ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் – விமர்சனம்

OKMK 3103_00020 தமிழில் வித்தியாசமான கதைகள் என்று உண்மையிலேயே சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எப்போதோ ஒரு முறைதான் வருவதுண்டு. ஆனாலும், அதிலும் சில படங்கள் மட்டுமே முழுமையான திரைப்பட வடிவமாக ரசிகர்களைக் கவர்கின்றன. சில படங்கள் வடிவம் பெறுவதில் சறுக்கலைச் சந்தித்து சாதனை புரிய தவறி விடுகின்றன. இந்த படத்தைப் பொறுத்தவரையில் அப்படித்தான் உள்ளது என்று சொல்ல வேண்டும். ‘விதி’ என்ற ஒற்றை வார்த்தை நம் அனைவரது வாழ்க்கையிலும் இடம் பெறும் ஒரு விஷயமாகும். நல்லதோ, கெட்டதோ அதை ‘விதி’ மீது பழி போட்டு அடுத்தவேலையைப் பார்க்கப் போய்விடுவோம். ‘நடக்கும் என்பதே விதி’ என்பார்கள். அப்படிப்பட்ட ‘விதி’ யை வைத்து ஒரு பெண்ணைக் கடத்தும் ‘சதி’ வலையை திரைப்படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிம்புதேவன். வேலை வெட்டி இல்லாத அருள் நிதி, பணக்காரப் பெண்ணான அர்ஷிதாவைக் காதலிக்கிறார். ஆனால், அர்ஷிதாவிற்கு அவரது அப்பா வலுக்கட்டாயமாக வேறு திருமணம் செய்து வைக்க முயல்கிறார். திருமண நாளன்று அர்ஷிதாவைக் கடத்தி வந்தால் 30 லட்ச ரூபாய் தருவதாக அர்ஷிதா அப்பாவின் தொழில் எதிரியான நாசர், அருள்நிதியிடம் சொல்கிறார். நண்பர்களான பிந்து மாதவி, பகவதி பெருமாள் ஆகியோருடன் சேர்ந்து அர்ஷிதாவைக் கடத்தும் வேலையைச் செய்கிறார் அருள்நிதி. இந்த கடத்தல் வேலையில்தான் ‘விதி’யின் விளையாட்டு எப்படியெல்லாம் அமைகிறது என்பதுதான் படம். இந்த மொத்த விளையாட்டையும் மேலோகத்தில் இருந்து சிவபெருமான் செய்கிறார். பிரம்மனுக்கும், நாரதருக்கும் விதியின் வலிமையைப் புரிய வைப்பதற்காக அவர் நடத்தும் நாடகமே ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’. 8.59 மணிக்கு அருள்நிதி அன்ட் கோ வீட்டை விட்டுக் கிளம்பினால் என்ன நடக்கும், 9.00 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால் என்ன நடக்கும், 9.01 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால் என்ன நடக்கும் என ‘ஒரு கன்னியைக்’ கடத்துவதில் ‘மூணு கடத்தல் சம்பவங்களை’ வைத்திருக்கிறார் இயக்குனர். 2001ம் ஆண்டு ஜீவா இயக்கத்தில் ஷாம், சிம்ரன், ஜோதி நடித்து வெளிவந்த ‘12 பி’ படத்தின் சாயல் இந்த படத்திலும் உண்டு. அந்த படத்தில் ஷாம், இன்டர்வியூக்குச் செல்லும் போது, பேருந்தை தவற விட்டதால் என்ன நடந்தது, பேருந்தைப் பிடித்ததால் என்ன நடந்தது என திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். 1998ல் ஜெர்மன் மொழியில் வெளிவந்த ‘ரன் லோலா ரன்’ படத்தின் திரைக்கதை வடிவத்தை அப்படியே காப்பியடித்து மூன்று சம்பவங்களாக இந்த படத்திலும் இணைத்திருக்கிறார் சிம்புதேவன். சாதாரண குடும்பத்துப் பையனாக அருள்நிதி. பணத்துக்காக காதலியைக் கடத்தும் வேலையைச் செய்கிறார். அந்த பணத்தை வைத்துதான் அம்மாவின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் எனச் சொல்லி அங்கு காதலையும் சாகடித்து விடுகிறார்கள். பெரிதாக நடிப்பதற்கு வலுவான காட்சிகள் ஏதும் இல்லாததால் அப்படியே வந்து போவது போலவே தெரிகிறது. அருள் நிதியின் காதலியா அர்ஷிதா ஷெட்டி. பிளாஷ் பேக்கில் கொஞ்சம் காட்சிகளில் , கொஞ்சுவதற்கு மட்டுமே வருகிறார். அருள்நிதியின் தோழியாக பிந்து மாதவி. இவருக்கு அப்பா பட்ட கடனால் பணத் தேவை. அதனால் அருள்நிதியுடன் சேர்ந்து கடத்தல் நாடகத்தில் பங்கு பெறுகிறார். இரண்டு ஆள்கள் மட்டும் கடத்தினா கிளுகிளுப்பு இருக்காதுன்னு ஒரு பெண் கேரக்டரை வச்ச மாதிரியே இருக்கு. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அடிக்கடி ‘கமெண்ட்’ அடித்து ரசிக்க வைத்த பகவதி பெருமாள் தான், இந்த படத்திலும் நகைச்சுவை ஏரியாவில் தனி மெஜாரிட்டியுடன் ஜெயிக்கிறார். அப்பாடா…இவரும் இல்லன்னா, என்ன ஆகறது… சீரியசான கதையில் நகைச்சுவை என்ற பெயரில் சில கதாபாத்திரங்களை வலுக்கட்டாயமாகத் திணித்தது போன்று உள்ளது.  அதிலும் முக்கியமாக நாசர் கேரக்டர், சீரியசான வில்லனாகக் காட்டால் நகைச்சுவை வில்லனாக காட்டுவதெல்லாம் 70களிலேயே முடிந்து போன ஒரு விஷயம். டெல்லி கணேஷ், ஆடுகளம் நரேன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, சிசர் மனோகர் இப்படி பல கதாபாத்திரங்கள்,  படத்தை வேகப்படுத்துவார்கள் என்று பார்த்தால் , வேகத் தடையாகவே இருக்கிறார்கள். நடராஜன் சங்கரன் பின்னணி இசையில் முடிந்தவரை பரபரப்பைக் கூட்டியிருக்கிறார். ஒரு சில பாடல்களையாவது வைத்திருக்கலாம். மூன்று பாகமாக வரும் ஒரே கடத்தல் சம்பவத்தில் மூன்றையும், மூன்று விதமாகக் காட்டியிருக்கலாம். வீடு, சாலை, டீக்கடை, சர்ச் என ஒரே சம்பவங்களை அடுத்தடுத்து காட்டுவதில் சுவாரசியமே இல்லாமல் போய் விட்டது. நல்ல முயற்சி,  ரசிகர்களைக் கவரும் விதத்தில் படமாக்குவதில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர். ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் – ‘கன்னி’ வெடி…

Read Previous

சந்தானம் பட விழாவில் ஷங்கர், ராஜமௌலி

Read Next

இசையா ? நடிப்பா ? – தவிக்கும் இசையமைப்பாளர்கள்…