம், பாட்டம், கலகலப்பு என படம் முழுவதும் உற்சாகமான மனநிலையுடன் பயணிக்கும் ஆதி, அவ்வப்போது சில தத்துவ கருத்துகளையும் பேசி, சென்னை கானாவுக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுத்தர வேண்டும் என்ற நோக்கத்தையும் கதைக்குள் புகுத்தியிருக்கிறார். குறிப்பாக, வடசென்னை மக்களின் வாழ்க்கையோடும், அவர்களின் இசையோடும் தன்னை இணைத்துக் கொள்ளும் முயற்சியிலும் கவனம் ஈர்க்கிறார்.
சைத்ரா ஆச்சார், கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் என மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் வரும் மூன்று நாயகிகளும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை குறையில்லாமல் கையாண்டிருக்கிறார்கள். மூன்று பேருக்கும் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்திற்கு ஏற்ப தங்களது பங்களிப்பை சரியாக வழங்கியிருக்கிறார்கள்.
ஆதியின் நண்பராக நடித்திருக்கும் ஹர்சத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், சாரா, கருணாகரன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம், படம் முழுவதையும் வண்ணமயமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, மூன்று தலைமுறைகளின் காலகட்டங்களையும், அவற்றுக்கு இடையேயான வித்தியாசங்களையும் காட்சிகளின் மூலம் நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார். பாடல் மற்றும் கொண்டாட்ட காட்சிகளிலும் கேமரா இயக்கம் படத்தின் உற்சாகத்தை அதிகரிக்கிறது.
படத்தொகுப்பாளர் ஃபென்னி ஆலிவர், இயக்குநர் உருவாக்கிய காட்சிகளை சரியான வரிசையில் தொகுத்திருப்பதோடு, மூன்று காலகட்டங்களில் கதை பயணித்தாலும் படம் அதிகமாக தொய்வடையாமல் செல்லும் வகையில் காட்சிகளை இணைத்திருக்கிறார்.
எழுதி, இயக்கி, இசையமைத்திருக்கும் ஹிப்ஹாப் ஆதி, முதல் பாகத்தின் மையக்கருவை தொடர்ந்து எடுத்துச் செல்வதோடு, சென்னை கானா கலைஞர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களுக்கான அங்கீகாரம் என்ற புதிய அம்சத்தையும் திரைக்கதையில் இணைத்திருக்கிறார். இளைஞர்களை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் பாடல்கள், காமெடி, கொண்டாட்ட காட்சிகள் என அனைத்தையும் கலவையாக கொடுத்திருக்கிறார்.
இளைஞர்களின் ரசனையை புரிந்து கொண்டு பாடல்களையும், காட்சிகளையும் வடிவமைத்திருக்கும் ஆதி, திரையரங்கையே ஒரு இசை விழா போல் மாற்ற முயற்சித்திருக்கிறார். அதிக எண்ணிக்கையிலான பாடல்களை வைத்து படத்தை ஒரு நீண்ட இசை நிகழ்ச்சியைப் போல நகர்த்தியிருப்பது ஒருபுறம் ரசிக்க வைத்தாலும், இரண்டு பாடல்களை தவிர மற்ற பாடல்களின் வரிகளும், கருத்துகளும் பெரிதாக புரியாதது ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பாக, ஆதி அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கிளைமாக்ஸ் பாடல் கூட எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
திரைப்படம் என்றாலே ஜாலியாகவும், கொண்டாட்டமாகவும் இருக்க வேண்டும் என்ற தனது அணுகுமுறைக்கு ஏற்ப படத்தை உருவாக்கியிருக்கிறார் ஆதி. ஆனால், முதல் பாகத்தின் அதே பாணியில் திரைக்கதை மீண்டும் பயணிப்பது புதுமையான அனுபவத்தை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுக்கிறது. அதே நேரத்தில், பாடல்கள், காமெடி, கொண்டாட்டம், இளைஞர்களை கவரும் காட்சிகள் என படத்தில் ரசிக்க வைக்கும் பல அம்சங்கள் இருப்பதால் அந்த குறைகளை ஓரளவு மறக்க முடிகிறது.
முதல் பாகத்தின் வெற்றியை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற முயற்சியுடன், சென்னை கானா கலைஞர்களுக்கான அங்கீகாரம் என்ற கருத்தையும் இணைத்து தனது ரசிகர்களை மீண்டும் ஒரு முறை திருப்திப்படுத்தியிருக்கும் ஹிப்ஹாப் ஆதி, சில குறைகள் இருந்தாலும், தனது பாணியில் மீண்டும் ஜெயித்து ‘மீசைய முறுக்கி’ இருக்கிறார்.