தலைவா – விமர்சனம்

thalaiva location_00012 தயாரிப்பு – ஸ்ரீ மிஸ்ரி புரொடக்ஷன் – எஸ். சந்திரபிரகாஷ் ஜெயின் இணை தயாரிப்பாளர்கள் – ச.பி. சுனில், ச.பி. தினேஷ் வெளியீடு – வேந்தர் மூவீஸ் – எஸ்.மதன் எழுத்து, இயக்கம் – விஜய் இசை – ஜி.வி.பிரகாஷ்குமார் பாடல்கள் – நா.முத்துக்குமார் ஒளிப்பதிவு – நீரவ் ஷா படத்தொகுப்பு – ஆண்டனி சண்டைப் பயிற்சி – சில்வா கலை – ஆர்.கே. நாகுராஜ் நடனம் – சின்னி பிரகாஷ், பிருந்தா, தினேஷ், ஸ்ரீதர், காயத்ரி ரகுராம் மக்கள் தொடர்பு – நிகில்

நடிப்பு – விஜய், அமலா பால், சத்யராஜ், சந்தானம், பொன்வண்ணன், நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், அபிமன்யு சிங் மற்றும் பலர்.

வெளியான தேதி – 9 ஆகஸ்ட் 2013 (தமிழ்நாடு, பாண்டிச்சேரி தவிர) – 20 ஆகஸ்ட் 2013 (தமிழ்நாடு, பாண்டிச்சேரி)

“வில்லன் நாயகனின் இடுப்பில் (நெஞ்சில் குத்தி விட்டால் படம் முடிந்து விடுமே) கத்தியால் குத்தி விடுவார். அந்த குத்துப்பட்ட வலியுடன் நாயகன் வில்லனுடன் சண்டை போடுவார். பதிலுக்கு வில்லன், நாயகனின் குத்துப்பட்ட இடத்தில் அடிக்கடி குத்திக் கொண்டேயிருப்பார். நாயகன் அந்த வலியால் துடித்தாலும், வில்லனை அடித்துத் துவைப்பதை மட்டும் நிறுத்தவே மாட்டார்.”

தமிழ் சினிமாவை நாம் பார்க்க ஆரம்பித்த காலத்திலிருந்து இப்படிப்பட்ட காட்சி எல்லா ‘ஹீரோயிச’ படங்களிலும் இடம் பெறுவது வாடிக்கை. கடந்த சில வருடங்களாக காணாமல் போன இம்மாதிரியான காட்சிகளை இந்த 2013லும் நம்மை பார்க்க வைத்திருப்பதை என்னவென்று சொல்ல….ஒரு பானை சோற்றுக்கு…இது போதும் என நினைக்கிறோம்.

விஜய்யின் ‘ஹீரோயிசம்’, ‘பன்ச் டயலாக்’ , ‘உடலை வளைத்து நெளித்து ஆடும் ஆட்டம்’ ‘உதட்டையே திறக்காமல் பாடலைப் பாடுவது’ என பல படங்களில் பார்த்து, ரசித்து, புளித்துப் போன பல விஷயங்கள் மீண்டும் இந்த ‘தலைவா’ படத்தில் ‘தலை’யெடுக்கக் காரணம் நடிகர் விஜய்யா, இயக்குனர் விஜய்யா…

வெளிநாட்டுத் தழுவல்களை கொடுத்தாலும் உணர்வு பூர்வமான படங்களைக் கொடுத்த இயக்குனர் விஜய், இந்த படத்தில் அதை தொலைத்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கான காரணம் அவருக்கே புரியும்…

டைட்டில் முடிந்து படத்தின் ஆரம்பக்காட்சியான ‘தமிழ் பசங்க’ சம்பந்தப்பட்ட காட்சிகள் அப்பட்டமான ‘பாய்ஸ்’ படக் காட்சியே…‘பசங்க’ – ‘பாய்ஸ்’ நல்ல பொருத்தம்தான்.

விஜய், நீங்க இப்படியெல்லாம் டான்ஸ் ஆடி, போட்டில கலந்து ஜெயிக்கிற மாதிரியான காட்சிகள் எல்லாம் ‘ரசிகன்’ பட காலத்துல செய்ய வேண்டியது.

