தயாரிப்பு – ஷாலோம் ஸ்டுடியோஸ் – பிரபு சாலமன், ஜான் மேக்ஸ் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எம். அன்பழகன் இசை – டி. இமான் பாடல்கள் – யுகபாரதி ஒளிப்பதிவு – ஜீவன் படத்தொகுப்பு – நிர்மல் நடிப்பு – சமுத்திரக்கனி, யுவன், மகிமா, சுவாசிகா, தம்பி ராமையா, ஜுனியர் பாலையா மற்றும் பலர்.
தமிழ்த் திரைப்படங்களை எத்தனையோ விதமாக பார்த்து வந்தாலும், சில படங்கள் மட்டுமே சில முக்கியமான சமூகப் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்றன. அப்படி வரும் ஒரு சில படங்களில் இந்த படமும் ஒன்று.
இந்த சமூகத்தை பிரிப்பது ஒன்றே ஒன்றுதான். அது பணம், என்னும் ஆயுதம். பல ஏற்றத் தாழ்வுகளுக்கு இந்த பணமே பிரதானம். பணம் இருக்கிறவன் அவங்க பசங்களை கான்வென்ட்ல படிக்க வைக்கிறான். பணம் இல்லாதவன் அவங்க பசங்களை கவர்மென்ட் ஸ்கூல்ல படிக்க வைக்கிறான்.
பணத்தை பிடுங்கும் தனியார் பள்ளிகளை விட, அன்பாலும் பண்பாலும், ஒரு அரசு பள்ளியை உயர்ந்த பள்ளியாக மாற்ற முடியும் என உழைக்கும் ஒரு உண்மையான அரசுப் பள்ளி ஆசிரியரின் கதைதான் இந்த சாட்டை.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள, வந்தாரங்குடி என்ற ஊருக்கு மாற்றலாகி வருகிறார் ஆசிரியரான சமுத்திரக்கனி. வந்தாரங்குடி பள்ளியில் ஆசிரியர்களின் நிலமையும், மாணவ, மாணவிகளின் சரி வர இல்லாததைக் கண்டு இரண்டையும் திருத்த முயல்கிறார்.
தலைமை ஆசிரியரான ஜுனியர் பாலையா, சமுத்திரக்கனிக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பிக்க, உதவி தலைமை ஆசிரியரான தம்பி ராமையா இதைக் கண்டு பொறுக்க முடியாமல் ‘அரசியல்’ பண்ண ஆரம்பிக்கிறார். இதனிடையே 12ம் வகுப்பு ஒன்றுக்கு வகுப்பு ஆசிரியராக பொறுப்பு ஏற்கும் சமுத்திரக்கனி அந்த அடங்காத மாணவர்களை எப்படி தன் அன்பால் அற்புதமான மாணவர்களாக மாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை.
சுப்பிரமணியபுரம் படத்திற்குப் பிறகு சமுத்திரக்கனிக்கு சரியான தீனி போடும் கதாபாத்திரம். இயக்குனர்களெல்லாம் இப்படி திறமையான நடிகர்களாக களம் இறங்கி விட்டால், திறமையான நடிகர்களாக இருப்பவர்கள் இன்னும் திறமையான நடிப்பை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி விடுவார்கள். இவரின் கதாபாத்திர குணாதிசயத்தை அழகாக உருவாக்கிய இயக்குனர், உடை வடிவமைத்ததில் மட்டும் ஒரு கல்லூரி மாணவர் உடையணிவதைப் போல காட்டியிருப்பதை தவிர்த்திருக்கலாம்.
பள்ளி என்றால் காதல் இல்லாமலா, இங்கும் ஒரு காதல் உண்டு. ஒரே வகுப்பில் படிக்கும் யுவனுக்கும், மகிமாவுக்கும் ஏற்படும் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என வழக்கமான காட்சிகள் உண்டு. யுவன் எப்போதும் ஒரு முறைப்புடனேயே திரிகிறார். மகிமாவுக்கு அந்த வயதுக்குரிய கதாபாத்திரம். பொருத்தமாக இருக்கிறார். நடிக்கவும் நடித்திருக்கிறார்.
படத்தில் தம்பி ராமையாவை வில்லனாக காட்டியிருக்கிறார்கள். ஆரம்பம் முதலே அதிகமாக கத்திக் கொண்டே பேசுகிறார். போகப் போகத்தான் அந்த சத்தம் குறைகிறது. அடக்கி வாசிக்க வைத்திருக்கலாம். உடன் பணி புரியும் பாவா லட்சுமணன் போன்ற அவருடைய ஆதரவு ஆசிரியர்களையே அடிக்கடி அடிப்பது என்பதெல்லாம் சரியான சினிமாத்தனம்.
தலைமை ஆசிரியராக ஜுனியர் பாலையா, சமுத்திரக்கனியின் மனைவியாக சுவாசிகா, அந்த பி.டி. டீச்சர், யுவனின் நண்பனாக வரும் பாண்டி, கிடைத்த காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.
இமானின் இசையில் சகாயனே…மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். அடி ராங்கி ராங்கி…ரசிக்க வைக்கிறது.
ஒரு பள்ளிக் கூடத்தைச் சுற்றியே காட்சிகள் நகர்வதால், யதார்த்தத்தை மீறாமல் ஒளிப்பதிவில் ஜீவனை கொடுத்திருக்கிறார் ஜீவன்.
சின்னச் சின்ன விஷயங்கள் ஒரு குறையாக தெரிந்தாலும், சமூகப் பொறுப்புள்ள ஒரு படத்தைக் கொடுத்ததற்காக ஷாலோம் ஸ்டுடியோவுக்கு ஒரு பெரிய சலாம்…