தென் தமிழக கிராமங்களின் மண் மணம் கலந்த வாழ்க்கையையும், வயதான பெண்ணின் தன்னம்பிக்கையையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘தாய் கிழவி’ படம், பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தர முயன்றிருக்கிறது. இயக்குநர் சிவகுமார் முருகேசன், பெண்கள் தங்களின் காலில் நின்று வாழ வேண்டும் என்பதை நகைச்சுவை கலந்து சொல்ல விரும்பியிருந்தாலும், அதீத நாடகத்தனமும் செயற்கைத்தனமும் படத்தை சற்று பின்னுக்குத் தள்ளிவிட்டன.
கணவனை இழந்த ராதிகா சரத்குமார், கடுமையான உழைப்பால் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார். அதைத் தன் பிள்ளைகளுக்கு கொடுக்காமல், தானே உயிரோடு இருக்கும் வரை அனுபவிக்க வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார். வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிப்பதில் கடுமையானவராக இருப்பதால் ஊர் மக்கள் அவரைப் பார்த்தாலே நடுங்குகிறார்கள். மூன்று மகன்களும், ஒரு மருமகனும் சொத்துக்காக அவரது மரணத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.
திடீரென ராதிகாவுக்கு உடல்நிலை பாதிப்படைகிறது. ஊர் முழுவதும் அவரது இறப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், அவர் 160 பவுன் தங்க நகைகளை ஒரே நாளில் வாங்கிய விவரம் மகன்களுக்கு தெரியவருகிறது. ஊர் வழக்கப்படி நகைகள் பெண் பிள்ளைக்குப் போகும் என்பதால், இறப்பை தள்ளிப்போட்டு, நகைகளை யாருக்கும் தெரியாமல் பங்கு போட்டுக் கொள்ள மகன்கள் திட்டம் தீட்டுகிறார்கள். அதனால் அவர்கள் தாயை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள். அவர்கள் நினைத்தது போல் ராதிகா பிழைத்தாரா? நகைகளை கைப்பற்றினார்களா? என்பதை கிராம வாழ்க்கையோடு இணைத்து சொல்கிறது இந்தப் படம்.
பெண் ஒருத்தி வயதானாலும் தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் பிறரின் அனுதாபத்தை எதிர்பார்க்காமல் வாழ வேண்டும் என்பதை நகைச்சுவை உணர்வோடு சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர். ஆனால், அதை அதிகப்படியான நாடக உணர்வும், செயற்கையான தொனியும் ஆக்கிரமித்துவிட்டன.
பவுனுத்தாயி கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடித்திருந்தாலும், அந்தப் பாத்திரத்தின் உண்மையான ஆன்மாவைத் தொட முடியவில்லை. திமீர், தைரியம், தன்னம்பிக்கை ஆகியவற்றை அதிகப்படியான நடிப்பின் மூலம் வெளிப்படுத்த முயன்றிருந்தாலும், கிராமத்து உழைக்கும் பெண்ணின் இயல்பான தோற்றமோ, உடல்மொழியோ எங்கும் பிரதிபலிக்கவில்லை. மேக்கப், உடை, நடை ஆகியவை பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் அளவுக்கு இருக்கின்றன.
சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன், ரைச்சல் ரபேக்கா, முத்துக்குமார், முனீஷ்காந்த், இளவரசு உள்ளிட்டோர் தங்கள் வழக்கமான ஸ்டைலில் நடித்து திரைக்கதைக்கு தேவையான ஆதரவை கொடுத்திருக்கிறார்கள்.
நிவாஸ் கே.பிரசன்னாவின் இசை பாடல்களிலும் பின்னணியிலும் கதாபாத்திரங்களின் உச்சரிப்போடு கலந்து மறைந்துவிடுகிறது. ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார் தென் தமிழக கிராமத்தின் அழகையும் மக்களின் வாழ்க்கையையும் அழகாக படம் பிடித்திருக்கிறார். படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் கதாபாத்திரங்களின் எண்ணிக்கையை கையாள முயன்றிருந்தாலும், நாடகத்தனத்திலிருந்து வெளியே வர முடியவில்லை.
இயக்குநர் சிவகுமார் முருகேசன் கிராம மக்களின் பேச்சு வழக்கங்கள், பழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், சில இடங்களில் அவர்களை அடி முட்டாள்களாக சித்தரித்திருப்பது வருத்தமளிக்கிறது. ரூபாய் எண்ணும் இயந்திரத்தை பயன்படுத்தும் அதே மக்கள், பழைய பாடல் இயந்திரத்தை மட்டும் வைத்திருப்பார்களா என்பது போன்ற யதார்த்தமற்ற காட்சிகள் படத்தின் நம்பகத்தன்மையை பாதிக்கின்றன.
நகைச்சுவை காட்சிகளில் கெட்ட வார்த்தைகளும், காதைப் பிளக்கும் ஒலிகளும் அதிகம் இருப்பதால் திரையரங்கில் சிரிப்பை விட இரைச்சலே அதிகம் கேட்கிறது. பெண்கள் சுயமாக வாழ வேண்டும் என்பதை சில இடங்களில் அழகாக சொல்லியிருந்தாலும், ராதிகாவின் தோற்றமும் நடிப்பும் படத்தை பெருமளவு பாதித்துவிட்டன.
மொத்தத்தில், நல்ல கருத்தும் சில ரசமான காட்சிகளும் இருந்தாலும், முதன்மை கதாபாத்திரத்தின் செயற்கைத்தனமும், அதீத நாடகமும் ‘தாய் கிழவி’யை தடுமாற வைத்துள்ளது.