நீர்ப்பறவை – விமர்சனம்

தயாரிப்பு – ரெட் ஜெயன்ட் மூவீஸ் – உதயநிதி ஸ்டாலின் எழுத்து , இயக்கம் – சீனு ராமசாமி இசை – என்.ஆர். ரகுநந்தன் பாடல்கள் –  வைரமுத்து ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியம் படத்தொகுப்பு – மு. காசிவிஸ்வநாதன் வசனம் – சீனு ராமசாமி, ஜெயமோகன் மக்கள் தொடர்பு – நிகில்

நடிப்பு – விஷ்ணு, சுனைனா, சரண்யா, நந்திதா தாஸ், பூ ராம், அருள்தாஸ், அழகம் பெருமாள், தம்பி ராமையா, பிளாக் பாண்டி, வடிவுக்கரசி, யோகி தேவராஜ் மற்றும் பலர்.

கதை

கடலும் கடல் சார்ந்த ‘நெய்தல்’ இடத்தை மையமாக வைத்து மீனவனாகத் துடிக்கும் ஒருவனின் கதையை இயல்பான விதத்தில் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.

மீனவரான பூ ராம், சரண்யாவின் மகன் விஷ்ணு. மற்றவர்களிடம் பிச்சை எடுத்தாவது குடிக்கும் பழக்கம் கொண்டவர். எந்த வேலைக்கும் போகாமல் குடி, குடியென்று குடித்துக் கொண்டிருப்பவரை ஊரே உதாசீனப்படுத்துகிறது. இப்படிப்பட்டவர் கண்ணில் ஒரு நாள் படுகிறார் ‘இயேசு’வுக்கு ஊழியம் செய்யும் சுனைனா. விஷ்ணு மீது ஒரு நாள் கை வைத்து ஜெபம் செய்யும் சுனைனா மீது காதல் கொள்கிறார் விஷ்ணு. குடி பழக்கத்தில் இருந்து மீண்டு வரும் விஷ்ணுவுக்கு, எந்த வேலையும் இல்லாத காரணத்தால் சுனைனாவை திருமணம் செய்து கொடுக்க மறுக்கிறார் சுனைனாவின் பெரியம்மா.  மீன் பிடி தொழிலுக்கு செல்ல நினைக்கும் விஷ்ணுவுக்கு அவருடைய பிறப்பைப் பற்றி சொல்லி ஊரார் தடையாக இருக்கிறார்கள். எப்படியாவது சொந்த படகு வாங்கி மீன் பிடிக்கச் செல்வதாக சவால் விடுகிறார் விஷ்ணு. அவர் சவாலை நிறைவேற்றினாரா, சுனைனாவை திருமணம் செய்தாரா என்பதுதான் படத்தின் மீதி கதை.

இயக்கம்

அதிகமான படங்களில் பார்த்திருக்காத கடல் பின்னணியை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் படைப்பும் , அதற்கு தேர்ந்தெடுத்துள்ள பொருத்தமான நடிகர்களும் இயக்குனரின் திறமையை வெளிப்படுத்துகின்றன. கிறிஸ்துவக் குடும்பங்களின் பின்னணியில் தமிழ்த் திரைப்படத்தைப் பார்ப்பது அபூர்வமாகி விட்ட நிலையில் இந்த படத்தைப் பார்ப்பது ஒரு ஆறுதல்தான். அனைத்து விஷயங்களிலும் பார்த்துப் பார்த்து செய்த இயக்குனர், ஒரு அதிர்வையோ, தாக்கத்தையோ இந்த படத்தின் மூலம் ஏற்படுத்தாதது ஏன் எனத் தெரியவில்லை. மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதுதான் படத்தின் முக்கிய திருப்புமுனை, அதை போகிற போக்கில் வசனங்களால் மட்டுமே சொல்லியிருப்பது ஏமாற்றம்தான். ஒரு வேளை தேசிய விருதுக்கு பிரச்சனை வரும் என்று எதிர்பார்த்தாரோ என்னமோ ?

