தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் – விமர்சனம்

tamizhukku-en-ondrai-azhuthavum-review தமிழ்த் திரையுலகில் காதல், குடும்பம், ஆக்ஷன் படங்களைத்தான் அதிகம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு காதலனும் காதலியும் காதலிப்பார்கள், அவர்கள் காதலுக்கு ஏதாவது ஒரு விஷயம் எதிர்ப்பாக இருக்கும் அதை எதிர்த்து காதலர்கள் எப்படிப் போராடுகிறார்கள் என்பதும், தனது குடும்பத்திற்கு எதிராகவோ, அல்லது சட்டத்திற்கு எதிராகவோ செயல்படும் வில்லன்களை அழிக்க நாயகன் போராடுவதும்தான் பெரும்பாலான படங்களில் கதையாக இருக்கும். தற்போது வெளிவரும் பல படங்கள் பழைய ஃபார்முலா படங்களாகத்தான் அதிகமாக இருக்கின்றன. சில படங்கள் மட்டும்தான் இந்தக் காலத்திற்குப் பொருத்தமான நவீனக் கதைகளைக் கொண்ட படங்களாக அமைகின்றன.இந்த ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ இன்றைய காலகட்டத்திற்கேற்ற மாதிரியான, இன்றைய ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற மாதிரியான ஒரு படமாக வெளிவந்திருக்கிறது. மொபைல் போன்களின் பயன்படு சமீப காலமாக மிகவும் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அறிவியில் வளர்ச்சியை மையமாக வைத்து பள்ளிக் கூடங்களில் கட்டுரையைத்தான் எழுத வைப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் ஒரு படத்தையே கொடுத்திருக்கிறார்கள். காந்தப் புயல், மொபைல் போன் நெட்வொர்க் பாதிப்பு, மொபைல் போன் மூலம் குண்டு வெடிப்பு ஆகிய ஆங்கிலப் படங்களுக்கு இணையான கற்பனை, அதற்கேற்ற மாதிரியான நம் ஊர் பின்னணி என தமிழில் வித்தியாசமான ஒரு படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா. ஹாலிவுட் படங்களில் காதில் மாலையையே சூட்டக் கூடிய அளவிற்கு கற்பனையான கதைகள் இருந்தால் ஆச்சரியத்துடன் பார்த்து ரசிப்பார்கள், ஆனால், அதையே நம் ஊரில் எடுத்தால் ஆயிரம் கேள்விகளைக் கேட்பார்கள். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் அறிவியல் சார்ந்த சில டெக்னிக்கல் விஷயங்கள் சாமானிய ரசிகனுக்குப் புரியாமல் இருந்தாலும் அதை எளிய முறையில் சொல்லி புரிய வைத்திருக்கிறார்கள். ஒரு கதையில் மூன்று பயணங்கள், மூன்று ஒரு இடத்தில் சந்தித்துக் கொள்ளும் தருணம் மிக முக்கியமான தருணம், அதுதான் இந்தப் படத்தின் கதை. கொஞ்சம் சறுக்கியிருந்தாலும் பார்ப்பவர்களுக்குப் புரியுமா என்ற நெருடலை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், புத்திசாலித்தனமான ஒரு கதையையும், திரைக்கதையையும் அமைத்த இயக்குனரை தாராளமாகப் பாராட்ட வேண்டும். ஓட்டேரியில் வசிக்கும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நகுல், பல புதிய கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். எதையாவது ஒன்றை செய்து கொண்டேயிருப்பார். இஞ்சினியரிங் படிக்கும் மாணவர்களுக்கே புராஜக்ட் செய்து கொடுக்கும் அளவிற்கு சிறந்த அறிவாளி. சூரிய காந்தப் புயலால் ஏற்பட்ட மொபைல் நெட்வொர்க் பாதிப்பை சரிப்படுத்தும் பணியில் அவர் இறங்குவது ஒரு கிளைமாக்ஸ். ஒரு கட்டுமான நிறுவனத்தில் பிளாட்டுகளை விற்கும் சேல்ஸ் மேனாக இருக்கிறார் தினேஷ். இவருக்கும், தற்கொலைக்கு முயல்பவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதைச் செய்யும், வங்கியில் வேலை பார்க்கும் பிந்து மாதவிக்கும் காதல். ஒரு கட்டத்தில் காதலைச் சொல்ல வரும், பிந்து மாதவி கட்டிக் கொண்டிருக்கும் ஒரு பில்டிங்கில் ஒரு