டோரதி – விமர்சனம்

நட்பு, குடும்ப கெளரவம், ஆணாதிக்கம் மற்றும் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் மனிதர்களின் மன உணர்வுகள் என பல்வேறு அம்சங்களை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘டோரதி’. மதுரை மண்ணின் அதிரடி பின்னணியில் தொடங்கும் கதை, மனிதர்களின் உணர்வுகளுக்குள் பயணித்து, நாம் ஒதுக்கி வைக்கும் சில மனிதர்களின் வலியையும், அவர்களுக்குள் இருக்கும் ஏக்கத்தையும் பேச முயற்சிக்கிறது.

பள்ளி பருவத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக பழகி வரும் சனந்த் மற்றும் ரிஷிகாந்த், அடிதடி செய்வது உள்ளிட்ட எந்த விஷயத்தையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் இளைஞர்களாக வலம் வருகிறார்கள். எதிர்பாராத ஒரு சம்பவத்தால் இருவரும் பிரியும் சூழல் உருவாகிறது. சனந்தை பிரிந்து வேறு மாநிலத்தில் வசித்து வரும் ரிஷிகாந்துக்கு, ஒரு நாள் சனந்தை கொலை செய்ய வேண்டும் என்ற அழைப்பு அவரது தந்தையிடம் இருந்தே வருகிறது. நண்பனை கொலை செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ரிஷிகாந்த், அந்த சூழலை எப்படி எதிர்கொண்டார்?, சனந்தை அவரது குடும்பத்தினரே ரிஷிகாந்த் மூலம் கொலை செய்ய முடிவு செய்தது ஏன்? என்பதை மதுரைக்கே உரித்தான அதிரடியோடும், மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் சொல்வதே ‘டோரதி’.

முன்னணி நடிகர்களை மாஸாக காட்டுவது மட்டுமல்லாமல், சாதாரண மனிதர்களுக்கும் அந்த மாஸ் உணர்வை கொடுப்பதில் தனக்கென ஒரு பாணியை வைத்திருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இந்த படத்தின் மூலம் மனிதர்களால் ஒதுக்கப்படும் சக மனிதர்களின் மனக்குமுறல்களையும், அவர்களுக்குள் இருக்கும் உணர்வுகளையும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். சமூகத்தில் அதிகம் பேசப்படாத ஒரு விஷயத்தை மையமாக வைத்து புதிய விவாதத்திற்கான இடத்தையும் உருவாக்கியிருக்கிறார்.

கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் சனந்த் மற்றும் ரிஷிகாந்த், கதாபாத்திரங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதை தங்களது நடிப்பால் இயல்பாக கையாளக்கூடியவர்கள் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்திருக்கிறார்கள். இருவரது உடல்மொழியும், முகபாவனைகளும் கதையின் உணர்வுகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.

சனந்தின் கதாபாத்திரத்தில் ஏற்படும் திடீர் மாற்றத்தை வெளியில் காட்ட முடியாமலும், அதே நேரத்தில் மனதுக்குள் அடக்கி வைத்திருக்க முடியாமலும் அவர் தவிக்கும் காட்சிகளில் அவரது உடல்மொழியும், முகபாவனைகளும் சிறப்பாக இருக்கின்றன. வசனங்களை விட தனது உடல் அசைவுகள் மூலமாகவே பல உணர்வுகளை கடத்தும் சனந்த், அழுத்தமான காட்சிகளை மிகவும் இயல்பாக கையாண்டிருக்கிறார்.

நண்பனுக்காக எதையும் செய்யத் தயங்காதவராக அறிமுகமாகும் ரிஷிகாந்த், அதே நண்பனையே கொலை செய்ய வேண்டிய சூழலில் சிக்கும்போது ஏற்படும் மனப்போராட்டத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ரோஷமான நடிப்பின் மூலம் கிராமத்து மண்ணின் மனிதனை கண் முன் நிறுத்தும் அவர், நட்புக்கும் கடமைக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். பல அழுத்தமான காட்சிகளையும் எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல் கையாண்டிருக்கும் ரிஷிகாந்த், தனது நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ், டோரதி என்ற கதாபாத்திரத்தில் குறைவான காட்சிகளில் மட்டுமே வந்தாலும், கதையின் முக்கியமான திருப்பத்திற்கு காரணமாக இருக்கும் கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். கதையின் போக்கில் அவரது கதாபாத்திரம் ஏற்படுத்தும் தாக்கம் கவனம் பெறுகிறது.

ராமச்சந்திரன் துரைராஜ், செளந்தராஜன், முத்துக்குமார் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்கள் மூலம் ஆணாதிக்க சிந்தனையையும், கெளரவம் என்ற பெயரில் கொடூரமான முடிவுகளை எடுக்கும் மனநிலையையும் அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களது திரை இருப்பும், நடிப்பும் கதையின் சமூகப் பின்னணிக்கு வலு சேர்க்கிறது.

