முகமூடி – விமர்சனம்

தயாரிப்பு – யு டிவி மோஷன் பிக்சர்ஸ் – ரோனி ஸ்க்ரூவாலா – சித்தார்த் ராய் கபூர்

இயக்கம் – மிஷ்கின்

இசை – கே

பாடல்கள் – கபிலன், மதன் கார்க்கி, மிஷ்கின்

ஒளிப்பதிவு – சத்யா

படத்தொகுப்பு – காகின்

நடிப்பு – ஜீவா, பூஜா ஹெக்டே, நரேன், செல்வா,  நாசர், கிரீஷ் கர்னார்ட் மற்றும் பலர்.

     தமிழ்த் திரைப்படங்களை,  ஆங்கிலப் படங்களை போல எடுக்க வேண்டும் என்ற ஆசை பல இயக்குனர்களுக்கு உண்டு. அது ஏன் என புரியவில்லை. நாம் ஏன், அடுத்தவர்களைப் போல இருக்க வேண்டும், நாம் நாமாகவே இருக்கக் கூடாதா என பல முறை யோசித்ததுண்டு.

     ஆங்கிலப் படங்களை எடுக்க ஹாலிவுட்டில் இருப்பவர்கள் இருக்கிறார்கள். நாம் தமிழ்ப் படங்களை ஒழுங்காக எடுப்போமே என யாராவது யோசிக்கிறார்களா எனத் தெரியவில்லை. இந்த படம் சம்பந்தமான ஒரு விழாவில் இப்படத்தின் இயக்குனர் மிஷ்கின் பேசியதாக ஒரு ஞாபகம். அதாவது, இன்னும் கொஞ்ச நாட்களில் தமிழ்ப் படங்களைப் பார்த்து ஹாலிவுட்டில் இருப்பவர்கள் படம் எடுக்கப் போகிறார்கள் என ஏதோ ஒரு விழாவில் யாரோ பேசினார்கள். நாம் கேட்க விரும்புவது ஒன்றே ஒன்றுதான். ஏன் இந்த கொலை வெறி ?

     ஜாக்கி சானும், ஜேம்ஸ் பான்ட்டும், ஏன் நாய், பூனை, எலி போன்றவைகள் கூட தமிழ் பேசி நடிக்கும் படங்களை பல தொலைக்காட்சிகளில்  பார்க்கும் நம் வீட்டு சிறுவர், சிறுமியர் கூட அந்த ஆங்கிலப் படங்களில் அடுத்து என்ன வரப்போகிறது என்று சொல்லுமளவிற்கு வளர்ந்து விட்டார்கள். இப்படிப்பட்டவர்களுக்கும் சேர்த்துத்தான் படம் எடுக்க வேண்டும்.

     நிலைமை இப்படிப் போய்க் கொண்டிருக்க வித்தியாசமாக படம் எடுக்கிறோம் என சொல்லிக் கொள்பவர்கள் ஏன் இப்படி எடுக்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. நாட்டில் கதைகளுக்கா பஞ்சம், நிஜ வாழ்வில் எவ்வளவோ விஷயங்கள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. இவற்றை கதைகளாக வடிவமைத்தாலே போதுமான அளவிற்கு படங்களை எடுக்கலாம்.

     1940 களில் வெளிவந்து கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பல படங்கள் எவ்வளவோ விறு விறுப்பாக அமைந்து இன்றும் ரசிக்க வைக்கின்றன. ஆனால், 2012ல் கொலை, கொள்ளை இவற்றை வைத்து ஹைடெக்காக காட்டுகிறோம் என்று சொல்பவர்களைப் பார்த்து நமது ரசிகர்கள் ஏமாறத் தயாராக இல்லை.

     சரி, படத்தின் விமர்சனத்தை விட்டு விட்டு வேறு எதையோ எழுத வேண்டிய நிலைக்கு தள்ளி விட்டது இந்த படம். நமது இயக்குனர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தயவு செய்து ஒரு படம் வெளிவருவதற்கு முன் அந்த படத்தைப் பற்றி அப்படி, இப்படி, ஆஹா, ஓஹோ என பேசுவதை விட்டு விடுங்கள்.

     நீங்கள் பேச வேண்டியதை உங்கள் படம் பேசினால், 50, 100 கொடுத்து படம் பார்க்கும் ரசிகர்கள்  உங்களைப் பற்றியும், உங்கள் படங்களைப் பற்றியும் காலம் முழுவதும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

    நல்ல படங்களை நம் ரசிகர்கள் என்றுமே கைவிட்டதில்லை.

 

Read Previous

பதவி எனக்கு ரீ என்ட்ரி – சாய்குமார்

Read Next

விஜய்யுடன் இணையும் விஜய்

Most Popular