பள்ளத்தில் விழுந்து இடிபாடுகளுக்கிடையே சிக்கிக் கொள்கிறார். அதே சமயம், அந்த பில்டிங் மீது பல டன் எடை கொண்ட ஒரு வாஸ்து கல்லை கிரேனில் பாதி தூக்கியிக்கும் போது கிரேன் ஜாமாகி நின்று விடுகிறது. அது விழுந்தால் பிந்து மாதவி அவ்வளவுதான், அவர் அனுப்பிய எஸ்எம்எஸ், நெட்வொர்க் பாதிப்பால்  தினேஷுக்கு போகாமல் இருக்கிறது. காதலியைத் தேடி அலைகிறார் தினேஷ், இரு ஒரு கிளைமாக்ஸ். சதீஷ், ஒரு கால் டாக்சி டிரைவர். அவருடைய கால் டாக்சியில் மொபைல் போன் மூலம் வெடிக்கும் பாம்  ஒன்றை செட் செய்துவிட்டு, அவரை ஒரு தீவிரவாதி பின் தொடர்ந்து வெடிக்க திட்டமிடுகிறார். ஆனால், நெட்வொர்க் பாதிப்பால் அந்த பாமை வெடிக்க வைக்க முடியாமல் போகிறது. கடைசியில் அந்த பாமிற்கு என்ன ஆனது என்பதும் ஒரு கிளைமாக்ஸ். ஆக, மேலே சொன்ன  இந்த மூன்று நிகழ்வுகளும் தனித் தனியாகப் பயணித்தாலும், ஒவ்வொரு நிகழ்ச்வின் கிளைமாக்சும் மொபைல் போன் நெட்வொர்க் பாதிப்பால் ஒன்றுக்கொன்று தொடர்பாக அமைகின்றன. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் கிளைமாக்ஸ். சிலரைப் பார்த்தால் சாதாரணமாகத் தெரிவார்கள், ஆனால் அறிவுஜீவிகளாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திற்கு அச்சு அசலாய் பொருந்திப் போகிறார் நகுல். ஒன்றுமே தெரியாதவர் போல் முகத்தை வைத்துக் கொண்டு இஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களையே மிரட்டி விடுகிறார். இப்போதுதான் கதாபாத்திரங்களை நோக்கி தேடிப் போக ஆரம்பித்திருக்கிறார் நகுல். அது அப்படியே தொடரட்டும். தினேஷ், மாதிரி ஒரு வித்தியாசமான நாயகனை தமிழ் சினிமாவில் பார்க்க முடியாது. அப்பாவித்தனமான முகத்தாலும், பேச்சாலும் ‘அப்ளாஸ்’ வாங்கி விடுகிறார். அதிலும் பிந்து மாதவியைப் பார்த்து வழிவதில் எல்லாம், அவ்வளவு ஒரு யதார்த்தம். பிந்து மாதவி, புடவையில் கூட அவ்வளவு அழகாகத் தெரிகிறார். இந்தப் படத்தில்தான் துளி கூட கிளாமர் இல்லாமல் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார். நகுல் ஜோடியாக புதுமுகம் ஐஸ்வர்யா தத்தா. பெங்காலிப் பெண்ணாம், நம்ப முடியவில்லை, நம்ம பக்கத்து வீட்டுப் பெண் போலவே இருக்கிறார். நகுல் தோள் மீது கையை வைத்திருக்கும் தனது தோழியின் கையை லாவகமாகத் தள்ளிவிட்டு, இவர் கையை வைக்கும் காட்சி ஒன்றே, அவருடைய காதல் நடிப்பை அழகாக வெளிப்படுத்துகிறது. கால் டாக்சி டிரைவர் சதீஷ், ஷாலு ஷம்மு இருவரிக்கிடையிலான அந்தக் காதல் பேச்சுக்கள் இன்றைய சில இளைஞர்களின் காதல் பேச்சுக்களை சுவாரசியமாக வெளிப்படுத்துகிறது. பல இடங்களில் சிரிக்க வைக்கிறார் சதீஷ். ஊர்வசியின் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டாம், பிள்ளைக்குத் தப்பாமல் இருக்கும் சுவாரசியமான அம்மா. மாணவர்களுக்கு படிப்பு அறிவதான் உள்ளது, பிராக்டிக்கல் அறிவு இல்லை என்று சொல்வது சரி, அதற்காக பிரின்சிபாலுக்கே அறிவு இல்லை என்று சொல்வதெல்லாம் ரொம்பவே ஓவர். தமன் இசையில் ‘சட்டுனு என்னை…’ பாடல் ஹிட் ரகம். கதை, கதாபாத்திரங்கள் ஆகியவற்றை உருவாக்கியிருக்கும் விதம் இந்தப் படத்திற்குப் பெரிய பலம். அறிவியல் சார்ந்த அந்த மொபைல் நெட்வொர்க் பற்றிய விஷயங்கள் அனைவரையும் சென்று சேருமானால், இந்த ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ சிறந்த தமிப் படங்களில் ஒன்றாக இடம் பிடித்துவிடும்.  

Read Previous

இன்றைய ரிலீஸ் – 3 படங்கள்

Read Next

ரஜினி, கமலுடன் சண்டை போட்ட எஸ்.பி.முத்துராமன்