ரஜினி, கமலுடன் சண்டை போட்ட எஸ்.பி.முத்துராமன்

viraivil isai audio launch newsதிருமாருதி பிக்சர்ஸ் சார்பில் மாருதி T.பாலகிருஷ்ணன் தயாரிக்கும் படம் ‘விரைவில் இசை’.

அறிமுக இயக்குநர் வி.எஸ்.பிரபா இயக்குகிறார். பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த, ‘விழா’ படத்தில் நாயகனாக அறிமுகமான, மகேந்திரன் நாயகனாக நடிக்கும் படம் இது. அவருடன் ‘உடும்பன்’ நாயகன் திலீப்பும் நாயகனாக நடிக்கிறார்.

ஸ்ருதி ராமகிருஷ்ணா, அர்ப்பணா நாயகிகளாக நடிக்கிறார்கள். நடிகர் ஜெய்சங்கரின் இரண்டாவது மகன் சஞ்சய் சங்கர் இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகிறார்.

திரையுலகக் கனவில் இருக்கும் இரண்டு இலட்சிய இளைஞர்களின் தேடலின் கதைதான் ‘விரைவில் இசை ’. வெவ்வேறு திசையில், போக்கில் செல்கிற இருவேறு காதல் கதைதான் இந்தப் படம்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நேற்று சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது.

பாடல்களை எஸ்.பி.முத்துராமன் முன்னிலையில் தயாரிப்பாளர் அபிராமிராமநாதன் வெளியிட தயாரிப்பாளர் கேயார், சங்கர் கணேஷ் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் .எஸ்.பி.முத்துராமன் பேசும்போது “இங்கே அபிராமி ராமநாதன் அவரை நடிக்க நான் கூப்பிடவில்லையே என்று வருத்தப்பட்டார். அவரை நடிக்கக் கூப்பிட்டிருந்தால் ஒரு நல்ல அபிராமி மால் கிடைத்திருக்காது. ஒரு நல்ல தயாரிப்பாளர் கிடைத்திருக்க மாட்டார். இன்று படம் எடுப்பது சுலபம், ஆனால் வெளியிடுவது சிரமம். இந்த நிலையில் இங்கே புதிதாக படம் தயாரிக்க வந்துள்ள தயாரிப்பாளர் திருமாருதி பிக்சர்ஸ் டி. பாலகிருஷ்ணனை வரவேற்கிறேன்.

ரஜினி திரையுலகில் நுழையும் போது அவருக்கு ஒரு சவால் இருந்தது. அப்போது நடிப்பில் கொடி கட்டிப் பறக்கும் சிவாஜி இருந்தார். நினைத்த தோற்றத்தில் மாற்றிக் கொண்டு நடிக்கும் கமல் இருந்தார். ‘இவர்களுக்கு இடையில் நான் புகுந்து எப்படி வெற்றி பெறுவது என்று யோசித்தேன். அதனால்தான் எனக்கென்று ஒரு ஸ்டைல், ஸ்பீடு, வேகம் என்பதை என் பாணியாக சேர்த்துக் கொண்டு நடித்தேன். வெற்றி பெற்றேன்.’ என்று தன்னை மாற்றிக் கொண்ட ரஜினியே என்னிடம் கூறியுள்ளார்.

நான் ரஜினியை வைத்து 25 படங்கள் இயக்கிஇருக்கிறேன். ரஜினியிடம் கண்ட அதே ஸ்டைல், அதே வேகம், துறுதுறுப்பை இந்த மகேந்திரனிடம் காண்கிறேன். அந்த வேகம் ஆர்வம், ஈடுபாடு இவரிடமும் இருக்கின்றன. இவரும் நன்றாக வெற்றி பெறவேண்டும். நான் 70 படங்கள் இயக்கியிருக்கிறேன். ஆனால், நான் இயக்குனராக அறிமுகமான ‘கனிமுத்து பாப்பா’ படத்தின் நாயகர்களாக முத்துராமன், ஜெய்சங்கர் நடித்தார்கள். நான் இயக்கிய முதல் கலர் படம் ‘துணிவே துணை’, அதிலும் நாயகன் ஜெய்சங்கர் தான்.

