ஒரு திருமண வீடு. ஒரு முதல் இரவு. அதில் மறைந்திருக்கும் மனித உணர்வுகளின் சிக்கல்கள். காதல் தோல்வியும், கட்டாய திருமணமும், கிராமத்து வாழ்வின் எதார்த்தமும் கலந்து வரும் கதைகளை நாம் பலமுறை பார்த்திருக்கலாம். ஆனால் ‘மொத ராத்திரி’ அந்த வழக்கமான வட்டத்தைத் தாண்டி, நகைச்சுவையுடன் சிந்தனையையும் கலந்து பார்வையாளர்களைக் கவர முயல்கிறது. இயக்குநர் ராஜா கருப்புசாமியின் இந்தப் படைப்பு, திருமண இரவின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாகத் திகழ்கிறது.
காதல் தோல்வியால் ஊரை விட்டு துபாய் செல்லும் நாயகன் ரிஷிகாந்த், ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் தன் ஊருக்குத் திரும்புகிறார். அவருக்குத் தெரியாமலேயே குடும்பம் திருமண ஏற்பாடுகளைச் செய்துவிடுகிறது. குடும்பத்தின் நெருக்கடியால் அவர் திருமணத்திற்கு உடன்படுகிறார். நாயகி அனிஷ்மா அனில்குமாருடன் அவரது கல்யாணம் நடைபெறுகிறது.
மொத ராத்திரி அன்று தன் மனைவியிடம் மனம் திறந்து பேச முயலும் ரிஷிகாந்த். ஆனால் அனிஷ்மா அங்கிருந்து வெளியேறி தன் காதலனுடன் ஓட முயற்சிக்கிறாள். உண்மை தெரிந்த பிறகு ரிஷிகாந்த் எடுத்த முடிவு என்ன? அவரது திருமண வாழ்க்கை வெற்றியடைந்ததா? அல்லது அனிஷ்மாவின் காதல் வென்றதா? கிராமத்து மக்களின் உண்மையான வாழ்வியலை நகைச்சுவையுடன் இணைத்துச் சொல்வதே இந்தப் படத்தின் அடிப்படை.
திருமண வீட்டில் நிகழும் சம்பவங்களை இயல்பாகவும், உறவுகளின் மகிழ்ச்சி, வலி, எதிர்பார்ப்பு, மோதல் ஆகியவற்றை யதார்த்தத்திற்கு நெருக்கமாகவும் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் ராஜா கருப்புசாமி, பல இடங்களில் சிரிப்பை வரவழைப்பதோடு சிந்தனையையும் தூண்டுகிறார்.
நாயகனாகத் தோன்றும் ரிஷிகாந்த், தற்போதைய நாயகன் பற்றாக்குறையை நிரப்பும் திறன் கொண்டவர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் நடித்திருக்கிறார். மருது கதாபாத்திரத்தில் அளவோடு நடித்து கதைக்கு வலு சேர்த்துள்ள அவர், பல காட்சிகளில் அமைதியாக இருந்தே தன் உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடிக்கும் அனிஷ்மா அனில்குமார், ‘சிறை’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு கனத்த கதாபாத்திரத்தை அழகாகக் கையாண்டு பாராட்டைப் பெறுகிறார். முதல் பாதியில் குறைவாகப் பேசியிருந்தாலும், இரண்டாம் பாதி முழுவதும் வாய் திறக்காமல் நடித்து, இறுதிக் காட்சியில் தன் மனக்குமுறலை வெளியிட்டு அழும் தருணத்தில் கைதட்டலைப் பெறுகிறார்.
சேத்தன், பக்ஸ், சங்கீதா பாலன், பானுப்பிரியா, வர்ஷினி கார்மேகம், அப்துல் லீ, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் நடிகர்களாக அல்லாமல் கிராமத்து மனிதர்களாகத் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் கதைக்குப் பெரும் ஆதாரமாக அமைந்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சுரேந்தரன் பரஞ்சோதி, கதாபாத்திரங்களைப் போலவே கதைக்களத்தையும் காட்சிகளையும் இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார். திருமண நிகழ்வின் உணர்வை நேரடியாகத் தரும் அவர், இரவு நேரக் காட்சிகளை மிகச் சிறப்பாகக் கையாண்டு கவனத்தை ஈர்க்கிறார்.
பரத் சங்கரின் இசையில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் கதைக்களத்தையும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. பின்னணி இசையில் சில பாடல்களின் ராகம் ஒட்டிக்கொண்டிருந்தாலும், காட்சிகளுக்கு உயிர் ஊட்டியிருக்கிறது.
ஒரே நாளில் நிகழும் கதையாக இருந்தபோதிலும், நேர்த்தியாகக் காட்சிகளைத் தொகுத்து கதையின் இயல்பு தன்மையை மாற்றாமல் முன்னெடுத்திருக்கும் படத்தொகுப்பாளர் அசோக் அர்ஜுனன், ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் அனைவரின் மீதும் பார்வையாளர்களின் கவனத்தைச் செலுத்தும் திறனைச் சிறப்பாகக் காட்டியிருக்கிறார்.
திருமண நிகழ்வில் தொடங்கி மொத ராத்திரியோடு முடியும் இந்தக் கதை, அந்த இடைப்பட்ட நேரத்தில் மனித மனங்களை ஆழமாக ஆராய்ந்திருக்கும் இயக்குநர் ராஜா கருப்புசாமி, காதல் உள்ளிட்ட பல விஷயங்களை மேலோட்டமாகவும் நகைச்சுவையாகவும் பேசியிருந்தாலும், பார்வையாளர்களின் மனதில் ஆழமாகப் பதியும்படி சொல்லியிருக்கிறார்.
கதாபாத்திரங்களை வடிவமைத்த முறையும், அவர்களிடமிருந்து வேலை வாங்கிய திறனும், திருமண வீட்டில் நடக்கும் நிகழ்வை யதார்த்தத்திற்கு மிக நெருக்கமாகக் காட்டிய விதமும், வழக்கமான வணிகச் சினிமாவைத் தாண்டிய ஒரு படைப்பாக இந்தப் படத்தைப் பாராட்ட வைக்கிறது.