தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் ஒரு சிலரே இருக்கிறார்கள். அதில் உள்ள ஒரு சிலரும் கமர்ஷியல் படங்களைத்தான் கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், குழந்தைகளும் ரசிக்கும் விதத்தில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் லதா.
தங்கமும் வைரமும் புதைக்கப்பட்டுக் கிடக்கும் மரகதமலை கீழ் உள்ள ஜமீன்தான் சந்தோஷ் பிரதாப். அவரது மனைவி தீப்ஷிகா. அவர்களுக்கு ஒரே மகன். ஒரு குலதெய்வ பூஜையில் கலந்து கொள்வதைத் தவிர்க்கிறார் ஜமீன்தார். அந்த சமயத்தில் கொள்ளைக் கூட்டத்தினர் மரகதமலையில் உள்ள நகைகளை கொள்ளையடிக்கும் எண்ணத்தில் ஜமீனில் தாக்குதல் நடத்துகிறார்கள். மனைவி, மகனை அனுப்பிவிட்டு அவர்களை எதிர்கொள்கிறார் ஜமீன் சந்தோஷ் பிரதாப். தப்பித்து ஓடும் ஜமீன் மனைவி தீப்ஷிகா தன் மகனைத் தொலைத்தவிடுகிறார். ஒரு முனிவரின் சாபத்தால் தீப்ஷிகா கற்சிலை ஆக மாறிவிடுகிறார்.
உலகை ஆளும் வரம் வேண்டி தவமிருக்கும் முனிவர் ஒருவரின் கையில் சிக்குகிறார் ஜமீன்தார் மகன். அவனை 48 மண்டலங்கள் வளர்த்து ஆளாக்கி அவனை பலி கொடுத்து வரம் பெற நினைக்கிறார் முனிவர். 48வது மண்டலத்தில் இளைஞனாக வளர்ந்து நிற்கும் ஜமீன் மகனுக்கு உண்மைகள் தெரிய வருகிறது. தனது அம்மாவை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிக்கிறார். அப்போதும் ஜமீனை கொள்ளையடிக்க முயற்சிக்கும் கொள்ளையர்களிடம் இருந்து தன் அப்பாவைக் காப்பாற்ற போராடுகிறார். இவற்றின் முடிவு என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
அந்தக் காலத்தில் அம்புலிமாமா கதைப் புத்தகம் சிறுவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த ஒன்று. சரித்திரக் கதைகள், மாயாஜாலக் கதைகள் என அதில் நிறைய இடம் பெறும். அப்படியான ஒரு கதையை இந்தப் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுடன் நிறைவாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் லதா. பார்ப்பதற்குக் குறைந்த பட்ஜெட் கிராபிக்ஸ் எனத் தெரிந்தாலும் அதை சமாளித்து ஒரு நிறைவான மேக்கிங் படமாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
ஜமீன்தார் ஆக சந்தோஷ் பிரதாப், அவரது மனைவியாக தீப்ஷிகா, அவரது அண்ணனாக தீரஜ் ஆகியோர் நிறைவாக நடித்திருக்கிறார்கள். பூதங்களாக தம்பி ராமையா, ஜெகன் இருவரும் குட்டி குழந்தைகளை சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். சிறுவர்களாக அரிமா வர்மன், கலைக்கோவர்மன் இயல்பாய் நடித்திருக்கிறார்கள்.
படத்தில் குறிப்பிட வேண்டிய ஒன்று பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவு. சிறிய பட்ஜெட் படம் என்பது தெரியாமல் படத்தின் ஒளித்தரத்தில் அழகுணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார். காடு, மலை சம்பந்தப்பட்ட காட்சிகள் அழகாய் படமாக்கப்பட்டிருக்கிறது. எல்வி முத்து கணேஷ் இசையும் குறை வைக்கவில்லை. புலி, கொரில்லா குரங்கு, அவதார் பறவை போன்ற உயிரினம், பாம்புகள் என கிராபிக்ஸ் காட்சிகள் அவ்வப்போது வந்து போகின்றன.
இந்த கோடை விடுமுறைக்கு குழந்தைகளுடன், குடும்பத்தினருடன் இந்தப் படத்தைப் பார்க்கலாம். இம்மாதிரியான முயற்சிகளுக்கு ரசிகர்களும், தியேட்டர்காரர்களும் ஆதரவு தர வேண்டும்.