சிங்கம் 2 – விமர்சனம்

singam 2_00004

தயாரிப்பு – பிரின்ஸ் பிக்சர்ஸ் – எஸ். லட்சுமண் குமார்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஹரி

இசை – தேவி ஸ்ரீ பிரசாத்

பாடல்கள் – விவேகா

ஒளிப்பதிவு – பிரியன்

படத்தொகுப்பு – வி.டி. விஜயன், டி.எஸ். ஜெய்

கலை – கதிர்

சண்டைப் பயிற்சி – அனல் அரசு, ராக்கி ராஜேஷ்

நடனம் – பாபா பாஸ்கர், ராஜு சுந்தரம், ராபர்ட்

மக்கள் தொடர்பு – ஜான்சன்

நடிப்பு – சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம், விவேக், முகேஷ் ரிஷி, டானி சபானி, ரகுமான், நாசர், ராதா ரவி, சுமித்ரா, மனோரமா, மன்சூர் அலிகான், தலைவாசல் விஜய், விஜயகுமார் மற்றும் பலர்.

வெளியான தேதி – 5 ஜுலை 2013

ஒரு நல்ல போலீஸ், அநியாயம் செய்யறவங்களை எப்படி எதிர்த்து நின்னு ஜெயிக்கிறாருங்கறத சினிமா கண்டுபிடிச்ச நாள்ல இருந்து நாம பார்த்துட்டு வந்தாலும் இயக்குனர்  ஹரி இந்த ‘சிங்கம் 2’ கொடுத்திருக்கிற விதம்தான் நம்ம ரசிக்க வைக்குது.

படத்தோட ஸ்கிரிப்டை இவர் ரூம் போட்டு உட்கார்நது எழுதுவாரா இல்லை ‘சுமோ’ல வேகமா போய்க்கிட்டே எழுதுவாரான்னு தெரியலை, அவ்வளவு வேகமாக நகருது படம். இரண்டே முக்கால் மணி நேரம்னு படம் கொஞ்சம் நீளமா இருந்தாலும் ஓரிரு காட்சிகளைத் தவிர எதுவுமே தேவையில்லாத காட்சிகள்னு சொல்ல முடியலை.

வழக்கம் போல இயக்குனர் ஹரியோட ஃபேவரிட் ஊரான தூத்துக்குடிலதான் படத்தோட கதை நடக்குது.

‘அன்டர் கவர் ஆபரேஷன்’ நடத்தறதுக்காக போலீஸ் வேலையை விட்டு, ஸ்கூல்ல என்சிசி ஆபீசரா வேலை பார்க்கிறாரு சூர்யா. அப்படியே தூத்துக்குடி கடல் பகுதியை கண்காணிக்கிற வேலையையும் ரகசியமா செஞ்சிட்டு வர்றாரு.

ஒரு சந்தர்ப்பத்துல அதே ஊர்ல இருக்கிற ரகுமான், முகேஷ் ரிஷி இரண்டு பேரும் ஊருக்கு மட்டும் அவங்களுக்குள்ளள விரோதம் இருக்கிறதா நடிச்சிக்கிட்டு, ஒன்னா சேர்ந்து போதைப் பொருள் கடத்தல் தொழில் செய்யறத சூர்யா கண்டுபிடிக்கிறாரு. இவங்களோட வலது கையான ராஜேந்திரன் ஒரு பெண்ணை கடத்தப் போக ஊர்ல கலவரம் வெடிக்குது.

என்சிசி ஆபீசரா இருக்கிற சூர்யா திரும்பவும் டிஎஸ்பி சார்ஜ் எடுத்து, கடத்தப்பட்ட பெண்ணை மீட்டு, அதுக்குக் காரணமான ராஜேந்திரனை கைது பண்றாரு. அந்த சமயத்துல இன்டர்நேஷனல் கிரிமினலான டானி சபானியும் யதேச்சையா கைதாக  வேண்டிய சூழல் ஏற்படுது.

முகேஷ் ரிஷி, ரகுமான் இரண்டு பேருமே டானி சபானி ஆளுங்கறதால அவரை எப்படியாவது விடுவிக்க முயற்சி எடுக்கிறாங்க. இதுல போலீஸ் ஸ்டேஷனையே சூறையாடி டானி சபானையையும், ராஜேந்திரனையும் வெளிய கொண்டுட்டு வர்றாங்க.

தான் கோயிலா நினைக்கிற ஸ்டேஷனையே சூறையாடியதால வெகுண்டெழுந்து சூர்யா, சிங்கமா சீறி எதிரிகளை எப்படி பழி வாங்கறாருங்கறதுதான் படத்தோட பரபரப்பான, விறுவிறுப்பான, சுறு சுறுப்பான மீதி கதை.

‘ஓங்கி அடிச்சால் ஒன்றரை டன் வெயிட்றா’ ன்னு எந்த வசனம் போசாமலேயே ஓங்கி ஓங்கி அடிக்கிறார் சூர்யா. ஒரு ஆக்ஷன் படத்திற்கு இவ்வளவு ஆவேசம் தேவையா என்று கேள்வி வந்தாலும் அந்த ஆவேசத்தில் வேஷம் எதுவுமில்லாதது ரசிக்க வைக்கிறது. போலீஸ் வேலையைப் பற்றியும், போலீஸ் ஸ்டேஷனைப் பற்றியும் அவர் பேசும் வசனம் இதற்கு நிதர்சனம்.

