கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பி.ஜெயசீலன் இசை – சாம்சன் கோட்டூர் பாடல்கள் – நா,முத்துக்குமார், விவேகா, பி.ஜெயசீலன் ஒளிப்பதிவு – யு.கே.செந்தில்குமார் எடிட்டிங் – சுரேஷ் அர்ஷ் தயாரிப்பு – டி.வி.சசி கதைச் சுருக்கம் சராசரி குடும்பத்தைச் சேர்ந்த +2 படிக்கும் மாணவன் தேஜஸ். விளையாட்டில் மட்டும் திறமைசாலியாக இருக்கும் இவர் சரியாகப் படிக்காமல் நண்பர்களுடன் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறார். அப்பா வெங்கடேஷின் கோபத்திற்கும் அடிக்கடி ஆளாகிறார். தேஜஸ் பள்ளியில் வந்து சேரும் புது மாணவி ஐஸ்வர்யா, தேஜஸுடன் நட்பாகப் பழகி அவரை நன்றாகப் படிக்கும் மாணவனாக மாற்றுகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் தேஜஸ், ஐஸ்வர்யா இருவரும் பள்ளியிலிருந்து காணாமல் போகிறார்கள். அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸ் அதிகாரியான கணேஷ் வெங்கட்ராமன் இறங்குகிறார். தேஜஸ், ஐஸ்வர்யா இருவரும் காணாமல் போனார்களா, கடத்தப்பட்டார்களா, அல்லது காதலால் ஓடி விட்டார்களா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. விமர்சனச் சுருக்கம் படிக்கும் மாணவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்று பெற்றோருக்கும் ஒரு பாடம் புகட்டும் படமாக அமைந்திருக்கிறது. மூன்று விதமான நிலைகளைக் கொண்ட குடும்பங்களும், அவர்களின் வீட்டுப் பிள்ளைகள் படிப்பு பற்றியும் யதார்த்தமாக காட்டியிருக்கிறார் இயக்குனர். முன்னணி நடிகர்கள் யாராவது நடித்திருந்தால் பெரிய படமாக அமைந்திருக்கும்.