விமர்சன ரீதியாகவும், திரையரங்குகளிலும் வரவேற்பைப் பெற்ற ‘யாத்திசை’ படத்தை இயக்கிய தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘டெத் இரயில்வே’.
இப்படத்தை ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜெ. கமலக்கண்ணன் தயாரிக்கிறார். சர்தக் கல்யாணி இசையமைக்கும் இப்படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, சேயோன், கிஷோர், பவானி ஸ்ரீ, ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, அசோக் செல்வன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.
இரண்டாம் உலகப்போர் தீவிரமடைந்திருந்த 1944-ம் ஆண்டின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஜப்பானியப் படைகள் பர்மா வழியாக இந்தியாவை நோக்கி முன்னேறிய காலகட்டத்தில் நடைபெற்ற சம்பவங்களையும், இந்திய வீரர்கள் எதிர்கொண்ட போராட்டங்களையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
போரினால் சாதாரண மக்கள் சந்தித்த பாதிப்புகளுடன், உணர்வுப்பூர்வமான காதல் கதையையும் இணைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
படம் குறித்து இயக்குநர் தரணி ராசேந்திரன் கூறுகையில்,
“இரண்டாம் உலகப்போர் தீவிரமடைந்தபோது ஜப்பானியப் படைகள் பர்மா, நாகலாந்து பகுதிகளைக் கைப்பற்றி இந்தியாவை நோக்கி முன்னேறின. இந்த வரலாற்றை நேரடியாகப் படமாக்காமல், அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட துயரங்களைப் பதிவு செய்ய விரும்பினேன். அதுதான் ‘டெத் இரயில்வே’. கதையை எழுதி முடித்த பிறகுதான் அதற்கான நடிகர்களைத் தேர்வு செய்தேன்.
சசிகுமார் இந்திய தேசிய ராணுவத்தின் (INA) கமாண்டராகவும், சமுத்திரக்கனி இந்திய வீரர்களின் தலைவராகவும் நடித்துள்ளனர். அசோக் செல்வன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். ‘சுப்பிரமணியபுரம்’ படத்திற்குப் பிறகு சசிகுமார், சமுத்திரக்கனி இருவரும் நேருக்கு நேர் மோதும் சண்டைக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இப்படத்தை முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக உருவாக்கியுள்ளோம். 1942 முதல் 1944 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற போர் மற்றும் அதனால் சாதாரண மக்கள் எதிர்கொண்ட பாதிப்புகளைப் பதிவு செய்திருக்கிறோம். நாகலாந்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காததால், நாகர்கோவிலில் அரங்குகள் அமைத்து 90 சதவீதப் படப்பிடிப்பை நடத்தினோம். மீதமுள்ள காட்சிகள் சிஜி மற்றும் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. படத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைய இன்னும் ஒரு மாதம் தேவைப்படும். அதன் பிறகே வெளியீட்டுத் தேதி மற்றும் விளம்பரப் பணிகள் குறித்து முடிவு செய்யப்படும்இ” என்று தெரிவித்தார்.
இப்படத்திற்கு ஏ.சி. சார்லஸ் ராஜ் கூடுதல் இசையமைத்துள்ளார். ஆர். சேதுமுருகவேல் ஜெகநாதன் ஒளிப்பதிவு செய்ய, மகேந்திரன் கணேசன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். மாலதி நாராயணன் இணை இயக்குநராகவும், வீரமணி கணேசன் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், லிவி ஜேம்ஸ் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.
மிரட்டல் செல்வா சண்டைப் பயிற்சியையும், சரவணன் ராமச்சந்திரன் ஒலி வடிவமைப்பையும், கே.சி. பூபதி ராஜா ஒலி கலவையையும் கவனித்துள்ளனர். டி.எஸ். ஹரி ஹர சுதீன் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை மேற்கொண்டுள்ளார்.