விஜய்யின் மூன்று விதமான “‘தமிழ் பசங்க’ விஷ்வா, விஷ்வா பாய், விஷ்வா அண்ணா’,தோற்றங்கள் அவரது ரசிகர்களுக்கு வேண்டுமானால் கொண்டாட்டமாக இருக்கலாம். ஏனென்றால், அவரது ரசிகர்கள் ‘நாயகன்’ படத்தை நம்மைப் போல் ‘நாற்பது’ தடவை பார்த்திருக்க மாட்டார்கள்.

அமலா பால், காவல் துறையின் ‘அன்டர்கவர் ஆபரேஷன்’ ஆபீசர். சந்தானத்தை விட்டு அவர் ‘வைஜெயந்தி ஐபிஎஸ்’ விஜயசாந்தி போல் இருக்கிறார் என நாமும் நம்ப வேண்டும் என சொல்ல வைத்திருக்கிறார்கள். அய்யோ பாவம்….போல்தான் இருக்கிறார் அமலா பால். விஜய்க்கு ஈடு கொடுத்து நடனமாடவும் வரவில்லை. காதல், கம்பீரம் என எந்த உணர்வும் முழுமையாக வெளிப்படவில்லை. எதையோ பறி கொடுத்தவர் போலவே இருக்கிறார்.

விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்த ‘ஜோதிகா, ஜெனிலியா, ரீமா சென்’ ஆகியோரது துள்ளலான நடிப்பை கொஞ்சமாவது ஃபாலோ செய்தால் நன்றாக இருக்கும்.

சந்தானம் இந்த படத்தில் நன்றாக சறுக்கியிருக்கிறார். எந்த காட்சியில் நாம் சிரித்தோம் என வீட்டுக்கு வந்து யோசித்தாலும் ஞாபகம் வரவில்லை.

சத்யராஜ், சாந்தமான நடிப்பில் உயர்ந்து தெரிந்தாலும் ‘எங்கேயோ பார்த்த ஞாபகத்தை’ தவிர்க்க முடியவில்லை.

சுரேஷ், பொன்வண்ணன், மனோபாலா, ஒய்.ஜி. மகேந்திரன், நாசர், ‘உள்ளேன் ஐயா’ ரகம்…வில்லன் அபிமன்யு சிங் மிரட்ட முயற்சித்து தோற்றிருக்கிறார்.

ஜி.வி. பிரகாஷ் குமார் , நடிகர் விஜய்க்கு இசையமைக்கும் முதல் படம். அவரது ரசிகர்களின் ‘பல்ஸ்’ தெரிந்து பாடல்களை போட்டிருக்கிறார். “யார் இந்த சாலையோரம்….’ டிவிக்களிலும், ரேடியோக்களிலும் அடிக்கடி ஒளி, ஒலிக்கும்…

என்ன, படத்தோட கதையை பத்தி இதுவரைக்கும் நாங்க ஒன்னுமே சொல்லலையேன்னு நீங்க கேட்கறது தெரியுது…கடந்த 12 நாள்ல வெளிநாட்டுலயும், வெளி மாநிலத்துலயும் படம் பார்த்தவங்க அதை ‘விவரமா’ எழுதிட்டதால , நாங்க விட்டுட்டோம். அதான் டைட்டில் கார்டுலயே சில இயக்குனர்களுக்கு ‘நன்றி’ கார்டு போடறாங்களே…

‘அரசியல்ங்கறது ஒரு வழிப்பாதை மாதிரி….” படத்துல வர்ற ஒரு டயலாக்…

அது சினிமாவுலயும் எதிரொலிக்கும்னு விஜய் நல்லாவே புரிஞ்சிக்கிட்டிருப்பாரு….

 

Read Previous

ஜெய் திறமையான நடிகர் – ஏ.ஆர். முருகதாஸ்

Read Next

‘ராஜா ராணி’ இயக்குனரை வாழ்த்திய ரஜினிகாந்த்

Most Popular