கிராமத்து மக்களின் அன்றாட வாழ்க்கை, மூடநம்பிக்கைகள், குடும்ப உறவுகள் என அனைத்தையும் தொட்டுச் செல்லும் இந்தத் திரைப்படம், சிறு பட்ஜெட் படங்களுக்கான உதாரணமாகத் திகழ்கிறது. குடும்பத்துடன் பார்க்கும் வகையில் உருவாகியிருக்கும் இது, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு இனிமையான அனுபவத்தைத் தரும்.
கதையின் நாயகனான பரோட்டா முருகேசன், தனது மகனுக்காக காவல் தெய்வம் ஒண்டிமுனிக்கு கிடா பலி கொடுப்பதாக வேண்டுகிறார். அந்த வேண்டுதல் நிறைவேறியதும், ஒரு கிடா குட்டியை வாங்கி வளர்க்கத் தொடங்குகிறார். ஆனால், கிடாவும் மகனும் வளர்ந்த பிறகு, ஊரில் உள்ள இரண்டு பெரிய பன்னாடிகளின் மோதலால் கோவில் விழா நடக்காமல் போகிறது. இதனால், பலியிடும் வாய்ப்பு கிடைக்காமல் போகிறது.
இரு பன்னாடிகளையும் சமாதானப்படுத்தி விழாவை நடத்த வைக்க முருகேசன் பல முயற்சிகள் மேற்கொள்கிறார். இதற்கிடையே, அவரது மகள் சித்ரா நகை போடாததால் மாமியார் வீட்டிலிருந்து விரட்டப்படுகிறார். மறுபுறம், மகன் தனது காதலுக்காக மோட்டார் சைக்கிள் வாங்க ஆட்டை விற்கத் திட்டமிடுகிறார்.
இத்தகைய பிரச்சனைகளுக்கு மத்தியில், முருகேசன் தனது வேண்டுதலை நிறைவேற்றினாரா இல்லையா என்பதை, ஒரு கிராமத்தின் வாழ்வியலாக சித்தரித்திருக்கிறது படம்.
நல்லபாடன் வேடத்தில் பரோட்டா முருகேசன், ஏழை விவசாயியாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். செருப்பின்றி காடு மேடுகளில் நடமாடி, கஷ்டப்பட்டு நடித்து கதாபாத்திரத்தை உயிர்ப்பித்திருக்கிறார். சிறு வேடங்களில் நடித்து வந்த அவருக்கு இப்படம் பெரிய அங்கீகாரமும் விருதுகளும் தரும் என்பது உறுதி.
பெரிய பன்னாடியாக கார்த்திகேசன், சிறிய பன்னாடியாக முருகன் – இருவரும் தங்களது கதாபாத்திரங்களின் உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
மகனாக விஜயன், மகளாக சித்ரா நடராஜன், மாப்பிள்ளையாக விஜய் சேனாதிபதி, பேரனாக சிறுவன், விகடன் உள்ளிட்டோர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வுகள்.
பாடல்கள் இல்லாவிட்டாலும், நடராஜன் சங்கரனின் பின்னணி இசை தனித்து நிற்கிறது.
ஒளிப்பதிவாளர் விமல், கிராமத்து காட்சிகளையும் மக்களின் வாழ்க்கையையும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார்.
எடிட்டர் சதீஷ் குரசோவா, சாதாரண கதையை சுவாரஸ்யமாக்கும் வகையில் காட்சிகளைத் தொகுத்திருக்கிறார்.
இயக்குநர் சுகவனம், சாதாரண கதைக்கருவை திரைக்கதையால் சிறப்பான படைப்பாக மாற்றியிருக்கிறார். கிராம வாழ்வியலை அழகாகக் கையாண்டு, எதிர்பாராத க்ளைமாக்ஸால் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ – கிராமிய சினிமா ரசிகர்களுக்கு கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்!