ஜீவா சுப்பிர்மணியன், கெஜராஜ், ராம்ஸ் உள்ளிட்ட பலர் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வசனங்களையும், காட்சிகளையும் சரியாக பயன்படுத்தி திரைக்கதையில் தங்களுக்கான இடத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எஸ்.திரு, படத்தின் காட்சிகள் மூலம் பார்வையாளர்களை 80-களின் காலகட்டத்திற்குள் அழைத்துச் செல்கிறார். கதாபாத்திரங்களை காட்சிப்படுத்திய விதமும், கதைக்களத்தை பதிவு செய்த விதமும் எளிமையாக இருந்தாலும், அந்த எளிமைக்குள் வலுவான காட்சியமைப்பை கொடுத்திருக்கிறார். படம் முழுவதும் அவரது ஒளிப்பதிவு கதையின் தன்மையோடு இணைந்து பயணிக்கிறது.

இளையராஜாவின் இசை படத்தின் முக்கிய பலமாக பயணிக்கிறது. ‘கல்யாண விருந்து’, ‘முத்துமணி’ உள்ளிட்ட பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அவற்றை காட்சிகளுடன் இணைத்து பார்க்கும்போது, இளையராஜாவின் இசை பல்வேறு உணர்வுகளை பார்வையாளர்களிடம் எளிதாக கடத்துகிறது. பின்னணி இசையில் மோதல், காதல், கோபம், சோகம் என ஒவ்வொரு உணர்வுக்கும் தனித்தனி இசை மூலம் காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கும் இளையராஜா, படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை தனது இசையால் கதையுடன் பயணித்திருக்கிறார்.

கதை எளிமையானதாக இருந்தாலும், அதை லீனியர் முறையில் நகர்த்தியபடியே காட்சிக்கு காட்சி எதிர்பார்ப்பையும், சிறிய திருப்பங்களையும் உருவாக்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா. குறிப்பாக, கதையின் முக்கியமான தருணங்களை தேவையில்லாமல் நீட்டிக்காமல் சரியான வேகத்தில் நகர்த்தியிருப்பது அவரது பணியின் சிறப்பு.

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சரவணன் சந்திரன் இணைந்து எழுதியிருக்கும் கதை, பலரும் வெளிப்படையாக பேசத் தயங்கும் ஒரு விஷயத்தை துணிச்சலுடன் கையில் எடுத்திருக்கிறது. சமூகத்தின் பார்வையில் இருந்து ஒதுக்கப்படும் மனிதர்களின் உணர்வுகளையும், அவர்களைச் சுற்றி இருக்கும் மனநிலைகளையும் கதைக்குள் கொண்டு வந்திருப்பது கவனம் பெறுகிறது.

திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் கார்த்திக் சுப்புராஜ், மாஸ் கமர்ஷியல் படங்களை மட்டும் அல்லாமல், மனிதர்களின் மனதை தொடும் கதைகளையும் தனது பாணியில் சொல்ல முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். எந்த ஒரு இடத்திலும் தேவையில்லாமல் மிகைப்படுத்தாமல், கதையை உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆரம்பத்தில் ஒரு கமர்ஷியல் படத்திற்கான எதிர்பார்ப்பை உருவாக்கி கதையை நகர்த்துபவர், திடீரென்று அதை வேறு ஒரு பாதைக்கு திருப்புவதோடு, பார்வையாளர்களின் மனதில் சில யூகங்களையும் உருவாக்குகிறார். ஆனால், அந்த யூகங்களை அவரே பொய்யாக்கும் விதத்தில் வைத்திருக்கும் திருப்பம் எதிர்பாராததாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.

கார்த்திக் சுப்புராஜ் போன்ற முன்னணி இயக்குநர்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் மனிதர்களைப் பற்றியும், அவர்களின் உணர்வுகளைப் பற்றியும் பேசுவது பாராட்டுக்குரியது. இருப்பினும், கிளைமாக்ஸில் வரும் திடீர் காதல் திருப்பம் மட்டும் கதையுடன் முழுமையாக பொருந்தவில்லை. நட்பில் தொடங்கும் நீண்ட பயணத்தை காதல் மூலம் முடித்து வைக்க முயற்சித்திருப்பது சற்று திணிக்கப்பட்டது போல் தெரிகிறது.

அந்த ஒரு அம்சத்தை தவிர்த்துப் பார்த்தால், மனித உணர்வுகள், நட்பு, குடும்ப கெளரவம் மற்றும் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் மனிதர்களின் மனநிலை என பல முக்கியமான விஷயங்களை பேசும் படைப்பாக ‘டோரதி’ இருக்கிறது. குறிப்பாக, இதுவரை அதிகம் பேசப்படாத ஒரு சமூக பிரச்சனையை மையமாக வைத்து பார்வையாளர்களிடம் விவாதத்தை உருவாக்கும் முயற்சியில் படம் கவனம் ஈர்க்கிறது.

Read Previous

மீசைய முறுக்கு 2 – விமர்சனம்

Read Next

‘லவ்’ வெப் சீரிஸ் – டிரைலர் வெளியீடு