பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில், சாம் சி.எஸ். இசையமைப்பில், டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘சத்தியவான் சாவித்திரி’. கீர்த்தி சுரேஷ், மிஷ்கின், சாருகேஷ், பால சரவணன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கணவனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக எமதர்மனிடமே வாதாடி வெற்றி பெற்ற சாவித்திரியின் புராணக் கதையை நினைவுபடுத்தும் வகையில், இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற நீதிமன்றப் பின்னணியில் இப்படத்தின் கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர்.
வழக்கறிஞராக இருக்கும் சாவித்திரிக்கும் (கீர்த்தி சுரேஷ்), தீபக்கிற்கும் (சாருகேஷ்) திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்குப் பிறகு எதிர்பாராத விதமாக தீபக் ஒரு கொலை வழக்கில் சிக்குகிறார். தனது கணவரைக் காப்பாற்ற நீதிமன்றத்தில் போராட வேண்டிய கட்டாயம் சாவித்திரிக்கு ஏற்படுகிறது. ஒருபுறம் கணவரைக் காப்பாற்றும் போராட்டம், மறுபுறம் தனக்கு வழக்கறிஞர் தொழிலைக் கற்றுக்கொடுத்த மூத்த வழக்கறிஞர் மார்க்கண்டேயனை (மிஷ்கின்) எதிர்த்து வாதாட வேண்டிய சூழல் என அடுத்தடுத்த சிக்கல்களுடன் கதை நகர்கிறது.
முதல் பாதியில் கதாபாத்திரங்களின் அறிமுகம், சாவித்திரியின் திருமண வாழ்க்கை, வழக்கறிஞராக அவரது பயணம் என கதை மெதுவாக நகர்கிறது. இதனால் தொடக்கத்தில் சில காட்சிகள் பொறுமையைச் சோதிக்கின்றன. ஆனால் இடைவேளைக்குப் பிறகு கொலை வழக்கின் பின்னணி, விசாரணையில் வெளிப்படும் புதிய தகவல்கள், எதிர்பாராத திருப்பங்கள் என திரைக்கதையில் விறுவிறுப்பு அதிகரிக்கிறது. குறிப்பாக இறுதிக்கட்டத்தில் வெளிப்படும் உண்மையும் கிளைமாக்ஸும் படத்திற்குப் பலம் சேர்க்கின்றன.
கீர்த்தி சுரேஷ் சாவித்திரி கதாபாத்திரத்தில் தனது நடிப்பால் கவனம் பெறுகிறார். கணவரைக் காப்பாற்றுவதற்கான தவிப்பு, நீதிமன்றத்தில் வாதாடும்போது வெளிப்படுத்தும் தன்னம்பிக்கை என உணர்வுப்பூர்வமான காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். மிஷ்கின் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் எதிர்த்தரப்பு வழக்கறிஞர் கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கிறார். நடிப்பில்தான் நாடகத்தனம் சேர்ந்து வருகிறது. சாருகேஷ், பால சரவணன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர். ஷில்பா மஞ்சுநாத் சில காட்சிகளில் வந்து போகிறார்.
சாம் சி.எஸ். இசையில் பாடல்கள் பெரிதாகக் கவரவில்லை என்றாலும், பின்னணி இசை முக்கியமான காட்சிகளுக்கு விறுவிறுப்பைக் கூட்டுகிறது. அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவும், பிரசன்னா ஜி.கே.வின் படத்தொகுப்பும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.
நீதிமன்றக் காட்சிகளில் சில இடங்களில் லாஜிக் தொடர்பான கேள்விகள் எழுகின்றன. மேலும், முதல் பாதியின் மெதுவான திரைக்கதையையும் சில வாதக் காட்சிகளின் நீளத்தையும் குறைத்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமான அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.
கணவரைக் காப்பாற்ற ஒரு பெண் வழக்கறிஞர் நடத்தும் போராட்டத்தை எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்ல முயன்றிருக்கிறது ‘சத்தியவான் சாவித்திரி’.