முதல் படத்தில் நடித்த போது அவர்கள் பரபரப்பாக இருந்தார்கள். நான் அவசரப்பட்டு எடுத்தேன், அப்போது என்னைக் கூப்பிட்ட அவர்கள், ‘அவசரப்பட வேண்டாம். நினைக்கிற மாதிரி எடுங்க. நிதானமாக இருங்க, வேண்டுமானால் தேதிகள் கூடுதலாக தருகிறோம்,” என்று சொன்னார்கள்.

அந்தப் படங்கள் வெளியீட்டுச் சிக்கலில் தவித்த போது ஜெய்சங்கர் பேசிய பணத்தில் பாதிதான் வாங்கிக் கொண்டார். ஏவிஎம்மின் ‘முரட்டுக்காளை’யில் அவரை வில்லனாக்கிய போது எங்களை நம்பி அவர் நடிக்க ஒப்புக் கொண்டார். இதையறிந்த ரஜினி அவரை மதிக்கும் வகையில் ஜெய்சங்கரையும், தன்னையும் சம அளவில் விளம்பரப்படுத்தச் சொன்னார். அந்த வில்லன் பாத்திரத்தை வழக்கமானதாக, சாதாரணமாக அமைத்து விடவேண்டாம், தனக்கு இணையாக அவரது பாத்திரத்தையும் பெரிதாக அமைக்க வேண்டும் என்றார். ஜெய்சங்கர் மகன் இந்தப் படத்தில் நடிக்கிறார், மகிழ்ச்சி.

நான் ரஜினியை வைத்து 25 படங்கள் இயக்கியிருக்கிறேன், கமலை வைத்து10 படங்கள் இயக்கியிருக்கிறேன், நடிகர் திலகத்தை வைத்து 3 படங்கள் இயக்கியிருக்கிறேன். அத்தனை படங்களை அவர்களை வைத்து நான் இயக்கியதற்குக் காரணம், எங்களுக்குள் அந்தளவுக்கு புரிதல் இருந்தது.

எங்களுக்குள் சண்டையே வந்ததில்லையா? ரஜினியுடன் கமலுடன் நான் போடாத சண்டைகளா? சண்டையைப் பார்த்தவர்கள், நான் இனி ரஜினியை வைத்து படம் எடுக்கமாட்டேன், கமல்ஹாசனை வைத்துப் படம் எடுக்கமாட்டேன் என்றெல்லாம் சொன்னார்கள். அதுவே எங்களது கடைசி படம் என்றுதான் பேசுவார்கள். ஆனால் அவர்கள் எனக்குத்தான் அதிகப் படங்கள் கொடுத்தார்கள். எங்களுக்குள் தனிமனித ஈகோ இல்லை. நீயா நானா போட்டி இல்லை. படம், காட்சி எப்படி சிறப்பாக வரவேண்டும். என்பதற்கான கருத்து மோதல்தான் அது.

எது சரியென்று நான் அவர்களை சமரசம் செய்யவேண்டும். இல்லையேல் அவர்கள் சொல்வதில் சமரசம் ஆகவேண்டும். எல்லாமே படத்துக்காக மட்டும்தான். 20 ஆண்டுகளில் 70 படங்கள். என் சாதனையா? அல்ல.அது என் படக்குழுவினரின் சாதனை ,அது என் படக்குழுவினரின் வெற்றி. அதேபோல இந்தக் குழுவும் ஒற்றுமையுடன் இருந்து வெற்றி பெறவேண்டும் “என்று வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் இயக்குனர் வி.எஸ்.பிரபா, ஒளிப்பதிவாளர் V.B. சிவானந்தம், அறிமுக இசை அமைப்பாளர் எம்.எஸ்.ராம், நடிகைகள் அர்ப்பணா, சஞ்சனாசிங், ஒய்.ஜி மகேந்திரன், நாயகன் மகேந்திரன், அபஸ்வரம் ராம்ஜி, ஸ்டண்ட் மாஸ்டர் பாண்டியன், பாடலாசிரியர்கள். அண்ணாமலை, வைரபாரதி, நடன இயக்குநர் ஷ்யாம் சுந்தர், ஷாண்டி, ஸ்டுடியோ 9 சுரேஷ் , யூடிவி தனஞ்ஜெயன், மயில்சாமி, பாண்டியராஜன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக தயாரிப்பாளர் மாருதி பாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.

Read Previous

தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் – விமர்சனம்

Read Next

‘காக்கி சட்டை’ – த.நா.வில் 400 திரையரங்குகளில் ரிலீஸ்…