அதிலும் தேசிய கீதம் ஒலித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு லோக்கல் ரவு வந்து உதார் விடும் போதும், டானி சபானி இந்தியன் போலீசைப் பற்றி கேவலமாகப்  பேசும் போதும், முகேஷ் ரிஷியிடம் டானியைப் பிடிப்பதாக சவால் விடும் போதும், சூர்யாவின் நடிப்பில் ‘வெயிட்’ அதிகம்தான். சில நேரங்களில் நம்மையே கூட அடித்து விடுவாரோ என்று சொல்லுமளவிற்கு காட்சிக்குக் காட்சி அடி பின்னி எடுக்கிறார். சூர்யாவின் இந்த ஆவேசமும், வேகமும்தான் படத்தை முன்னணிக்கு எடுத்துச் செல்கிறது.

அனுஷ்கா, கொஞ்சமே வருவது போலத் தோன்றினாலும் படம் முழுவதும் வருகிறார். அதிலும் இரண்டு பாடல்களிலும், அந்த திருமண நிச்சயதார்த்த காட்சியிலும் அழகோ அழகு. நம் பக்கத்தில் படம் பார்த்தவர் பாடல்களில் அனுஷ்காவை ரசிக்காமல்  ‘ஐ போனை’ பார்த்துக் கொண்டிருந்த போது, சூர்யா அடிப்பது போல் அவரை அடிக்க வேண்டும் என்று தோன்றியது. (நாங்கள்லாம் அனுஷ்கா போட்டோவையே அப்படி பார்ப்போம்லே…)

சூர்யாவை ஒருதலையாகக் காதலிக்கும் கேரக்டரில் ஹன்சிகா. ‘ஐயா’ நயன்தாராவை கொஞ்சம் ஞாபகப்படுத்தினாலும், அக்கா அனுஷ்காவின் அழகிற்கு முன் ஹன்சிகா ‘ஆஃப்’ ஆகி விட்டார் என்றே தோன்றுகிறது. ஆனால், ஹன்சிகாவுக்கும், சூர்யாவுக்கும் கனவுலயாவது ஒரு டூயட் வச்சிருக்கலாம். ஹன்சிகா ரசிகர்கள் கோவிச்சிக்க மாட்டாங்களா. கடைசியில் ஹன்சிகாவிற்கு ஏற்படும்  முடிவு நாம் எதிர்பாராதது.

ஸ்கூல் பியூனாக சந்தானம். அடிக்கடி அவர் ஹேர் ஸ்டைல் மாறிக்கிட்டேயிருக்கு. ஆனாலும் , அவரோட ஸ்டைல் மாறவேயில்லை. ‘இந்த வயசுல ஃபிகர் வர்றதும், வயசானா சுகர் வர்றதும் வாழ்க்கைல சகஜம்’னு வழக்கம் போலவே காமெடில தூள் கிளப்பறாரு.

‘எரிமலை’ விவேக், கிடைச்ச கேப்ல அவரும் காமெடி ‘கிடா’வ வெட்டியிருக்காரு.

ஆங்கிலேயே நடிகர் ‘டானி சபானி’தான் மெயின் வில்லன். நமக்குப் புரியற மாதிரி இங்கிலீஷ் பேசறதால நாம தப்பிச்சோம். முகேஷ் ரிஷி வழக்கமான லோக்கல் வில்லன். ரகுமான் ஸ்டைலிஷ் வில்லன்.

விஜயகுமார் அப்பப்ப வந்து டயலாக் பேசி படத்தோட பட்ஜெட்டை ஏத்தி விடற வேலைய பார்த்துடறாரு. நாசர், ராதாரவி, மன்சூர் அலிகான், தலைவாசல் விஜய், மனோரமா, சுமித்ரா இவங்களும் படத்துல இருக்காங்க.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ‘சிங்கம்’ பாட்டும், ‘கண்ணுக்குள்ளே..’ பாட்டும் ஓகே.  இன்னும் கொஞ்சம் பாடல்களுக்காக உழைச்சிருக்கலாம்.

சூர்யா பறந்து பறந்து அடிக்கிறார்னா பிரியன் பறந்து பறந்து படம் பிடிச்சிருக்காரு. ‘ஃபிளை கேம்’,ல இருந்து இருக்கிற சின்ன கேமரா வரைக்கும் பயன்படுத்தியிருப்பாரு போல. நல்ல வெரைட்டி தெரியுது.

அனல் அரசு, ராக்கி ராஜேஷ் சண்டைக் காட்சிகளுக்காக நிறையவே உழைத்திருக்கிறார்கள்.  வி.டி. விஜயன், ஜெய் படத் தொகுப்பில் காட்சிகளில் வேகம் கூடுகிறது. படத்தின் நீளத்தில், ஒரு பதினைந்து நிமிடம் ட்ரிம் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

இயக்குனர் ஹரி – சூர்யா கூட்டணி தொடர்ந்து வெற்றிக் கூட்டணியாக அமைந்துள்ளது.

2010ல் ‘சிங்கம்’, 2013ல் ‘சிங்கம் 2’ அப்ப 2016ல ‘சிங்கம் 3’யா…

Read Previous

‘சிங்கம்’ சிங்கிளாத்தான் வரும்…

Read Next

இளையராஜா காப்பி அடித்தார் – கங்கை அமரன் பேச்சு

Most Popular