நாயகன்

‘தண்ணீர்’அடிப்பதால் ‘நீரை’ விட்டு விலகியிருக்கும் சரியான குடிகாரன் அருளப்ப சாமியாக விஷ்ணு.  நான்கைந்து படங்களுக்குள்ளாகவே நடிப்பில் வியப்பான முன்னேற்றம். நிஜ குடிகாரன் கெட்டான் என சொல்லும் அளவிற்கு எந்நேரமும் ‘குடி போதை’யில் இருப்பவன், இப்படித்தான் இருப்பான் என திரையில் அருமையாக காட்டியிருக்கிறார். நடந்து செல்லும் தள்ளாட்டத்தில் கூட ‘போதை’ நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. சுனைனா மீது கொண்ட காதலால் அவரைச் சுற்றி சுற்றி வரும் ‘காதல் போதை’ யில்  கூட நம்மைக் கவர்கிறார்.   நல்ல கதை வைத்திருக்கும் இயக்குனர்கள் தன்னை நம்பி வரலாம் என இந்த படத்தின் மூலம் உணர்த்தியிருக்கிறார் விஷ்ணு.

நாயகி

இயேசுவுக்கு ஊழியம் செய்யும் எஸ்தர் ஆக சுனைனா. அது எப்படி இவருக்கு மட்டும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நச்சென்று பொருந்துகிறதோ தெரியவில்லை. முக்கால் பாவாடை, சட்டை, கையில் பைபிள், ஒரு பழைய சைக்கிள் படம் முழுவதும் ‘சூப்பர்’ ஆக நடித்திருக்கிறார் சுனைனா. விஷ்ணு குடித்து விட்டுத்தான் வருகிறார் என நினைத்து ‘சாத்தானே ஓடிப் போ’ என அவர் சொல்லும் காட்சியில் தியேட்டரில் அப்படி ஒரு வரவேற்பு. ம்..ம்…இவரைப் போல் ஆயிரம் பெண்களை உலவ விட்டால் போதும், அப்புறம் ‘டாஸ்மாக்’ கடைகளே இருக்காது.

மற்ற நடிகர்கள்

சுனைனாவின் கொஞ்சம் வயதான கதாபாத்திரமாக நந்திதா தாஸ். இவரை இந்த கதாபாத்திரத்தில நடிக்க வைத்ததன் காரணம் சரியாகச் சென்றடையுமா எனத் தெரியவில்லை.

தனக்கு தேசிய விருது கொடுத்து மிக மிகச் சரியே என மீண்டும் உணர்த்தியிருக்கிறார் சரண்யா. இன்னும் சில வருடங்களுக்கு இவரை அடித்துக் கொள்ள யாரும் இல்லை.

சமுத்திரக்கனி கதாபாத்திரம் மூலம் ‘நாசூக்கான’ அரசியல் வசனங்களை பேச வைத்திருக்கிறார்கள்.

விஷ்ணுவின் அப்பாவாக பூ ராம், பாதிரியாராக அழகம் பெருமாள், சிலுவையாக அருள் தாஸ், தமிழாசிரியர் ஜோசப் பாரதியாக தம்பி ராமையா, ‘கள்ளச் சாராயம்’ விற்கும் எபினேசராக வடிவுக்கரசி, விஷ்ணுவின் நண்பனாக பிளாக் பாண்டி, மீனவர் ஆபிரகாமாக தேவராஜ், இன்ஸ்பெக்டராக நடிக்கும் அஸ்வதி…என அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

இசை

என்.ஆர். ரகுநந்தன் இசையில் வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். ‘பற பற…’ பாடலும், ‘தேவன் மகளே…’  இந்த ஆண்டின் ஹிட்டான பாடல்கள் வரிசையில் இடம் பெற்று விடும்.

பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு நெய்தல் நிலத்தை காட்சிக்கு காட்சி அவரது காமிராவில் ‘பட்டுப் புடவை’யாக நெய்திருக்கிறது.

S4S Verdict

கடல் என்றால் ‘ஆழம்’ அதிகம் இருக்கும். கடல் சார்ந்த இந்த ‘கதை’யில் ‘ஆழம்’ குறைவுதான். கடற்கரையில் இருந்தே கடலைப் பார்த்தது போல் ஒரு உணர்வு. கதை என்கிற கடலுக்குள் மூழ்கிய உணர்வு ஏற்படாமல் போய் விட்டது.

 

 

Read Previous

‘யாருடா மகேஷ்’ கல கல காதல் படம்…

Read Next

இன்றைய ரிலீஸ்…

Most Popular